பாரத நாட்டில் பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்டத்தில் ராம்கர் கிராமத்தில் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றான அன்னை முண்டேஸ்வரி தேவி கோவில் சுமார் 608 அடி (185 மீ) உயரத்தில் முண்டேஸ்வரி மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இது சோன் நதியின் சங்கமத்தில், சுர்வுவாரா நதியுடன் இயற்கை அழகுடன் சூழப்பட்டுள்ளது. கீழிருந்து கோயிலுக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன.
1. கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுகளையும் பயன்படுத்தலாம்.
2. சாலை வழியாக கார், ஜீப் அல்லது பைக் மூலமாகவும் நேரடியாகக் கோயில் வாசலுக்குச் செல்லலாம். தற்போது பக்தர்களின் வசதிக்காக, ஓய்வு அறை, ரோப்வே போன்றவற்றை மாநில அரசு அமைத்து வருகிறது.
அன்னை பராசக்தி இந்த இடத்தில் கொடூரமான அசுர முண்டாவைப் போரில் வதம் செய்ததால் இந்த அம்மனுக்கு முண்டேஸ்வரி என்று பெயர் வந்தது. மேலும் இக்கோவில் கி.பி. 625 ஆம் ஆண்டு கட்டப்பட்டதென இந்தியத் தொல்பொருள் ஆய்வுமையம் அமைத்த தகவல்பலகை தெரிவிக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கி.பி.625 ஆம் ஆண்டுக் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இங்குக் காணப்படுகின்றன. இக்கோயிலில் விநாயகர், சூரியன், விஷ்ணு ஆகிய உருவ சிலைகள் உள்ளன.
இங்கு ஆடுகள் இரத்தம் சிந்தாமல் பலியிடப்படுகின்றன மற்றும் ஒரு நாளைக்கு மூன்று முறை நிறம் மாறும் ஐந்து முகங்களைக் கொண்ட பழங்கால சிவன் சிலை உள்ளது.
இங்கு அன்னை முண்டேஸ்வரி சிரித்த முகத்துடன் காட்சி அளிக்கின்றார், அவர் பக்தர்களின் பாவங்களை நீக்குவதோடு, அவர்களுக்கு மன அமைதியையும் தந்து அருள்பாலிக்கின்றார்.
ஸ்தல வரலாறு:
இந்த கோயிலில் பராசக்தியின் அற்புதங்கள் பல காணப்படுகின்றன, அதே நேரத்தில் பழமையான சிவலிங்கத்தின் மகிமையும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த கோவில் மார்க்கண்டேய புராணத்துடன் தொடர்புடையது.
புராண காலங்களில் சந்த் மற்றும் முண்டா என்ற இரண்டு அரக்கர்கள் இருந்தனர், அவர்களை வதம் செய்வதற்காகப் பராசக்தி பூமியில் அவதரித்தார். பராசக்தி இந்த அசுரர்களுடன் போரிட்டபோது, முதலில் சந்த் வதம் செய்யப்பட்டார், போரில் இருந்து தப்பி ஓடிய முண்டாவை அன்னை பராசக்தி இந்த மலையில் வதம் செய்ததால் இந்த அம்மனுக்கு முண்டேஸ்வரி என்று பெயர் வந்தது.
கல்வெட்டுகள்:
இக்கோயில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இது வரலாற்றுச் சிறப்பு மிக்கது எனத் தெரியவருகிறது. கோயில் தளத்தில் காணப்படும் கல்வெட்டுகளின் இருப்பு கிமு 625 க்கு முந்தைய இந்த கோயிலின் உண்மையான வயதைக் கண்டறிய உதவுகிறது. முண்டேஸ்வரி கோயில் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் தற்போது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய தளமாக அறிவிக்கும் இந்தியத் தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) பராமரிப்பின் கீழ் உள்ளது.
கோயிலில் வைக்கப்பட்டுள்ள சிலை எப்போது, எந்த மாதிரியான கல்லால் ஆனது, இவை அனைத்தும் கோயிலுக்குள் நுழைவாயிலில் ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் காணப்படும் சில கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் உள்ளன. இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் வட குப்தர் காலத்தைச் சேர்ந்தது என்பதை தெளிவாக அதில் எழுதப்பட்டுள்ளது.
கோயில் அமைப்பு:
இந்த மலை மேல் அன்னை முண்டேஸ்வரி கோவில் எண்கோண வடிவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு நான்கு நுழைவாயில்கள் உள்ளன, இதன் வடக்கு வாயில் தொல்லியல் துறையினரால் மூடப்பட்டு சிறிய சிலைகளுடன் விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது தெற்கு மற்றும் மேற்கு வாசல் மட்டும் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு வாயிலுக்கு அருகில் தானியங்களைச் சேமித்து வைப்பதற்காக ஒரு கல் பாத்திரம் உள்ளது. கிழக்கு வாயிலின் உள்ளே அன்னை பராசக்தி எருமை மீது வாராஹி வடிவில் சுமார் மூன்றரை அடி உயரத்தில் முண்டேஸ்வரியாக வீற்றிருக்கிறார். இந்த கோயிலில் பஞ்சமுக சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது, இது மிகவும் அரிதானது. மேற்கு வாயிலுக்கு வெளியே கிழக்கு நோக்கிய பெரிய நந்தி சிலை உள்ளது. இக்கோயிலில் விநாயகர், சூரியன் மற்றும் விஷ்ணு முதலான உருவசிலைகளும் உள்ளன.
பஞ்சமுக சிவலிங்கம்:
இக்கோயில் உள்ள பஞ்ச முக சிவலிங்கம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இந்த சிவலிங்கம் அன்னை முண்டேஸ்வரி கோயிலின் மையத்தில் உள்ள கருவறையில் நிறுவப்பட்டுள்ளது இந்தியாவில் இது போன்ற சிவலிங்கம் அரிதாகவே காணப்படுகிறது, இந்த பஞ்சமுக சிவலிங்கம் செய்யப்பட்ட கல், சூரியனின் நிலையுடன், காலை, மதியம் மற்றும் மாலையில் சிலையின் நிறம் மாறுகிறது. திங்கட்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து பஞ்ச முக சிவலிங்கத்திற்கு ஜலாபிஷேகம் செய்கின்றனர்.
இரத்தம் சிந்தாமல் ஆடு பலி :
பழங்காலத்திலிருந்தே இக்கோயிலில் ஆடு பலியிடும் வழக்கம் உள்ளது. இந்த ஆடு பலியிடும் முறை தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், வித்தியாசமாகவும் இருக்கின்றது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடனாக இந்த கோவிலுக்கு வந்து ஆடு பலி கொடுக்கிறார்கள். ஆனால் அதன் உயிர் பறிக்கப்படுவதில்லை, ஆடு பலியிடுவதற்காகக் கோயிலுக்குள் அன்னையின் முன் ஆட்டைக் கொண்டு வந்த பிறகு, கோயிலின் பூசாரி ஆட்டின் நான்கு கால்களையும் உறுதியாகப் பிடித்து, அன்னையின் பாதத்தைத் தொட்டு மந்திரம் ஜபிக்கிறார். பின்னர் ஆடு மீது பூஜிக்கப்பட்ட அட்சதையை (அரிசி) தெளிக்கிறார்கள். அந்த அரிசி ஆட்டின் மீது விழுந்தவுடன், ஆடு மயக்கமடைந்து விடுகிறது. ஆடு சிறிது நேரம் சுயநினைவின்றி உடலில் எந்தவித அசைவும் இல்லாமல் ஆடு இறந்தது போல் ஆகிறது. பூசாரி சில மந்திரங்களைச் சொல்லிவிட்டு, மீண்டும் அன்னையின் காலடியில் கிடந்த பூவை ஆட்டின் மீது வீசும்போது, ஆடு தூக்கத்திலிருந்து எழுந்தது போல் எழுந்திருக்கிறது. இதன் மூலம் பலி ஏற்கப்படுகிறது. இந்த முறையில் தான் ஆடு பலியிடும் வழக்கம் இங்கு உள்ளது. இந்த கோவிலில் தினமும் நடக்கும் இந்த அதிசயத்தைப் பக்தர்கள் கண்டு வியந்து போகின்றனர். இதனை அன்னையின் அற்புதமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்
திருவிழாக்கள்:
ஶ்ரீஇராம நவமி, மகா சிவராத்திரி மற்றும் நவராத்திரி திருவிழாக்கள் முண்டேஸ்வரி கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது, ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி மற்றும் சிவராத்திரியின் போது, அன்னை முண்டேஸ்வரியின் அருளைப் பெறுவதற்காக, இந்த கோவிலுக்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
கோயில் திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் திறந்திருக்கும்
பிரார்த்தனை:
பக்தர்கள் பாவங்களை நீங்குவதற்கும், தேவையற்ற பதட்டங்களிலிருந்தும் விடுபடுவதற்கும், மன அமைதி வேண்டியும் பிரார்த்தனை செய்கின்றனர்
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஆடு பலி கொடுக்கின்றனர். நவராத்திரியின் போது நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற இங்கு யாகங்கள் நடத்தப்படுகின்றன.
கோயிலுக்குப் போவது எப்படி:
இந்தக் கோயிலுக்குச் செல்ல, பாட்னா, கயா மற்றும் வாரணாசியிலிருந்து சாலை வழியாகச் செல்லலாம். இங்கிருந்து அருகிலுள்ள இரயில் நிலையத்திற்கு 22 கிமீ தொலைவில் உள்ள பாபுவா சாலை (மொஹானியா) ஆகும். இந்த ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு பஸ்ஸில் செல்லலாம். பாட்னாவிலிருந்து முண்டேஸ்வரி தேவி கோயிலுக்கு 217 கிமீ தூரம் உள்ளது.
விமானம் மூலம்: அருகிலுள்ள விமான நிலையம் வாரணாசி கைமூரில் இருந்து வாரணாசி 100 கிமீ தொலைவில் உள்ளது
இரயில் மூலம்: மாவட்டத்தில் உள்ள ஒரே பெரிய ரயில்வே சந்திப்பு மொஹானியா ஆகும். முகல்சராய் பகுதியில் அமைந்துள்ள ஹவுரா-புது டெல்லி கிராண்ட் கார்டில் உள்ள இந்த நிலையம் பொதுவாக பாபுவா சாலை என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான இரயில்கள் நகரத்தைக் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றன.
சாலை வழியாக: கைமூர் பாட்னாவிலிருந்து 200 கிமீ தொலைவிலும் வாரணாசியிலிருந்து 100 கிமீ தொலைவிலும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 30 கைமூரை தலைநகர் பாட்னாவுடன் அர்ரா வழியாக இணைக்கிறது. இது தவிர, நகரத்தில் சில மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளன.
முகவரி:
அருள்மிகு அன்னை முண்டேஸ்வரி தேவி கோயில், முண்டேஸ்வரி தாம் சாலை
கைமூர், பவுன்ரா
பீகார் 821103, இந்தியா
மன அமைதி தரும் அன்னை முண்டேஸ்வரி தேவியை வழிபட்டு அருள் பெறுவோம்!!
https://youtu.be/o1YmoKzlJxo
https://youtu.be/bgwsyhqRy64
https://youtu.be/mwVyv1olggA
Leave a comment
Upload