தொடர்கள்
கவர் ஸ்டோரி
பள்ளிக்கூடம் சொல்லும் பாடம் 1 - நமது நிருபர்

20220622174155196.jpg

கள்ளக்குறிச்சி மாவட்டம் ,சின்னசேலம் அடுத்த கனியாமுரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 2500 பேர் படிக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி இந்தப் பள்ளியில் தங்கி 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி. இவர் கடந்த 13ஆம் தேதி மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்து விட்டார் என்று பள்ளி தரப்பு தகவல். ஆனால் ஸ்ரீமதி பெற்றோர் இது தற்கொலை அல்ல கொலை எங்களுக்கு நியாயம் வேண்டும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்கிலிட்ட பிறகு தான் எங்கள் மகளின் உடலை நாங்கள் வாங்குவோம் என்று தொடர்ந்து சொல்லி வந்தார்கள். இது சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று போய் நீதிபதிகள் மாணவியின் உடலை பெற்றோர்கள் கண்டிப்பாக வாங்கி ஆக வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.

மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது கை ,கால்கள் உடைந்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். இருதயம் கல்லீரல் உட்பட ஐந்து உறுப்புகள் தடவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

முதலில் மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது பெற்றோர்களும் அவரது உறவினர்கள் மட்டுமே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். போலீஸ் ஆரம்பத்தில் அவர்களுடன் பேசிக் கொண்டு தான் இருந்தது. சிபிசிஐடி விசாரணை வேண்டும் என்றார்கள் . அது பற்றியும் ஏற்பாடு செய்வதாக தான் போலீஸ் முதலில் சொல்லியது பிறகு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இது போன்ற மரணம் சிபிசிஐடி மூலம் தான் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

முதல் நான்கு நாட்கள் போராட்டம் அமைதியாகத் தான் நடந்தது ஐந்தாவது நாள் திடீரென நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காவல் தடையை எல்லாம் மீறி பள்ளி வளாகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள். தடுக்க முற்பட்ட காவல்துறை மீதும் தாக்குதல் நடத்தினார்கள். டிஐஜி, எஸ்பி என்று கிட்டத்தட்ட 120 பேர் தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில் 40 பேர் உள்நோயாளியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் காவல்துறையின் நிலைமையே இதுதான்.

அந்த இடமே மொத்தத்தில் ரணகளம் ஆனது. பள்ளி பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டது, இருசக்கர வாகனம், கார் என்று வன்முறையாளர்கள் எதையும் விடவில்லை டிராக்டரை கொண்டு பேருந்துகளை சேதப்படுத்தினார்கள்.

பள்ளி அலுவலகத்தில் புகுந்து மாணவர்களின் சான்றிதழ்கள் எல்லாம் தீயிட்டுக் கொளுத்தினார்கள் .தற்போதைய போலீஸ் தகவல் படி பாக்கெட் சாராயத்தை கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் மீது வீசி எறிந்து அதன் மூலம் எரித்தார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இது தவிர வன்முறை கும்பல் அங்கிருந்த நாற்காலி, மேஜை, மின்விசிறி, ஏசி, மிசின் இப்படி கையில் சிக்கியது எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 500 மின்விசிறிகள் எதற்கும் பயனின்றி சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது. கடும் தீ காரணமாக கட்டிடங்கள் விரிசல் கொண்டுள்ளதால் அந்த கட்டிடங்களில் பாதுகாப்பு தற்சமயம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட பல ஆயிரம் பணம் கட்டி படிக்க வந்திருக்கும் 2500 மாணவர்களின் படிப்பு தொடருமா இல்லையா என்ற சந்தேகம் தற்போதைய கேள்விக்குறி.

போலீஸ் இவ்வளவு பேர் தாக்குதலுக்கு ஆளானது மிகவும் கொடூரம். கோட்டையிலிருந்து தடியடி துப்பாக்கிச்சூடு இதெல்லாம் கூடாது என்று காவல்துறைக்கு கைவிலங்கு போடப்பட்டது. இப்படி எங்கள் கைகளை கட்டிப் போட்டுவிட்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்கிறார்கள் காக்கி சட்டைகள். கோட்டை தரப்பு சொல்லும் காரணம் ரொம்பவும் அவர்கள் உஷாராக இருக்கிறார்கள் என்பது தான்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி எல்லாம் நாம் எதிர்க் கட்சியாக இருக்கும்போது நிறைய பேசியிருக்கிறோம் இப்போது நாம் துப்பாக்கி சூடுக்கு அனுமதித்தால் அப்போது பேசியது எல்லாம் எடுத்துச் சொல்லி நம்மைப் பங்க படுத்துவார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் காவல்துறை தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் அந்தப் 13 வன்முறையாளர்களை சுடாமல் விட்டிருந்தால் 250 அப்பாவிகள், இவர்களின் வன்முறைக்கு ஆளாகி இறந்து போயிருப்பார்கள் துப்பாக்கி சூடு சரிதான் என்று விளக்கம் சொல்கிறார்கள்.

இப்போது நிலைமை உச்சம் அடைந்ததற்கு காரணம் தலைமையின் குழப்பமான முடிவு தான் என்கிறார்கள். டிஜிபியும் உள்துறை செயலாளரும் வன்முறை நடந்த இடங்களை ஆய்வு செய்துவிட்டு தாக்குதலுக்கு ஆளான காவல்துறை அதிகாரிகளுக்கு ஆறுதல் சொல்ல வந்த போது அவர்களை வரவேற்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். காவல்துறைக்கு உரிய அனுமதி தராமல் இப்போது எஸ்பி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மீது பழிபோட்டு அவர்களை மாற்றி இருக்கிறார்கள். இவர்களை எப்படி நம்புவது என்று கேள்வி கேட்கிறார்கள் காக்கிசட்டைகாரர்கள்.

அதேசமயம் மாவட்ட அளவிலான சில துறை அதிகாரிகள் மீதும் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சிக்கப் படுகிறார்கள். குறிப்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரி சம்பவம் நடந்து 5 நாட்கள் எதுவும் பேசாமல் மௌன விரதம் இருக்கிறார். அந்தப் பள்ளியை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று கேட்கவில்லை. மாணவியின் பெற்றோரிடம் எதுவும் கேட்கவில்லை. விசாரணை அறிக்கை தாருங்கள் என்று விசாரணை என்று எதுவுமே செய்யாமல் செயல்படாத மாவட்டக் கல்வி அதிகாரியாக தான் அவர் இருந்தார். இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழ செய்கிறது. அவரிடம் இதுவரை ஏன் இப்படி செய்தீர்கள் என்று கல்வித்துறை கேட்கவில்லை.

இந்தப் பள்ளி மீதும் அடிக்கடி புகார்கள் கல்வித் துறைக்கும் காவல்துறைக்கும் ஏற்கனவே பலமுறை வந்து இருந்திருக்கிறது. ஏழு பேர் இதுவரை இறந்திருப்பதாக சொல்கிறார்கள். பள்ளி நிர்வாகம். இதில் மூன்று பேர் விபத்தின் காரணமாக இறந்து போனார்கள் என்று விளக்கம் சொல்கிறது.

29.12.2005 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பள்ளியில் மாணவர்கள் தங்கிப் படிக்க கட்டாயப்படுத்துகிறார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கிறார்கள் எனவே பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றெல்லாம் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஸ்ரீமதி மரணம் விவகாரத்தில் கூட நான்கு நாட்களாக போராட்டம் நடந்தது. இதற்கு யார் காரணம் போலீஸின் பங்களிப்பு என்ன என்ற கேள்வி எல்லாம் எழுகிறது. பொதுவாக இதுபோன்ற பிரச்சனையின் போது காவல்துறை வருவாய்துறை, கல்வித்துறை பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் பேசி பிரச்சனையை சுமூகமாக முடிப்பார்கள். ஸ்ரீமதி விஷயத்தில் அப்படி எதுவும் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரியவில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்திய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பின்னணி போன்றவற்றை உளவுத்துறை விசாரித்து சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

மாணவியின் மரணம் பற்றி ஒரு சில அரசியல் கட்சிகள் பள்ளி நிர்வாகத்திடம் நாங்கள் சுமூகமாக பிரச்சனையை முடித்து தருகிறோம் என்று பேரம் பேசி இருக்கிறார்கள். சனாதன தர்மத்தை கண்டித்து அடிக்கடி பேசும் ஒரு கட்சியின் பிரமுகர் ஒரு கோடி ரூபாய் வரை கேட்டிருக்கிறார். கடைசியில் 30 லட்சத்தில் பேரம் பணத்தை வாங்கிக்கொண்டு அவரும் தனது அடியாட்களை வன்முறை கும்பலுடன் கோத்துவிட்டு வேடிக்கை பார்த்தார். இதெல்லாம் உளவுத்துறைக்கு எப்படி தெரியாமல் போனது அல்லது கூட்டணி தர்மம் காரணமாக தெரிந்தும் தெரியாமல் இருந்து விட்டார்கள். ஆனால் மாவட்ட காவல்துறை எங்களை எதுவும் பேசாமல் கம்முனு இருடா என்று மேலிடம் சொல்லும் போது நாங்கள் என்ன செய்வது என்று கேட்கிறார்கள்.

எல்லாம் நடந்து முடிந்த பிறகு ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்ட பிறகு அமைச்சர்கள் ஏவா.வேலு அன்பில் மகேஷ், பொய்யாமொழி சி.வெகணேசன் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு மாணவியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். அதன்பிறகு நிருபர்களிடம் பேசும்போது அமைச்சர் ஏவா.வேலு "நியாயம் கேட்கிறோம் என்று மாணவர்களின் சான்றிதழை எல்லாம் கொளுத்தி இருக்கிறார்கள். இவர்கள் யாரும் மாணவர்கள் இல்லை. சமூக விரோதிகள் விஷமிகள் சில அமைப்புகள் என்ற பெயரில் இந்த அரசுக்கு கெட்ட பெயர் வாங்கித் தர முயற்சி செய்கிறார்கள். பயரிங் ஷூட்டிங் என்று எதுவும் செய்யாமல் மக்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் போலீஸ் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்ததற்கு நான் அவர்களை பாராட்டுகிறேன் என்று அவர் சொல்லிவிட்டு போன பிறகுதான் எஸ்பி ஆட்சித் தலைவர் உளவுத்துறை ஐஜி மாற்றப்பட்டனர்.

கலவரம் செய்தவர்கள் என்று மக்கள் அதிகாரம் பெரியார் திராவிட கழகம் அமைப்புகளை சேர்ந்த 300க்கும் அதிகமானவர்கள் காவல்துறை கைது செய்தது இந்த அமைப்புகள் பொதுவாக பாரதிய ஜனதாவின் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்யும் கூட்டம், திமுகவுக்கு ஆதரவாக குரல் தரும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

திமுக ஆதரவு எம்எல்ஏவான வேல்முருகன் இதுபோன்ற சம்பவங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே முதல்வர் நிவாரணம் வழங்குவார். ஆனால் ஸ்ரீமதி விவகாரத்தில் இதைப் பற்றி எந்த பேச்சும் இல்லை ஆளும் கட்சி ஆதரவு என்பதால் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்று ஆவேசப்படுகிறார் வேல்முருகன்.

இதேபோல் பக்கத்து மாவட்ட அமைச்சரான பொன்முடி அந்தப் பகுதி எம்பி ஆன அவரது மகன் இவர்களின் மௌனம் இன்னொரு ஆச்சர்யம்.

பள்ளி நிர்வாகி பாரதிய ஜனதாவில் மாவட்ட அளவில் ஒரு பொறுப்பில் இருக்கிறார். இதனால் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடத்த அனுமதி அளித்திருக்கிறார். அதேசமயம் வர்த்தகரீதியான பள்ளி என்பதால் பள்ளி நிர்வாகி சர்வ கட்சியுடன் சுமூகமாக தான் இருந்திருக்கிறார்.

கலவரத்துக்கு முக்கிய காரணம் வாட்ஸ்அப் தான் என்கிறது காவல்துறை. ஸ்ரீமதி என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழு அமைத்து கலவரத்தை தூண்டி விடுகிறார் போல் சினிமா வசனம் வீடியோ எல்லாவற்றையும் போட்டு கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். கலவரக்காரர்கள் இடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்பேசிகள் மூலம்தான் குற்றவாளிகளை அவர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. அடையாளம் காண முடிந்தது. சில புத்திசாலி குற்றவாளிகள் சம்பவத்தை நடத்திவிட்டு சாட்சியாக செல்பி எடுத்து இருக்கிறார்கள். அதுவே அவர்கள் குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரமாக அமைந்து விட்டது. இப்போது தலைமறைவாக இருக்கும் வன்முறையாளர்களை தேடிப்பிடிக்க இந்த செல்பி டெக்னிக்தான் பயன்படுகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களின் சிலர் சட்டம் படித்தவர்கள். கைது செய்யப்பட்ட இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகளின் படி பார்த்தால் குறைந்தது ஐந்தாண்டுகள் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும். தவிர நீதிமன்றமும் குற்றவாளிகள் யாரையும் விடக் கூடாது எல்லோரையும் கைது செய்து அறிக்கை தாருங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறது.

ஸ்ரீமதி பற்றி பள்ளி தரப்பு சொல்வது அந்தப் பெண் ஆறாம் வகுப்பு முதல் இந்தப் பள்ளியில் தான் படித்தாள். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது பெற்றோர் வேறு பள்ளியில் படிக்க மாற்று சான்றிதழ் வாங்கி செல்கிறார்கள். சில வாரங்களில் மீண்டும் வந்து ஸ்ரீமதியை இதே பள்ளியில் சேர்த்தார்கள். விடுதியிலும் தங்கிப் படிக்க சொன்னார்கள். எதற்கு வேறு பள்ளியில் சேர்க்க போனார்கள் மீண்டும் இங்கு வர காரணம் என்ன இதை ஸ்ரீ மதியின் பெற்றோர்கள்தான் விளக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் தற்கொலைக்கு இதுதான் ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிடுகிறது. ஆனால் பாட சம்பந்தமாக ஆசிரியர்கள் தந்த அழுத்தத்தால் தான் நான் தற்கொலை செய்து கொண்டேன் என்று ஸ்ரீமதி எழுதியதாக தற்கொலை குறிப்பை காவல்துறை வெளியிட்டது. ஸ்ரீமதியின் பெற்றோர்கள் அது எங்கள் மகள் கையெழுத்து அல்ல என்கிறார்கள் ஆனால் ஆசிரியர்கள் தந்த அழுத்தம் காரணமாக அந்த தற்கொலை குறிப்பை நம்பி காவல்துறை 2 ஆசிரியரை கைது செய்திருக்கிறது. பள்ளி நிர்வாகம் இது சம்பந்தமாக ஒரு சந்தேகத்தை கேட்கிறது. பள்ளி திறந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் பாட சம்பந்தமான அழுத்தம் எப்படி வரும் என்கிறார்கள். இதுவும் ஒரு நியாயமான கேள்விதான்.

இந்த ஒற்றை சம்பவம் பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை நம் கண்களை திறக்குமா ?? தனியார் பள்ளிக் கல்வி மோகம் போகுமா ?? அல்லது அரசுப் பள்ளிகள் தம் தரத்தை உயர்த்திக் கொண்டு விழிக்குமா ?? இந்தக் கலவரத்தை அடிப்படையாக வைத்தாவது கல்வித் தரம் உயர்த்தப்படுமா ?? என்ன பாடம் கொடுக்கிறது இந்த கொடூர சம்பவம் ???

இப்போதைக்கு ஸ்ரீமதியின் மரணம் மர்ம முடிச்சு தான் அந்த முடிச்சை அவிழ்க்கப் போவது யார் ?

பெற்றோர் ?! பள்ளி நிர்வாகம்?! காவல்துறை?!