தொடர்கள்
வரலாறு
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 3. - ஒரு மறுக்கமுடியாத அவதாரம்

20230110221232601.jpg

இந்திய சுதந்திரப் போரில் சுபாஷ் சந்திர போஸ்

வழக்குரைஞரான சி. ஆர். தாஸ், தன் தொழிலை விட்டுவிட்டு, ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ், கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம், தான் தாய் நாடு திரும்பியதும், அவருடன் தன்னை இணைத்துக்கொண்டார்.

இக்காலகட்டத்தில் தான், தென்னாப்பிரிக்காவிலிருந்து, இந்தியா திரும்பியிருந்த மகாத்மா காந்தியும், இந்திய அரசியலில் ஈடுபட்டார். இந்திய மக்களும், காங்கிரசின் தலைமையின் கீழ் விடுதலை எழுச்சி பெற்றிருந்தனர். 1921 இல், மும்பை துறைமுகத்தில் வந்திறங்கிய சுபாஷ் சந்திரபோஸ், மும்பையில் அப்போது தங்கியிருந்த காந்தியையும் சந்தித்து, சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார். போஸ், சித்தரஞ்சன்தாசின் கீழ் தொண்டாற்றவே விரும்பினார்.

லண்டனில் கேம்பிரிட்சில் படிக்கும் போது, மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும், ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ், தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம், சொற்பொழிவு ஆற்றியதுடன், பாடமும் கற்பித்தார்.

அரசியல் நுழைவு

1922 இல், இந்திய பயணம் மேற்கொண்ட வேல்ஸ் இளவரசரை, சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த ஆங்கிலேய இளவரசரின் வருகையை, புறக்கணிக்கும் போராட்டத்தில் கொல்கத்தாவிலிருந்து போஸ் பங்கு கொண்டார். அதற்காக அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் ஜவஹர்லால் நேரு சிதரஞ்சன் தாஸ் போன்றோரும் கைதானார்கள். இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைதானதால், மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மேலும் தலைவர்கள் யாரும் இல்லாத போதும், கொல்கத்தாவில் மறியல் சிறப்பாக மக்களால் நடத்தப்பெற்றது. ஆறு மாதம் கழித்து போஸ், 1922 ஆம் ஆண்டு அக்டோபரில் விடுதலையானபோது, காந்தியும் ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம் ஆகியவற்றை விரிவுபடுத்தியிருந்தார்.

காங்கிரசில் பிளவு

இடையில் சில காரணங்களுக்காகப் போராட்டத்தை நிறுத்தியதால், காந்திக்கு எதிராக, பல கண்டனங்கள் எழுந்தன. 1922 ஆம் ஆண்டில் சிறையிலிருந்து வெளியான சித்தரஞ்சன் தாஸ், கயையில் கூடிய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை தாங்கினார். சட்டசபைத் தேர்தல்களில், இந்தியர்கள் போட்டியிட்டு, சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் தான் இந்திய விடுதலையை விரைவில் பெறமுடியும் என சி.ஆர்.தாசும், நேருவும் கருதினர். ஆனால், இதை காந்தி ஆதரவாளர்கள் எதிர்த்தனர். தாசுக்கும் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரசில் இருந்தபடி சுயாட்சிக் கட்சி என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். காந்திக்கு பதிலடி தர, "சுயராஜ்யா" என்னும் பத்திரிகையை ஆரம்பித்து, ஆசிரியர் பொறுப்பை போசிடம் ஒப்படைத்தார்.

ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய, ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ், காந்திக்கும் போசுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது.

1928 இல் கொல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கொல்கத்தா மாகாணத் தலைவரான போஸ் எழுந்து, காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போசின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து, காங்கிரசில் இருந்தபடி, 'விடுதலைச் சங்கம்' என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினர்.

ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் சிறந்த நண்பர்கள். ஆனால் இரு தலைவர்களும் கருத்து வேற்றுமை உடையவர்கள்.

நேரு நிதானமானவர். போஸ் சற்று வேக மானவர். தீவிர சோஷலிஸ்ட் கொள்கையைக் கடைபிடித்த போஸ், பொருளாதாரக் கொள் கையில் வலதுசாரிகளின் பக்கம் சாயும் காங்கிரஸ் தலைவர்களுடன் மிகக் கடுமையான கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். அகிம்சை,ஒத்துழையாமை பேசும் காந்தியக் கொள்கைகளை போஸ் நிராகரித்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான மிதவாதப் போராட்டத்தையும் அவர் நிராகரித்தார். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக போஸ் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருடைய புகழ் மேலோங்கியது.

இங்கு பின்னாளில் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ருத்ராங்ஸு முகர்ஜி ‘நேருவும் சுபாஷும் இணையான இரு வாழ்க்கை’ என்ற நூலில், 1939-ஆம் ஆண்டு சுபாஷ் கூறியதாக எழுதுகிறார்: எனக்கு நேருவைவிட அதிகம் தீங்கு செய்தவர் யாரும் இல்லை. ஆனால், தம்முடைய இந்திய தேசிய ராணுவத்தின் ஒரு பிரிவுக்கு நேருவின் பெயரை போஸ் ஏன் வைக்க வேண்டும்? என்ற முகர்ஜி மேலும் எழுதுகிறார்: சுபாஷின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நேரு ஏன் கண்ணீர் விட்டு அழுதார் எனக் கேட்டு, நான் அவரை என்னுடைய இளைய சகோதரர் போல நடத்தினேன் என்று நேரு குறிப்பிட்டதாக எழுதியிருக்கிறார். மகாத்மாகாந்தி நேருவைத் தம் வாரிசாகத் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இந்திய தேசிய ராணுவ வீரர்கள் கைது தொடர்பாக தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற வழக்கில் அவர்களுக்காக நேருதான் வாதாடினார் என்பது உண்மை.

காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால், காங்கிரசு காரியக் குழுவில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல், சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சீனிவாச ஐயரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், "காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது; அங்கு எங்களுக்கு வேலையில்லை" எனக் கட்சியிலிருந்து விலகி, சீனிவாச ஐயரைத் தலைவராகக் கொண்டு 'காங்கிரஸ் சனநாயக கட்சி'யைத் தொடங்கினார்.

20230110221323644.jpg

1939 இல் சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். போசின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், ஜவஹர்லால் நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். போஸ் 1,580 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். சீதாராமையாவின் தோல்வி, தனக்குப் பெரிய இழப்பு என்று வெளிப்படையாகவே காந்தி தெரிவித்து, உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த போஸ், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1939 இல் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார், அதன் அகில இந்திய தலைவராக நேதாஜியும், தமிழக தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உம் பதவியேற்று கொண்டனர்.

அடுத்த வாரம் அவரது அரசியல் பணி பற்றி படிக்கும் போது "சபாஷ் சுபாஷ்" என்று உரக்க குரல் உயர்த்தி கத்தவேண்டும் என்று தோன்றினால் தயவு செய்து தயங்காமல் குரல் எழுப்புங்கள். !!

அடுத்த வாரம்........