தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மிகம் தெரிந்து தெளிவோம் - 10 சுந்தரமைந்தன். திருப்பதியில் அன்றாடம் கோயில் நடப்பைத் தெரிந்து கொள்ளும் கொலுவு சீனிவாசர்-சுந்தரமைந்தன்


திருப்பதியில் அன்றாடம் கோயில் நடப்பைத் தெரிந்து கொள்ளும் கொலுவு சீனிவாசர்….

ஆன்மிகம் தெரிந்து தெளிவோம்


திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் போக சீனிவாசர், கொலுவு சீனிவாசர், சீனிவாசர். உக்கிர சீனிவாசர் என்ற நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். மூலவரின் திருவடியில் இருப்பவர் போக சீனிவாசர். இவருக்கே பள்ளியறை பூஜை நடத்தப்படுகிறது. தினமும் கோயில் நடப்பைப் பற்றிக் கேட்பவர் கொலுவு சீனிவாசர். கோவிலின் பங்காரு வாசல் என்னும் தங்க வாசலின் முன் இவர் இருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு திருவிழா காலத்தில் எழுந்தருள்பவர் சீனிவாசர். இவரையே "உற்சவர் சீனிவாசர்' என்பர். உக்கிர சீனிவாசர் கார்த்திகை ஏகாதசியன்று மட்டும் சூரிய உதயத்திற்குள் பவனி வருவது வழக்கம்.

2022062219173010.jpg

கோயில் நடப்பைத் தெரிந்து கொள்ளும் கொலுவு சீனிவாசர்:
மன்னர்கள் அரசாண்ட காலத்தில் மன்னர்கள் அரச சபைக்கு வந்ததும், அன்றைய நாட்டு நடப்பை தெரிந்துகொள்வார்கள் அதேபோல் திருப்பதி வெங்கடாஜலபதியும் அன்றாடம் கோயில் நடப்பைத் தெரிந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். இதனைக் கோவிலின் பங்காரு வாசல் என்னும் (தங்க வாசல்) முன் உள்ள கொலுவு சீனிவாசரிடம் தெரிவிப்பார்கள். இந்த கொலுவு சீனிவாசரை தரிசிப்பதற்குப் பக்தர்களை அனுமதிப்பதில்லை
கோவிலின் பங்காரு வாசலில் உள்ள ‘கொலுவு சீனிவாசர்’ கொலுவு மண்டபத்திற்கு நாள்தோறும் காலையில் எழுந்தருள்வார். வெள்ளிப் பல்லக்கில் வெள்ளிக்குடை பிடித்து வரும் இவருக்கு முதலில் அர்ச்சனை நடக்கும். அப்போது மூலவரே நேரில் வருவதாக ஐதீகம். இவருக்கு எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நிவேதனம் செய்யப்படும். ‘இன்று நாள் எப்படி?’ என்பதைத் தெரிவிக்கும் விதத்தில் இவரிடம் பஞ்சாங்கம் வாசிப்பர். நாள் (கிழமை), நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்ற ஐந்தும் இதில் இடம்பெற்றிருக்கும்.
இதனை நாமும் தெரிந்து கொள்வதால் ஐந்து விதமான நற்பலன்கள் உண்டாகும். நாள் (கிழமை) தீர்க்காயுள், நட்சத்திரத்தால் பாவ நிவர்த்தி, திதியால் லட்சுமி கடாட்சம்,
யோகத்தால் நோயற்ற வாழ்வு, கரணத்தால் காரியசித்தி ஆகியவை உண்டாகும்.
பின்னர், முந்தைய நாள் உண்டியல் வருமானம் பற்றிய விபரங்களை வாசிப்பார்கள். சீனிவாச பெருமாள் தனது கல்யாணச் செலவுக்காகக் குபேரனிடம் வாங்கிய கடனில் எவ்வளவு அடைபடுகிறது என்பதைப் பெருமாள் தெரிந்து கொள்வதற்காகவே கணக்கு வாசிக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

20220622191604598.jpg