தொடர்கள்
விளையாட்டு
விம்பிள்டன் டென்னிஸ் இளம் புயல்!-மாலாஸ்ரீ

2023062119350060.jpg

சர்வதேச அளவில் கோடிக்கணக்காண ரசிகர்களை கொண்ட விளையாட்டுகளில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும் ஒன்று. இதில், கடந்த 20 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடாவிட்டாலும், அனைவராலும் அறியப்பட்ட 2 பெயர்கள் - ரோஜர் பெடரர், ரஃபேல் நடால். இந்த 2 ஜாம்பவான்களும் டென்னிஸ் உலகை ஆண்டு கொண்டிருக்க, யாருமே எதிர்பாராதவிதமாக, டென்னிஸ் உலகில் யாருமே அறியாத செர்பியா நாட்டில் இருந்து, உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரே ஒரு நட்சத்திரம் - நோவக் ஜோகோவிச்!

இவர் அறிமுகமானபோது, சமகால ஜாம்பவன்களான பெடரர் மற்றும் நடாலையே வீழ்த்தி ஓரம்கட்டி, 'நான்தான் நம்பர் ஒன்' என தனக்கான வரலாற்றை செதுக்கி, தற்போது விம்பிள்டன் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக ஜோகோவிச் திகழ்ந்து வந்துள்ளார். இவர், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் என்றாலே இறுதிப்போட்டிக்கு நிச்சயம் வந்துவிடுவார். எதிராளிகள் யாராக இருந்தாலும் அடித்து துவம்சம் செய்து, கோப்பையை தனதாக்குவார். இதனால் 'இதற்கு ஏன் போட்டியைத் பார்க்க வேண்டும்?' என ரசிகர்களும் அங்கலாய்ப்பர். ஏனெனில், அவர் சமீப ஆண்டுகளில் செலுத்திய ஆதிக்கம் அத்தகையது!

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், உலகின் மிகச் சிறந்த ஆட்டக்காரரான நோவக் ஜோகோவிச்சை, ஸ்பெயின் நாட்டின் 20 வயதான கார்லோஸ் அல்காரஸ் எதிர்கொண்டார். 'எப்படியும் ஜோகோவிச் வெற்றி உறுதி' என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் களத்தில் இறக்கியிருந்த ஜோகோவிச்சை மட்டுமின்றி, மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களையே விழிபிதுங்க வைத்துவிட்டார் அல்காரஸ்!

ஜோகோவிச் மற்றும் அல்காரஸ் இடையே நடந்த கடும் போட்டியில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோகோவிச் பங்கேற்ற ஒரு இறுதிப் போட்டி - அவருக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக மாறியது! இதனால், போட்டியில் கடும் அனல் பறந்தது, இப்படி ஒரு போட்டியை டென்னிஸ் ரசிகர்கள் கண்டுகளித்து பல ஆண்டுகளாகி விட்டன என்பதே உண்மை. 20 வயதான அல்காரஸ், 36 வயதான ஜோகோவிச் இடையேயான இந்த விம்பிள்டன் இறுதிப்போட்டி யுத்தம், சுமார் 4 மணி நேரம் 43 நிமிடத்துக்கு நீடித்து, கடும் போராட்டத்துக்குப் பின் முடிவுக்கு வந்தது.

ஜோகோவிச்சின் தடுமாற்றம், நிலைதடுமாறி விழுந்தது, ஆக்ரோஷம், விதிகளை மீறியது. நடுவர்களின் எச்சரிக்கை, 26 நிமிடங்கள் நீடித்த 3வது செட் என பரபரப்புக்கு பஞ்சமே இன்றி, டென்னிஸ் வரலாற்றில் மறக்க முடியாததாக மாறியது. இப்போட்டியில் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில், ஜோகோவிச்சை வீழ்த்தி, தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார் அல்காரஸ். இது, அவர் வெல்லும் 2-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமும் ஆகும்!

ஆக்ரோஷத்தில் ஜோகோவிச் பொங்க, தான் நிகழ்த்திய அதிசயத்தை தன்னாலே நம்பமுடியாமல் களத்தில் சரிந்து ஆனந்த கண்ணீர் விட்டார் அல்காரஸ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறப்பான போட்டியை நிகழ்த்தி, தங்களுக்கு ஒரு மாபெரும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கிய டென்னிஸ் வீரர்களுக்காக, ரசிகர்கள் எழுப்பிய கரவொலியால் மைதானமே அதிர்ந்தது.

விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சென்டர் கோர்ட் களத்தில் நடைபெற்ற போட்டியில், கடந்த 10 ஆண்டுகளில் ஜோகோவிச் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். நடப்பாண்டில் ஆஸ்திரேலியா மற்றும் பிரெஞ்சு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்த ஜோகோவிச், ஹாட்ரிக் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இதன்மூலம் அதிக முறை விம்பிள்டன் தொடரை வென்ற ஃபெடரரின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பையும் ஜோகோவிச் இழந்தார்.

20230621193121689.jpg

கடைசியாக அவர் விளையாடிய 14 கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டியில், ஜோகோவிச் சந்திக்கும் 3-வது தோல்வி இதுவாகும். முன்னதாக இவர் 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மெத்வடேவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற பிறகு, தற்போதுதான் அவர் இறுதிப் போட்டியில் தோல்வியையே சந்தித்துள்ளார்.

கடந்த 4 விம்பிள்டன் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்று வந்த ஜோகோவிச், தொடர்ந்து 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். 35 முறை கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர், ஆடவர் பிரிவில் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என ஜோகோவிச்சின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதுகுறித்து ஜோகோவிச் கூறுகையில், "கார்லஸ் அல்காரஸ் போன்ற ஒரு வீரருக்கு எதிராக நான் இதுவரை விளையாடியதே இல்லை! அவருக்கு எதிரான தோல்வியை என்னால் ஏற்கமுடியவில்லை, ஆனாலும் முன்னேறி சென்றுதான் ஆகவேண்டும்!" என்று தெரிவித்தார். டென்னிஸ் உலகின் ஜாம்பவான்களான பெடரர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார், நடாலும் அடுத்த ஆண்டு இறுதியில் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், 36 வயதான ஜோகோவிச்சும் நீண்ட காலத்துக்கு ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

20230621193613197.jpg

மேலும், 'அடுத்த தலைமுறை டென்னிஸ் பாதுகாப்பானதாக தான் உள்ளது' என்பதையும் உணர்த்தியது அல்காரஸின் ஆட்டம்!