தொடர்கள்
கவர் ஸ்டோரி
கைலாஷ் புனித பயணம் ! சிவனின் காலடியில் ஒரு ஆன்மீக அனுபவம் ! - முதல் வாரம். - ராம்

2023061422292447.jpeg

பிறவாமை வேண்டும் மீண்டும்

பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும்

வேண்டும்நான் மகிழ்ந்து பாடி

அறவாநீ ஆடும் போதுன்

அடியின்கீழ் இருக்க என்றார்

(ஹாங்காங் வானொலிக்காக பாடியவர் ரூபா சாஸ்திரி)

கைலாஷ் பயணம் என்பது எப்படி தலைக்குள் சென்றது என்று நினைவில்லை. ஆனால் ஒரு வார இறுதி மலைப் பயணத்தில் நண்பர் பேராசிரியர் தான் துவங்கினார் என்று நினைவு. அதற்கு தூண்டுகோலாக இருந்தது ஹாங்காங் வானொலி நிகழ்ச்சி ஒன்று.

Lets talk in Tamil என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரிய புராணக் கதைகளை மையமாகக் கொண்டு ஒரு வானொலி நிகழ்ச்சி தயாரித்தோம். அதன் ஒரு வார நிகழ்ச்சியாக கைலாய பயணத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் சிவனடியார் விஜயகுமார்.

அவர் கைலயா மலை பயணத்தைப் பற்றி சொல்லச் சொல்ல விரிந்த அந்த ஆர்வம் தான் பேராசிரியரை தூண்டியிருக்கக் கூடும். அந்த முழுமையான ஒலிப்பதிவு தேடிப் பார்த்ததில் கிடைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன முத்தாய்ப்பான வார்த்தைகள் பலித்தது.

எனக்கு அந்த நீண்ட விடுமுறை தான் உறுத்தியது. 15 நாட்கள் எப்படி லீவு போடுவது எப்படி செல்வது ?? இப்படி யோசிக்கையில் கோவிட் வருடங்கள் உலகை சூழ்ந்தன.

சென்ற வருடம் மீண்டும் கைலாய பயணம் பற்றிய பேச்சு வரும் போது என் மனைவியின் உடல் நிலை என்னை பயணிக்க அனுமதிக்கவில்லை. மேலும் கோவிட்டுக்கு பின் அப்போது தான் திபத் சுற்றுலா பயணிகளை வரவேற்க துவங்கியிருந்த நேரம்.

ஆக கூட்டிக் கழித்து இந்த வருடம் தான் சிவனின் கட்டளை வரச் சொல்லி. அவனன்றி ஓரணுவும் அசையாது எனும் போது இந்தப் பயணம் மட்டும் விதி விலக்கா ?.

கைலாஷை பொறுத்த வரை பலருக்கு இருக்கும் கேள்வி நம்மூர் கடவுள் எப்படி சீனாவில் ??? கொஞ்சம் வரலாறும்,, பூகோளமும் இங்கே பார்க்க வேண்டியது அவசியம்.

கைலாய மலைக்கு வழி… இந்திய வழியாக…..

20230614223625852.jpg

(புது தில்லி துவங்கி நேபாள்கஞ்ச் - சிமிகோட் - ஹில்சா - தாக்லாகோட் வழி) அல்லது காட்மாண்டு கீராங் வழியாக சாகா)

சீனா வழியாக…. இப்படி….செல்லலாம்.

20230614223922538.jpg

(லாசாவிலிருந்து துவங்கி ஷிகாட்சே, சாகா, வழியாக தார்ச்சன்)

கைலாஷ் மலை நமக்கு மட்டுமல்ல. இந்து மதம், புத்த மதம், சமண மதம், பொம்பா மதம் ஆகிய நான்கு மதத்தினருக்குப் புனிதத் தலம் இது.

பொம்பா மதம் திபெத்தின் ஆதி மதம். இவர்கள் கைலையை இடமாகச் சுற்றுகின்றனர். இந்துக்கள் வலம் வரும் போது அவர்கள் இடம் வருகின்றனர். மொத்தமாக சுற்றி வர வேண்டிய தூரம் 52 கி.மீ. ஆனால் இது நிஜத்தில் குறைகிறது. எப்படி என்று பின்னர் பார்க்கலாம்.

கைலாயம் சீனாவின் திபத் மாகாணத்தில் அமைந்துள்ளது. 1959-ஆம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்த பின்னர் வெளிநாட்டினர் யாரையும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்கவில்லை. 1981-இல் ஏற்பட்ட இந்தோ-சீன ஒப்பந்தத்தின்படி சீன அரசு இந்தியர்களை மீண்டும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்க ஆரம்பித்தது.

20230614224231203.jpg

கோவிட்டுக்கு பிறகு இன்னமும் இந்தியர்களுக்கு திறந்து விடவில்லை என்பது வருத்தமான உபரி தகவல்.

கைலாய மலை பயணம் சாதாரணமாக ஒரு குழுவாக செல்வது தான் வழக்கம். இந்தியாவிலிருந்து நாற்பது பேர் ஐம்பது பேர் கொண்ட குழுக்களாக பயண ஏஜெண்ட்கள் ஏற்பாடு செய்வார்கள்.

ஹாங்காங்கில் ஏது அத்தனை பேர் ?? இருந்தாலும் 10 பேர் கொண்ட குழு தயாரானது.

அடுத்த சில வாரங்கள் எங்களுடன் கைலாய பயணம் செய்ய வேண்டும் என்பதால் வாசகர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது.

20230614224525963.jpeg

(என்னுடன், கே.ஜி.எஸ், பேராசிரி ராஜன்,சங்கீதா, பார்த்தா, குமார், விமலா, ராஜி, சுதா, ரவி பின்னே எவரெஸ்ட் சிகரம்)

அதிலும் இரண்டு குழுக்களாக பிரிந்து இரயில் மார்க்கமாக ஆறு பேரும், விமானத்தில் நேரடியாக லாசா வந்து சேருகிறோம் என்று நான்கு பேருமாக பிரிந்து புறப்பட தயாரானோம்.

இந்த இடத்தில் மேலும் முக்கியமான மூன்று பேரை அறிமுகப்படுத்த வேண்டும்.

விஜயகுமார் மூலமாக நமக்கு அறிமுகமான பாஷு அதிகாரி. இவர் நேபாளத்தில் இருக்கிறார். இவருடைய நிறுவனம் தான் டச் கைலாஷ்.

20230614224715263.jpeg

(பாஷு அதிகாரி - டச் கைலாஷ் சுற்றுலா நிறுவனம்)

நேபாள சினிமா ஹீரோ மாதிரி இருக்கும் பாஷு அதிகாரி ஆரம்ப முதலே ரொம்ப கூலாக எங்களுடைய பயண ஏற்பாட்டை செய்து கொடுத்தவர். விஜயகுமாரின் அறிமுகத்தினால் கட்டணம் சம்பந்தமாக கூட கறாராக இல்லாமல் ஒரு பைசா முன்பணம் கூட என்னிடம் வாங்காமல் கடைசி வரை அனைத்து ஏற்பாடுகளையும் ஒரு சின்ன பிசகில்லாமல் செய்தவர். Touch Kailash நிறுவனம் மூலமாக ஏராள இந்தியர்களுக்கு கைலாஷ் தரிசனம் கிடைக்க வைத்தவர் பாஷு. இந்தியாவிலிருந்து வரும் யாத்ரீகர்களுக்கு நேபாள ஏஜெண்ட்கள் மூலம் மட்டுமே கைலாஷ் வர முடியுமாம். கட்டுரையின் முடிவில் இவர்களின் தொடர்பு குறித்த தகவல்களைப் பகிர்கிறேன்.

அவருடைய திபத் ஒருங்கிணைப்பாளர் பசாங். இவர் கைலாஷ் மலையை, அதாவது கோரா என்று சொல்கிறார்கள், (கைலாஷை சுற்றி வரும் பரிக்ரமா அல்லது பிரதக்‌ஷிணம் அது தான் கோரா) அதை சுமார் 40 தடவை செய்திருக்கிறாராம். அதிலேயே அவுட்டர் கோரா இன்னர் கோரா என்று இருக்கிறது. பின்னர் வருவோம்.

திபத்தைப் பற்றி விவரங்கள் விரல் நுனியில் இவருக்கு. நமக்குத் தேவையான படி சுற்றுலாவை அமைத்துத் தருவதில் உஸ்தாத். இந்த இடத்தில் திராபுக் என்ற இடத்தில் இரண்டு நாள் தங்கியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்த குமாருக்கு பிரத்யேக நன்றி சொல்ல வேண்டும். காரணம் பின்னர் தெரிய வரும்.

20230614234132795.jpeg

(பசாங் - லாசா சுற்றுலா பயண ஒருங்கிணைப்பாளர்)

பசாங் பாஷுவின் அறிமுகத்தால் ஏன் என்ன என்று கேட்காமலே எங்களுக்கு விமானப் பயணத்திற்கும், இரயில் டிக்கெட்டுக்கும் ஏராள உதவி செய்திருக்கிறார். அதிர்ந்து பேசாத மனிதர். ஒரு சுற்றுலா பயண நிறுவனத்திற்கு எப்படிப்பட்ட குணாதிசயங்கள் இருக்க வேண்டுமோ அதை சரியளவில் பெற்றிருப்பவர்.

அவருடைய டூர் கைடு. அதாவது எங்களுடன் 24 மணி நேரமும் பயணம் செய்து நம்முடன் கைலாய மலையை தரிசித்து வைக்க வரும் ஆள் தாஷி. தாஷி சுமார் 60 முறை கைலாய மலையை சுற்றி வந்திருக்கிறார்.

20230614225159308.jpeg

(தாஷி - திபத்திய இளைஞர். )

தாஷி எங்களுக்கு செய்த உதவி எத்தனை கைலாய பயணம் செய்தாலும் மறக்க முடியாதது. அதிலும் குறிப்பாக ஒரு ஆபத்தான சூழ்நிலையில் தாஷி சொன்ன விஷயமாகட்டும் அல்லது செய்த செயலாகட்டும் மெய்சிலிர்க்க வைக்கும். ஆனால் அங்கு செல்வதற்கு முன் அல்லது, இவர்களை சந்திக்கும் முன் முதலில் நாம் ஷின்னிங்கில் இரயில் ஏற வேண்டும்.

ஹாங்காங்கிலிருந்து ஷின்னிங் என்ற இடத்திற்கு விமானம். பின்னர் அங்கிருந்து இரயில் மூலமாக திபத் லாசாவுக்கு பயணம்.

நம்மூரில் பலர் இந்த இரயிலில் ஏறியிருக்க வாய்ப்பில்லை. அதனால் கொஞ்சம் நிதானமாக இந்த இரயிலையும் அறிமுகப்படுத்தி விடலாம்.

இந்த திபத் இரயிலில் ஒரு விசேஷம். அதாவது சீனாவின் பல ஊர்கலிலிருந்து புறப்படும் இரயில் சின்ஹாய் திபத் இரயில்வேயில் வந்து சேர்ந்து கொண்டு ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக உயரம் தொட்டு ஒரு கட்டத்தில் 5200 மீட்டர் வரை ஏறி பின்னர். லாசாவில் 4600 மீட்டருக்கு இறங்கி வந்து நிற்கிறது.

20230614225612794.jpg

(குவாங்சாவ் என்ற அருகாமை ஊரிலிருந்து லாசா 54 மணி நேரங்கள். )

20230614225703853.jpg

(ஷின்னிங் என்ற ஊரிலிருந்து 21 மணி நேரங்கள் தான். இதில் கோல்முட் என்ற இடத்திலிருந்து தான் உயரம் கும்மென்று தூக்கும்........)

நாமெல்லாம் கடல் மட்டத்திலிருக்கும் பிராணிகள். நமக்கு இத்தனை உசரம் ஆகாது. ஏனெனில் அங்கு பிராணவாயு கம்மியாம். சுமார் 70 லிருந்து கைலாஷ் தொடும் போது 55 சதவிகிதம் தான் இருக்குமாம்.

அதனால் என்ன என்று கேட்கலாம். கக்கா போயி விட்டு வந்தால் கூட ஏதோ நூறு மீட்டர் பந்தயத்தில் ஓடி விட்டு வந்தது போல் மூச்சு வாங்கும். அதான் பிரச்சினை.

ஆக உயரத்திற்கு நாம் பழக வேண்டுமெனில் இந்த இரயிலில் செல்வது தான் சாலச் சிறந்தது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

இது ஒரு காரணம். இரண்டாவது காரணம் கொள்ளை அழகான இயற்கை காட்சிகள் இரண்டு பக்கமும்.

சரி இரயில் பிடிக்கும் முன் இன்னொரு விஷயம்.

இந்த இரயிலை நம்மூர் போல அறுவது நாட்களுக்கு முன்னர் பதிவு செய்ய முடியாது. 18 நாட்களுக்கு முன்னர் தான் பதிவு செய்ய முடியும்.

அந்தக் கால ரஜினி படம் போல புக்கிங் திறந்த பத்து நிமிடத்திற்குள் அத்தனை சீட்டுக்களும் விற்று தீர்ந்து விடுகின்றன.

ரொம்ப நீட்டி முழக்காமல் சொன்னால் சீன இரயில்வேக்களில் முதல் ஸ்லீப்பர் வகுப்பு, இரண்டாம் ஸ்லீப்பர் வகுப்பு, உட்கார்ந்து கொண்டே போவது இப்படி பல வகுப்புக்கள். இது நீண்ட தூர இரயில்களில் இருக்கிறது.

ஷின்னிங் என்ற இடத்திலிருந்து லாசா செல்ல 21 மணி நேரங்கள் ஆகும்.

trip.com என்ற இணைய தளத்தில் முன்பே பதிவு செய்து கொள்ள வசதிகள் இருக்கிறது. அதை நம்பி முதல் வகுப்பு டிக்கெட் ஆறு பேருக்கு போட்டு விட்டேன். ஆனால் அது சரியாக அந்த நாளில் சொதப்பி கிடைக்கவில்லை.

வேறு வழியில்லாமல் இன்னொரு இரயிலில் இரவு இரண்டாம் வகுப்பும் கிடைத்து போட்டாகி விட்டது. ஆனால் இரண்டாம் வகுப்பு எப்படியிருக்கும் என்று படிக்கையில் புளியை கரைத்தது.

எல்லாம் சிவ மயம் என்று முடிவு செய்து விமானம் ஏறி விட்டோம்.

ஷின்னிங் போய் இறங்கும் போது இரவு பதினொறு மணி. பொத்தாம் பொதுவாக இந்த பயணத்தை எழுதாமல் கொஞ்சம் குறிப்புக்களுடனேயே எழுத விருப்பம்.

ஐயனின் தரிசனத்தை எங்களுடன் பயணம் செய்து கிடைக்கும் அனுபவத்தை உங்களுக்கு அப்படியே கடத்த விரும்பும் உத்தி தான்.

என்ன சொன்னேன், இரவு பதினொறு மணிக்கு இறங்கினோம்…பேராசிரியரின் பெட்டி மட்டும் வரவில்லை.

சிவனின் திருவிளையாடல் இல்லாத ஒரு பயணமா ??

அடியாருக்கு அடியாரையே அவன் சீண்டிப் பார்ப்பான். நாமெல்லாம் எம்மாத்திரம். அது அந்த இரண்டாம் வகுப்பு பெட்டி டிக்கெட் தான் கிடைத்ததிலும் அவனின் கைங்கர்யம் இருக்கிறது.

பேராசிரியருக்கு பெட்டி வரவில்லை என்று ஒரு பக்கம் கவலை என்றால், பாவம் சங்கீதாவை சமாளிப்பது அதை விட பெரிய சவாலாக இருந்தது. பெட்டி வராததற்கு காரணம் அவர் பெட்டியை பூட்டியிருந்தாராம் ஷாங்காயில் பெட்டியை செக்யூரிட்டி திறந்து பார்க்க வேண்டியிருந்ததால் அந்த விமானத்தில் பெட்டியை அனுப்ப முடியவில்லையாம்.

சங்கீ அதெப்பெடி திறந்து பாக்கணும். ஹாங்காங்கில் அனுமதித்த பெட்டி ஷாங்காயில் மட்டும் எதுக்கு திறக்கணும் என்று விமான நிலய ரன்வே முழுக்க, விடுதிக்கு செல்லும் ஹைவே முழுக்க, ஹாலிடே இன் மின் தூக்கி முழுக்க கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே வர பேராசிரி பாவம், பதில் சொல்லி முடியவில்லை அவரால்.

பெட்டி தொலைந்தால் நமக்கும் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன்.

இந்த பெட்டி பற்றி சொல்லும் போது கைலாஷ் பயணத்திற்கு செல்லும் ஆசாமிகள் ஏதோ வீட்டைக் காலி பண்ணிக் கொண்டு போவது போல் சாமான் எடுத்துச் செல்வதை தயவு செய்து தவிர்க்கவும்.

நாங்கள் ஆளுக்கு இரண்டு பெட்டியில், இன்ஸ்டன்ட் உப்புமா, ஊறுகாய், பலவிதமான பொடிகள், திண்பண்டங்கள், தேவையில்லாமல் ஏகப்பட்ட துணி மணிகள் இத்தனையும் பேக் செய்து கொண்டு பத்தும் பத்தாததற்கு தேப்லா என்ற சப்பாத்தி வேறு நூறு வாங்கிக் கொண்டு பெட்டிகள் பிதுங்க எடுத்துச் சென்றோம்.

20230614230300800.jpeg

(கடை போடும் அளவு பெட்டி எடுத்துச் சென்றது எங்கள் தவறு தான்)

அத்தனையும் விரயம். ஏனெனில் லாசாவில் இறங்கியதும் பசாங் குளிக்க கூட விடவில்லை. அது லாசா போனதும் பார்க்கலாம்.

இப்போதைக்கு ஷின்னிங்கை சுற்றுவோம்.

அடுத்த நாள் ஷின்ஹாய் ஏரிக்கு அழைத்து சென்றனர் உள்ளூர் டூர் ஆசாமிகள்.

ஷின்னிங்கில் லாசா இரயிலைப் பிடிப்பதற்கு முன் சின்னதாக ஏரியை சுற்றிப் பார்க்கலாம்.

இது 2200 மீட்டரில் உள்ள மிகப் பெரிய ஏரி. நூறு கிலோமீட்டர்கள் நீளம் எண்பது கிலோ மீட்டர் அகலமாம். அடேங்கப்பா…. சென்னை சுற்றளவுக்கு இருக்கும் போலயே என்று பிரம்மிப்பூட்டும் ஏரி.

அந்த ஏரியும் புனித ஏரிகளில் ஒன்றாம்.

எங்களுக்கு எப்படா மானசரோவர் ஏரியைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலும், அப்படியே கைலாஷின் அற்புதங்கள் எப்படி உணரப் போகிறோம் என்ற தவிப்பும் அதிகமாகியது. கைலாஷ் மலையில் டைம் டிராவல் போல நகங்கள் வேகமாக வளருமாம், கைலாஷ் மலையில் உச்சியில் இதுவரை யாரும் ஏறியதில்லையாம். ஒரே ஒரு முனிவர் மிலெர்ப்பா என்பவர் மட்டும் 11ம் நூற்றாண்டில் ஏறியிருக்கிறார் அவரது குகை கைலாஷ் மலையருகே இருக்கிறது. கைலாஷ் மலை உலகின் மையப் புள்ளி. இது தான் மேரு என்று சொல்லப்படுகிறது. நாசா கூட சிவன் முகம் தெரிகிறது என்று சொல்லியிருக்கிறது என்று அவ்வப்போது ஏரியை சுற்றிப் பார்க்கும் போது கூட கைலாஷ் பற்றியே பேச்சு.

ஷின்னிங் நகரை ஓரளவு முழு நாள் சுற்றிப் பார்த்து விட்டு பேராசிரியரின் பெட்டி வந்ததா என்ற டென்ஷனில் விடுதிக்கு விரைந்தோம்.

எங்கள் இரயில் எட்டு மணி நாற்பது நிமிடத்திற்கு. இரண்டாம் வகுப்பு.

முதல் வகுப்பு டிக்கெட்டுக்கு ஒரு உள்ளூர் ஏஜெண்ட்ப் (கேர்ரீ) மூலமாக திபத்திலிருந்து பசாங் முயற்சி செய்த வண்ணம் இருக்க இன்னமும் கன்ஃபர்ம் ஆகவில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆறு மணிக்கு ஒரு தொலைபேசி வந்தது.

முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறது. உடனடியாக பணம் அனுப்ப வேண்டும். அடுத்த கணம் பசாங் அனுப்பியாயிற்று.

ஏற்கனவே இருக்கும் டிக்கெட்டை கான்சல் செய்ய வேண்டுமே ? இரயில்வே நிலையத்திற்கு விரைந்து செல்லுங்கள் என்ற ஆணை. ஆனால் முதல் வகுப்பு சேர்ந்தாற் போல் கிடைக்க கியாரண்டி இல்லை என்றும் பீதியை கிளப்பினார்கள்.

சிவனின் திருவிளையாடல் மேலும் தொடர்ந்தது. விமான நிலையத்திலிருந்தும் போன். பெட்டி வந்து விட்டது. பெற்றுக் கொள்ளவும்.

முதல் வகுப்பு டிக்கெட் கிடைத்த இரயில் ஒன்பது மணி இருபது நிமிடம். அதிசயம். ஆறு பேருக்கும் ஒன்றாக ஒரே பெட்டியில் கிடைத்திருந்தது. ஆக எட்டு மணி வண்டியை கான்சல் செய்ய விரைந்தோம்.

அடுத்ததாக பேராசிரியுடன் விமான நிலையம் விரைந்தேன். மணி ஏழு. ஒரு மணி நேர சாலைப் பயணம்.

பெட்டியை பெற்றுக் கொண்டு இரண்டு மணி நேரத்திற்குள் இரயில் நிலையம் வர முடியுமா ???

சிவன் மேல் பாரத்தை போட்டு விட்டு, சங்கீதாவை பேராசிரியரிடம் அண்ட விடாமல் அவரை தள்ளிக் கொண்டு போனேன்.

விமான நிலையம் சென்று சேர்ந்த போது ஏழு மணி நாப்பது நிமிடம். பேராசிரி ஏறக்குறைய ஓட்டப் பந்தயம் போல சென்று பெட்டியை பிடிங்கிக் கொண்டு மீண்டும் டாக்சியில் வந்து ஏறினார்.

இரயில்வே நிலையத்திற்கு விரைந்தோம். எங்கள் ஆறு பேரில் சங்கீதாவையும் சேர்ந்து மற்ற நால்வரும் இரயில்வே நிலையம் சென்று விட்டனர். சீனாவின் ஒரு விஷயம். இரயில் புறப்படும் 15 நிமிடம் முன்னர் தான் பிளாட்ஃபாரத்திற்குள் செல்ல முடியும். ஏனெனில் ஏராளமான இரயில்கள் புறப்பட்ட வண்ணம் இருக்கும்.

போன் வந்தமேனிக்கு இருந்தது. எங்கு இருக்கிறீர்கள். இன்னும் எவ்வளவு தூரம் ???

விமான நிலயத்திலிருந்து இன்னமும் நாற்பது நிமிடங்கள் காட்டியது ஜி.பி.எஸ். அந்த சமயம் தானா ஏதோ சாலை விபத்து நடக்க வேண்டும்.... நெடுஞ்சாலை முழுக்க வண்டிகள் வரிசை கட்டி நின்றிருந்தன........

அந்த நிலையிலேயே சென்றிருந்தால் இரயிலைப் பிடிக்க வாய்ப்பேயில்லை.

சீன நெடுஞ்சாலைகளில் எமெர்ஜென்சி லேன் என்ற சமாச்சாரம் உண்டு. போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் மட்டுமே அதில் செல்லலாம்.

எங்கள் டாக்சி டிரைவரிடம் இரயில்வே டிக்கட்டை காட்டி எப்படியாவது இரயிலை பிடிக்க வேண்டும் என்று தொலைபேசி டிரான்ஸ்லேஷன் செயலியில் சொன்னதும்... போலீஸ் அது இது என்று எதையும் யோசிக்காமல் வண்டியை சர்ரென்று விட்டார் எமெர்ஜென்சி லேனில்...........ஒரு வேளை போலீஸ் பிடித்திருந்தால் அவருக்கு பெரும் அபராதம் போட்டிருப்பார்கள். அந்த டாக்சி டிரைவர் அதைப் பற்றி கவலையேபடவில்லை.

எங்கள் இரயில் கிளம்ப இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன........

பொறுங்கள். என்ன அவசரம். ???

அடுத்த வாரம் இரயிலைப் பிடிப்போம்.

(அந்த இரயில் பயணத்தில் இரண்டு புறமும் விரியும் இயற்கை காட்சி விண்ணுலகில் மட்டுமே காணக் கிடைக்கும், இயற்கை பேரானந்தம். ஏராள வீடியோக்களோடு .......)

(பயணம் தொடரும்)

இரண்டாவது வார தொடர்ச்சி இங்கே.....