தொடர்கள்
கல்வி
தங்க மங்கை ஐஸ்வர்யா- மரியா சிவானந்தம்

20230613203121201.jpg

கல்வி, விளையாட்டு, அறிவியல், அரசியல் என்று எல்லா துறைகளிலும் புகுந்து பெண்கள் சாதிப்பது இப்போது சாதாரண செய்தியாகி விட்டது.

"ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண்” " என்று தினம் ஒரு செய்தியைப் படிக்கிறோம். ஆமாமாம், ஆண் என்ன? பெண் என்ன விடா முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் யாராக இருந்தாலும், எந்த சிகரத்தையும் தொட்டு விடலாம் என்பதே இன்று பொதுக் கருத்தாகி விட்டது . ஆயினும், சில பெண்களின் வெற்றிகளைக் காலம் பதிவு செய்து, வரலாற்றில் பொறித்து வைக்கிறது .

அப்படி ஒரு சாதனையை நாகப்பட்டினம், நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சார்ந்த ஐஸ்வர்யா நிகழ்த்தி இருக்கிறார் . நாம் அதிகம் கேள்விப்படாத "மீன்வளம்' சார்ந்த B.F.Sc (Bachelor of Fisheries Science) படிப்பில் பல்கலைக்கழகத்தில் முதல்வராக வந்தது மட்டுமின்றி 14 தங்கப் பதக்கங்களையும் ஒருவராக வென்று இருக்கிறார். இந்த அபார சாதனைக்குப் பின் இருக்கும் ஐஸ்வர்யாவின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது .ஒன்றல்ல, இரண்டல்ல, பதினான்கு பதக்கங்கள் ஒருவரே பெற்று இருப்பது ஒரு மைல் கல் .

20230613203324985.jpg

சென்னையில் நடை பெற்ற டாக்டர் .ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்த தங்கப் பதக்கங்களை ஆளுநர் ஐஸ்வர்யாவுக்கு வழங்கினார் .மென்மேலும் பாராட்டுக்கள் ஐஸ்வர்யாவுக்கு குவிந்துக் கொண்டு இருக்கிறது. நம்பியார் நகர் மட்டும் அல்ல, நாகையே பெருமையில் மிதக்கிறது. நாகை மட்டும் அல்ல, பெண் பிள்ளைகளைப் பெற்ற வயிறுகள் பெருமை கொண்டு பூரிக்கின்றன . .

20230613203448237.jpg

.உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்திய அளவில் மீன் உற்பத்தியில் தமிழ்நாடு 7ஆவது இடம் வகிக்கிறது. சுய தொழிலுக்கு வித்திடுவது மட்டும் அன்றி நம் நாட்டில் மீன்வளத்துறையில் வேலை வாய்ய்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க அசாத்திய நம்பிக்கை வேண்டும் .இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாய் விளங்கும் ஐஸவர்யாவை, விகடகவிக்காக நேர்க்காணல் செய்தோம்

இனி தங்க மங்கையுடன் ...

"வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா, உங்களைப் பற்றி சொல்லுங்கள் "

" என் அப்பா பெயர் ஜெயபால் , அம்மா சுபா, அக்கா அபிநயா , அப்பா மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். என் அக்கா M.Sc (Life Sciences) படிக்கிறார். நான் ஐந்தாம் வகுப்பு வரை நாகை லிட்டில் பிளவர் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் மேனிலை வரை அரசு உதவி பெறும் நடராஜன் ,தமயந்தி மேனிலைப் பள்ளியிலும் படித்தேன். இப்போது தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இளங்கலை பட்டப் படிப்பு முடித்துள்ளேன்"

20230613203539841.jpg

" மிகப் பெரிய வெற்றியைச் சாதித்து இருக்கிறீர்கள் , முதலில் இருந்தே நன்றாக படிப்பீர்களா , ?"

பத்தாம் வகுப்பில் 495/500 , +2 வில் 1150/1200 எடுத்துள்ளேன் .படிப்பில் சிறுவயதில் இருந்தே ஆர்வமாக இருந்தேன். என் வீட்டிலும், பள்ளிகளிலும் என்னை ஊக்குவித்துக் கொண்டு இருந்தனர் .

" +2 வில் நல்ல மதிப்பெண் இருக்கிறதே , ஏன் டாக்டர் ,என்ஜினியர் என்று சேரவில்லை? எப்படி மீன்வளத்துறை சார்ந்த ப்டிப்பைத் தேர்ந்து எடுத்தீர்கள் ?”

"நீட் எழுதினேன்.ஆனால் மருத்துவம் கிடைக்கவில்லை. பொறியியல், வேளாண்மை எல்லாமே கிடைத்தது .என் அப்பா அடிக்கடி லைப்ரரி சென்று செய்தித்தாள், புத்தகங்கள் படிக்கும் வழக்கம் கொண்டு இருந்தார் .அவர்தான் 'மீன்வளம் ' சார்ந்த படிப்பு இருக்கிறது .அதைத் தேர்ந்தெடுக்க சொன்னார்.

எனது +2 மார்க் அடிப்படையில் கல்லூரியில் அட்மிசன் கிடைத்தது . நுழைவுத் தேர்வு என்று எதுவும் இல்லை. கவுன்சிலிங் மட்டும் இருந்தது . மீனவர் நல வாரியத்தின் உபகார சம்பளம் கிடைத்தது. என் மீனவ சமுதாயம் சார்ந்த படிப்பென்பதால் ஈடுபாட்டுடன் படித்தேன். இத்துறையில் சாதிக்கவும் ,சேவை செய்யவும் வாய்ப்பு இருப்பதாக நம்பினேன். கல்லூரியில் மிக ஆழமாக கற்பித்தனர். பேராசிரியர்கள் பெரிதும் ஊக்கம் தந்தனர் .எனக்கும் இந்த துறையில் P.hd செய்து பேராசிரியர் ஆக வேண்டும் என்பதே விருப்பம் .

"இது எத்தனை ஆண்டு படிப்பு? இரவு பகலாக படித்திருப்பீர்கள் இல்லையா ?

"இளங்கலை நான்காண்டு படிப்பு, செமஸ்டர் முறை தேர்வு மற்றும் இன்டர்னல் மார்க் உண்டு , இரவெல்லாம் பிடித்தது இல்லை. .வகுப்பில் மிக கவனமாக இருப்பேன். வகுப்பின் போது நோட்ஸ் எடுத்துக் கொள்வேன் . தினமும் அந்த பாடங்களை படித்து விடுவேன். தனியாக கூடுதல் நோட்ஸ் தயாரித்தும் படிப்பேன். படிப்பு தவிர ஸ்போர்ட்ஸில் ஆர்வம் உண்டு, பேஸ்கட் பால் விளையாடுவேன்"

"மிக்க மகிழ்ச்சி, நம் மாணவர்களுக்கு சில வார்த்தைகள் சொல்லுங்களேன்"

"படிப்பதை ஆர்வமுடன் படிக்க வேண்டும். அந்த ஆர்வமே உங்கள் வெற்றிக்கான வழிகளைக் கற்றுக் கொடுக்கும்" என்று முடித்துக் கொண்டார் .

மீண்டும் அவரை வாழ்த்தி, விடை பெற்றுக் கொண்டோம் .

மீன்வளத்துறை படிப்புக்கு பல நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மீன்வளத்துறையில் ஆய்வாளர், வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட பணிகளில் சேர முடியும். தவிர வங்கிகளில் வேளாண் கடன் பிரிவு, இன்சூரன்ஸ் பிரிவுகளிலும் வேலைவாய்ப்பு இருக்கிறது. கல்லூரிகளில் பேராசிரியர், ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப வல்லுநராக பணியில் சேரலாம்.

அதிகம் பிரபலமாகாத இப்படிப்பை ஐஸ்வர்யா படித்து, தங்கங்களை வென்று மாணவர்களின் கவனத்தை, மீன்வளப் படிப்பை நோக்கி திருப்பி இருக்கிறார் . கடல் போல் அகன்ற வாய்ப்புகள் நம் நாட்டில் மீன்வளக் கல்விக்கு காத்திருக்கிறது. மாணவர்கள் இப்படிப்பை தயங்காமல் தேர்ந்தெடுத்து வெற்றி பெற வேண்டும் .