தொடர்கள்
அனுபவம்
பள்ளிக்கூடம் சொல்லும் பாடம் 2 – ஆர்.ராஜேஷ் கன்னா

அது ஒரு கனாக்காலம்

20220623073037555.jpg

பள்ளி பயின்ற நாட்கள் ஒவ்வொரு மாணவ மாணவியின் நினைவில் எப்போதும் நீங்காத நாட்களாக நினைவில் ரீங்காரமிடும். அதுவும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் என்றால் அந்த விசாலமான பள்ளி வளாகத்தில் வானுயர்ந்த மரங்கள், விசாலமான விளையாட்டு மைதானம் , சாரணர் வகுப்பு, என்சிசி வகுப்பு , ஸ்போர்ட்ஸ் வகுப்பு என்று எப்போதும் பள்ளி நாட்கள் களை கட்டியே விழாக்கோலம் பூண்டு இருக்கும்.

1980 களில் தொடக்கத்தில் அரசு பள்ளிக்கு சென்ற போது முதல் நாள் முதல் வகுப்பில் ஆசிரியர் மரத்தடியில் தனது வகுப்பை தொடங்க ஆரம்பித்தார். கம்பீரமான ஆசிரியர். வெள்ளை வேட்டி சட்டையில் அமைதியான தோற்றத்துடன் ஆறாம் வகுப்பில் அரசு உயர்நிலை பள்ளியில் சேர்ந்திருக்கும் மாணவ மாணவிகளை வரவேற்கிறேன். நீங்கள் கடினமாக உழைத்து படித்தால் உங்கள் எதிர்காலம் மிக பிரகாசமாக இருக்கும் என்று அறிவுரை கூறி பாடங்கள் நடத்த தொடங்கினார்.

அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் தான் ஹீரோவாக வலம் வருவார்கள். பாடம் நடத்தும் போது செய்யுளை ராகத்துடன் பாடி எளிதான தமிழில் பாடங்களை புரிய வைப்பது ஆகட்டும், மாணவர்களுக்கு நீதிப்போதனைகளை எளிய நகைச்சுவையுடன் சொல்வதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது.

அப்போது ஆசிரியர் என்பவர் ஒவ்வொரு பள்ளி பயிலும் மாணவ மாணவிகளையும் தங்கள் பிள்ளைகள் போல் தான் பாவித்து நல்லொழக்கத்தினை முதன்மையாக சொல்லி தருவார்கள்.

காலாண்டு , அரையாண்டு பரீட்சை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வரும் போது தேர்வு தாள்களை தந்து இன்னும் எப்படி படித்தால் நிறைய மதிப்பெண்கள் பெறமுடியும் என்று சொல்வதோடு தாங்கள் பாடம் நடத்தும் விதத்தினை இன்னும் எளிமையாக மாணவர்களுக்கு சொல்லி தருவார்கள்.

அரசு பள்ளியில் கணித ஆசிரியரை பார்த்தாலே மாணவர்களுக்கு உதறல் எடுக்கும் . ஆசிரியர் கறும் பலகையில் போடும் கணக்கினை வேகமாக மாணவ மாணவியர் எழதிக் கொண்டு அதனை ஆசிரியர் இடம் பிழை திருத்தி கொள்ள வேண்டும் . கணித ஆசிரியர்கள் கணக்கினை வீட்டில் போட்டு பழகுங்கள் என்று அறிவுரை சொல்வது தனி அலாதியான விஷயமாக இருக்கும்.

அரசு பள்ளியில் விளையாட்டுகென்று நியமிக்கப்பட்டிருக்கும் பி.டி .மாஸ்டரை பார்தாலே சற்று உதறல் எடுக்கும் . காலையில் நடக்கும் பிராத்தனை கூட்டத்தில் பி.டி.மாஸ்டர் முதன்மையாக இருந்து நடத்துவார். அப்போது பள்ளியின் சிறந்த மாணவர் ஒருவரை தேர்ந்தேடுத்து அவர் பிராத்தனை கூட்டத்தில் இருக்கும் தலைமை ஆசிரியருக்கு சல்யூட் அடிப்பது என்பது மற்ற மாணவர்களுக்கு பெரும் இன்ஸ்பிரேஷன்.

20220622161840927.jpeg

அரசு பள்ளியில் இண்டர்வெல் பிரியட் 15 நிமிடம் இருக்கும் அந்த நேரத்தில் பள்ளியின் மெயின் கேட் அருகே விற்கும் தேன் மிட்டாய், கடலைமிட்டாய், அவித்த சுண்டல் என நண்பர்கள் பூடை சூழ வாங்கி (கடன் சொல்லி) சாப்பிட்டு விட்டு, மாணவர்கள் மகிழ்ந்த பொன்னான தருணம்.

பள்ளி பருவத்தில் ஆசிரியர்கள் மாணவர்களின் குருவாக இருந்து வழி நடத்தியதால் பல மாணவர்கள் வாழ்வின் உயர் பதவிக்கு சென்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . இதற்கு அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவர்களின் அறிவு திறன் இன்று வரை அபரிதமாக இருக்கும்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழ் தனியார் பள்ளியில் நம் பிள்ளைகளை சேர்த்த பின் மாணவர்களின் செயல்பாடுகள் என்பது பல பெற்றோர்கள் அடுத்து என்ன ஆகுமோ என்று வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டுள்ளனர்.

தற்போது மாணவர்கள் சிலர் ஆசிரியர்கள் நல்வழிப்படுத்தி திருத்தும் போது அவர்களை மிரட்டுவது ஆங்காங்கே சகஜமாகி விட்டது. மாணவர்கள் சிலர் தங்கள் தலைமுடியை வெட்டாமல் ஒன்-சைடு கட்டிங் போன்ற விகாரமான தலைமுடியுடன் பள்ளிக்கு முடி வெட்டிக்கொண்டு வருவது தற்போது சர்வசாதாரணமாகி விட்டது. இதனை தட்டி கேட்ட ஆசிரியர்கள் மீது சில மாணவர்களின் பெற்றோர்கள் சண்டைக்கு வருவதும் சகஜமாகி விட்டது.

சில பள்ளி மாணவர்கள் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தில் செய்யும் வீர தீர செயல் என்ற பெயரில் நடக்கும் அநியாயம் ரயிலில் பயணிக்கும் பிரயாணிகள் வயிற்றில் புளியை கரைக்கும்.

தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளியில் மட்டும் அடக்க ஒடுக்கமாக இருந்து விட்டு அவர்கள் வெளியே வந்த பின் பொதுமக்கள் மத்தியில் செய்யும் செயல்கள் அருவருக்க தக்க நிலையில் மாறிவிட்டது.

கரோனா காலத்திற்கு பின் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் விதம் பல பெற்றோர்கள் ஈரல் குலையை நடுங்க வைத்துள்ளது. பல பள்ளி மாணவர்கள் செல் போன் முலம் வீடியோகேம்ஸ்க்கு அடிமையாகி பள்ளி படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது தான் வேதனையான விஷயம் . பல பள்ளி மாணர்களுக்கு தமிழை கூட சரியாக படிக்க எழுத தெரியாமல் திணறுவது வேதனையின் உச்ச கட்டம் என்ற ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு ஏன் நல்லொழக்கம் , படிக்க சொல்லி ஊக்கபடுத்தும் போது அதனால் பெற்றோர்கள் தரப்பில் வந்து ஆசிரியருடன் சண்டையிடுவது அதிகரித்து வருவதால் தற்போது ஆசிரியர்கள் பலர் நமக்கு எதற்கு வம்பு என்று பள்ளி நேரத்தில் ஹாயாக தங்கள் பாடங்களை எடுத்து விட்டு நகர்ந்துவிடுகின்றனர். இதனால் மாணவ செல்வங்களின் எதிர்கால வாழ்க்கை தான் பாழாகி விடுகிறது என்று ஆசிரியர் ஒருவர் மன வருத்ததுடன் தெரிவித்தார்.

எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தை எப்படியாவது தனியார் பள்ளியில் படிக்க வைத்து டாக்டர் அல்லது என்ஞினியராக்க வேண்டும் என்ற கனவோடு வலம் வருவது தான் தற்காலிக ட்ரண்டாக உள்ளது. தன் பிள்ளை என்ன படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று அவர்களது கருத்தை கூட பல பெற்றோர்கள் கேட்கும் நிலையில் தற்போது இல்லை . அதன் தாக்கம் தான் எங்கு பார்த்தாலும் புற்றீசல் போல் முளைத்து விட்ட தனியார் பள்ளிகளும் அதன் விபரீதங்களும் தற்போது செய்தி தாள்களில் ப்ளாஷ் செய்தியாக வெளியாகி வேதனை ஏற்படுத்துகிறது.காலம் கெட்டு கிடக்கிறது என்று பழைய பொன்மொழியாக இருந்தாலும் அது தற்போது சில பள்ளி மாணவ-மாணவிகளின் நடத்தைக்கு பொருந்துவதாக இருக்கிறது.

என்ன செய்ய .,.ஆசிரியர்கள் தான் கடவுளுக்கு முன்னால் வணங்கப்படவேண்டியவர்கள்…இன்றோ எல்லாம் நேரெதிராக மாறிவிட்டது.சில மாணவர்களை பார்த்து ஆசிரியர் சமுதாயம் மிரண்டு போயுள்ளது தான் இன்றைக்கு வேதனையான விஷயமாகிவிட்டது. நமது பாழாய் போன அரசியலும் ஒரு காரணம் என்றே நினைக்க தோன்றுகிறது.