தொடர்கள்
பொது
ஜிஎஸ்டி தாக்குதல்?!-தில்லைக்கரசிசம்பத்

20220622192558628.jpg

20220622165931692.jpg

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47 ஆவது கூட்டம் சண்டிகரில் இருநாட்கள் நடந்தது.

தமிழகத்தின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் சேர்த்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பேனா மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜிஎஸ்டி வரி 12ல் இருந்து 18 சதவீதமாக கூட்டப்பட்டுள்ளது.

20220622170117922.jpeg

அரிசி, பருப்பு தானிய வகைகள் கோதுமை மாவு உட்பட அனைத்து தானிய மாவு வகைகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், இறைச்சி என்று எதுவும் பாக்கி இல்லை. எல்லாவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி போட்டு விட்டார்கள். ஏழைகளின் தின்பண்டமான பொரியை கூட விட்டுவைக்கவில்லை என்பது மிகப் பெரிய கேவலம்.

பால் ,தயிர் ,மோர் வெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பேக் செய்யப்பட்டிருந்தால், அதற்கு 5% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பேக்கிங் செய்யப்பட்ட பால், தயிர், மோர், பன்னீர் போன்ற பல்வேறு பொருள்களுக்கு முன்பு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தயிர் பால் போன்ற திரவப்பொருட்களை எல்லாம் பாக்கெட்டுகளில் விற்காமல் வெள்ளி சொம்பிலா விற்பார்கள் ? ஏழை ஒரு வேளை சோற்றில் மோர் ஊற்றி சாப்பிட்டு வந்ததை, அதற்கும் வேட்டு வைத்து விட்டார்கள்.

கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவை எல்லாம் அரிசியின் விலையை கூட்டிவிடும். அதோடு செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதற்கும் 18%ஜிஎஸ்டி . சாப்பிடும் உணவிலிருந்து வெளியே செல்லும் கழிவு வரை வரி விதித்திருக்கிறார்கள். நடுவில் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் படுத்தால் அந்த படுக்கைக்கும் ஜிஎஸ்டி உயர்த்திவிட்டார்கள் . சுடுகாட்டில் பிணம் எரிப்பதற்கு மட்டும் தான் இன்னும் ஜிஎஸ்டி விதிக்கவில்லை. இதுவும் எத்தனை நாளுக்கு என்று தெரியாது ‌.

இதனிடையே உணவு மற்றும் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சமீபத்திய திருத்தத்திற்கு எதிராக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

லோக்சபாவில் எதிர்கட்சிகள் பால் பாக்கெட்டுகள், மோர், வெண்ணெய், தயிர் எல்லாவற்றையும் கைகளில் ஏந்திக் கொண்டு "கப்பார் சிங் திரும்பவும் தாக்குகிறார்" ("Gabbar Singh strikes again.") என்று எழுதப்பட்ட பதாகைகளை காண்பித்தபடி கலாட்டா செய்தார்கள்.

பிறகு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகே நின்று அங்கேயும் கோஷம் எழுப்பினர். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மட்டுமில்லாமல் திமுக, இடதுசாரி ,திரிணாமுல் காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்கட்சி எம்பிக்களும் பங்கு பெற்றார்கள்.

எதிர்கட்சிகளின் அமளிகளை கண்டித்த மத்திய அமைச்சர் கோயல் " ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காங்கிரஸ் ,திமுக மற்றும் அனைத்து எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று அனைத்து முடிவுகளுக்கும் ஒப்புதல் கொடுத்துவிட்டு பின் இங்கு வந்து ஏன் நாடகமாடுகிறீர்கள்?" என்கிறார்.

இது உண்மையே..ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எதிர்கட்சிகள் யாருமே கவுன்சிலின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதை செய்யாமல் எதிர்கட்சிகள் நேராக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரிய நாடகமாகவே அரகேற்றிவிடலாம் என்று தீர்மானித்து விட்டார்கள் . மத்தளத்துக்கு இருபுறமும் அடி என்பது போல ஒரு பக்கம் மத்திய அரசு சாமானியனின் சிரமங்களை கணக்கில் கொள்ளாமல் இஷ்டத்திற்கு வரிவிதிக்க, எதிர்கட்சிகள் எதிர்ப்பது போல நாடகமாடி கொண்டிருக்கின்றன. கடைசியில் நாட்டு மக்களின் கதி தான் அதோகதியாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் மதுரையில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார். ஆனால் அத்தியாவசிய பொருட்களுக்கு அநியாயமாக ஜிஎஸ்டி விதிக்க பட்டபோது அக்கூட்டத்தில் பங்கேற்ற நம் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ? மத்திய நிதியமைச்சர் நிர்மலாவும் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் இந்த ஜிஎஸ்டி விதிப்பிற்கு மறுப்பு சொல்லாமல் ஒரு மனதாக ஒத்துக்கொண்டதாக கூறுகிறார்.

20220622170157194.jpg

நன்றி: தினமணி

மத்திய அரசுக்கு நாங்கள் இளைத்தவர்களா? என்று தம் பங்குக்கு தமிழக அரசும் மின்சார கட்டணத்தையும் உயர்த்தி மக்களின் தலையில் இடியை போட்டிருககிறது. ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் இருமாதங்களுக்கொருமுறை மின்கட்டணம் செலுத்துவதை மாற்றி மாதம் மாதம் கட்டணம் செலுத்தும் முறை அமலாக்கப்படும் என்றார்கள். இதனால் மின்கட்டணம் பாதியாக குறையும். விரைவில் தமிழக அரசு இதை அமல் படுத்துவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் இன்று அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

கடைசியில் "உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா!" கதையாக கொடுத்த வாக்குறுதியை மறைத்து மின்கட்டணத்தையும் ஏற்றி விட்டார்கள். "ஏன்?" என்று கேட்டால் "இதோ ஆந்திராவை பாருங்கள்.. மஹாராஷ்டிராவை பாருங்கள்.. அதை விட இங்கே குறைவு!" என்கிறார்கள். பிறகு "இதற்கும் மத்திய அரசு தான் காரணம், தமிழக அரசுக்கு 28 முறை கடிதம் எழுதி நிதி அளிக்க மாட்டோம் என்று மிரட்டினார்கள்" என்கிறார்கள். மத்திய அரசு தான் நாள்தோறும் எதையாவது விலையேற்றிக்கொண்டே இருக்கிறார்களே! அவர்களை சமாளிக்க தான் உங்களை தேர்ந்தெடுத்தோமே.. நீங்களும் இப்படி செய்யலாமா? என தமிழக மக்கள் விசன படுகிறார்கள். குறைந்த பட்சம் மாதம் ஒரு முறை மின்கட்டணம் என்றாவது மாற்றலாம். மக்களின் சுமை கொஞ்சம் குறையும். இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவையில்லையே என்கிறார்கள் மக்கள்.

தற்போது ஆவின் நிறுவனம் புதிய ஜிஎஸ்டியின் அடிப்படையில் ஆவின் தயிர் 100 கிராமின் விலை 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும், 1 கிலோ ரூ.100-லிருந்து 120 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே போல, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.535-லிருந்து 580 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது

ஏழை, எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் உணவுப் பொருள்கள்மீதான வரிவிதிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று அதிமுக பொது செயலாளர் ஈபிஎஸ் கூட கூட்டணி தர்மம் பார்க்காமல் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் திமுக அரசுக்கு அப்படிப்பட்ட நெருக்கடி இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரியவில்லை.

நியாயமாக பார்த்தால் வரிவிதிப்புகள் போன்ற முக்கிய முடிவுகளை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனைத்து கட்சியினருடன் சேர்ந்து விவாதித்து பின்னர் தான் அமல் படுத்த வேண்டும். ஆனால் பாஜக அரசு இந்த முறையை பின்பற்றாமல் எப்பொழுதுமே தான்தோன்றித்தனமாக செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் தான் இப்படி என்றால் அனைத்து மாநில அரசுகளும் ஜிஎஸ்டி சம்பந்தமான ஒன்றிய அரசின் எந்த முடிவுகளுக்கும் மௌனம் காத்து மறைமுகமாக சம்மதம் தெரிவிப்பது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

கஷ்டப்படும் மக்கள்

"பெட்ரோல் டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வாருங்கள். சிலிண்டர் விலையை குறையுங்கள்" என்று கெஞ்சி கொண்டிருக்கும் நேரத்தில் அரிசி, தயிர், பால் என அத்தியாவசிய பொருட்களை கூட மனசாட்சியே இல்லாமல் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருகிறார்கள்.

ரஷ்யா மலிவு விலையில் தரும் கச்சா எண்ணெயை இந்திய அரசு வாங்கி அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல், ரிலையன்ஸ் எண்ணெய் நிறுவனத்திற்கும் தற்போது அளித்துக்கொண்டிருக்கிறது. அம்பானி ஏற்றுமதி செய்யும் பெட்ரோல் டீசலுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரிவிலக்கு சமீபத்தில் மத்திய அரசால் கொடுக்கப்பட்டது.

உலகின் பெருங் கோடீஸ்வரருக்கு மேலும் கோடிகள் குவிய அவர்களுக்கு வரிவிலக்கை கரிசனத்தோடு கொடுக்க தெரிந்த மத்திய அரசுக்கு அரிசி, தானியம், மாவு அத்தோடு குழந்தைகள் குடிக்கும் பால், தயிருக்கு கூட ஜிஎஸ்டி விதித்து விலையை கூட்டுகிறது.

ஏழைகள் வயிறு பற்றி எரிகிறது. மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசுகளும் அந்த எரிகிற வயிற்றில் மேலும் கொள்ளிகளை அடுக்குகிறார்கள்.

"வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு."

என்ற திருக்குறளின் படி

"தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் கொண்டு மிரட்டி நெடுவழிப் பயணிகளிடம் கொள்ளை அடிப்பதற்கு சமம்" என்று குறள் சொல்கிறது .

மத்திய அரசு போகுமிடமெல்லாம் திருக்குறளை புகழ்கிறது . மாநில அரசோ கன்யாகுமரியில் சிலை வைத்து மகிழ்கிறது . ஆனால் திருக்குறளின் படி உண்மையாக நடப்பதே அந்த திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கு செய்யும் மரியாதை என்று யாராவது தயவு செய்து ஆட்சியாளர்களுக்கு உரைத்தால் நல்லது.

ஆக. அரசு மக்கள் மீது ஜிஎஸ்டி தாக்குதல் நடத்திவிட்டு அமைதியாக இருக்கிறது!