உறைவிடப் பள்ளிகளின் அவலம்
தமிழ்நாட்டில் அந்த காலத்தில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள், குடும்பம் கோடிகளில் புரளும் தொழிலதிபர்கள், திரைஉலக ஜாம்பவான்கள், நடிகர் நடிகைகள் இவர்களின் குழந்தைகள் எல்லாம் ஊட்டி ,கொடைக்கானல் கான்வென்ட்டில் உறைவிடப் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்று பெருமையாக சொல்லப்படுவதுண்டு . சொன்னால் நம்ப மாட்டீர்கள்! ஊட்டி கார்டன் சாலையில் அமைந்திருக்கும் ஒரு தனியார் உறைவிடப் பள்ளியின் வருட கட்டணம் ஒரு ஆண்டுக்கு 7லட்சத்து இருபதாயிரம் ரூபாய். ஆம் நம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிதான்.1899 லிருந்து செயல்படும் இந்த பள்ளியை போல் பல பள்ளிகள் ஊட்டி கொடைக்கானலில் இன்றும் உண்டு.
1980 களில் சிறிது சிறிதாக காளான்களை போன்று முளைத்த உறைவிடப் பள்ளிகள் "மாணவர்களுக்கு நன்கு பயிற்சி கொடுத்து அதிக மதிப்பெண்கள் வாங்க வைத்து மாநிலத்திலேயே முதல் இடம் பிடிக்க வைப்போம். எங்கள் உறைவிடப் பள்ளியில் படித்த அத்தனை மாணவமாணவிகளும் மருத்துவ பொறியியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பார்கள்." என்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் விளம்பரப்படுத்த ஆரம்பித்தார்கள். படித்தால் மட்டுமே நமக்கு விமோசனம் என்று நம்புகிற நடுத்தர வர்க்கம் இதை நம்பி இந்த உறைவிடப்பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க எவ்வளவு லட்சங்கள் வேண்டுமானாலும் செலவழிக்க தயாராக, தமிழ்நாடு முழுவதும் கல்விவியாபாரிகளின் வியாபாரம் கொடிக்கட்டி பறக்க ஆரம்பித்தது.
இன்று தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கில், பெரும் நகரங்களில் மட்டுமில்லாது சிற்றூர்களில் கூட உறைவிடப் பள்ளிகள் இருக்கின்றன. அதில் ராசிபுரம் நாமக்கல் போன்ற பிரபலமானவை . வருடத்திற்கு 5 லட்சம் கல்வி கட்டணம் இருந்தால் கூட கடன் வாங்கி கட்ட தயாராக இருக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். ஆனால் அங்கே படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் அரசு மருத்துவ பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை.
நாமக்கல் கோழி பண்ணை, முட்டை பண்ணை போன்று வெறும் வியாபாரத்தலமாகி போன இந்த கல்விக்கூடங்கள் உண்மையிலேயே மாணவர்களுக்கு கல்வி அறிவை புகட்டுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை . பாடங்களை மனப்பாடம் செய்ய வைத்து அதை அப்படியே விடைத்தாள்களில் அச்சடிப்பதை போன்று எழுதுவதை மட்டுமே இந்த பள்ளிகள் சொல்லி தருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்நாட்டின் முதலிடம் பிடித்த மாணவி ஒருவர் எம்எம்சியில் எம்பிபிஎஸ் சேர்ந்தார். ஆனால் அவருக்கு மருத்துவபடிப்பு மிகவும் கடினமாக இருந்த காரணத்தால் படிப்பை முடிக்க முடியாமல் பாதியிலேயே விலகி ஊருக்கு சென்று கல்யாணம் செய்து செட்டிலாகி விட்டார். எல்லா பாடங்களிலும் 200க்கு 200 வாங்கிய மாணவியால் மருத்துவ படிப்பை பயில முடியவில்லை. அப்படியென்றால் தவறு யாரிடம் இருக்கிறது? இந்த கோழி பண்ணைகளில் படித்ததால் வரும் கோளாறா? நன்கு புரிந்து படிக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சாதாரண பள்ளியில் படித்தாலும் நன்றாக படித்து விடுவார்கள். இவர்களை போன்ற தானாகவே புரிந்து படிக்கும் அதிபுத்திசாலி மாணவர்கள் சிலரை கையில் வைத்துக் கொண்டு " நாங்கள் கொடுத்த பயிற்சியில் சிறந்து வந்த எங்கள் மாணவர்களை பாரீர்" என்று விளம்பரப்படுத்தி இந்த கல்வி வியாபாரிகள் கல்லா கட்டுகிறார்கள்.
உண்மையில் இம்மாதிரி உறைவிடப் பள்ளிகளில் என்ன நடக்கிறது? ஒரு நண்பர் தனது மகன் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று அவர் இது போன்ற ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார்.
காலையில் 4 மணிக்கு எழுந்து பச்சைத் தண்ணீரில் குளிக்க வேண்டும். வெளியே அடை மழை பொழிந்தாலும் சரி மார்கழி மாத குளிராக இருந்தாலும் சரி குளிக்க பச்சை தண்ணீர் தான். பின்பு ஒரு பெரிய ஹாலில் மற்ற மாணவர்களுடன் உட்கார்ந்து படிக்க வேண்டும். ஒரு ஆசிரியர் அங்கே இருப்பார். காலை 6 மணிக்கு பால் தருவார்கள்.மீண்டும் படிப்பு. பிறகு 7.30 க்கு காலை உணவு சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டும். மதிய உணவு அரைமணி நேரம். பிறகு மீண்டும் வகுப்பறை பாடம். மாலை4.30 க்கு பள்ளி நேரம் முடிய மீண்டும் ஹாஸ்டல் அறைக்கு வந்து ஒரு 20 நிமிடங்கள் ஓய்வு . அடுத்து புத்தகங்களை தூக்கி கொண்டு படிக்கும் ஹால் . இரவு 11 மணி வரை படித்துவிட்டு அறைக்கு தூங்க செல்ல வேண்டும். வெறும் 5 மணி நேரம் மட்டுமே இரவு தூக்கம். சரியாக படிக்காவிட்டால், தேர்வுகளில் மதிப்பெண்கள் வாங்காவிட்டால் மற்ற மாணவர்களுக்கு முன்னால் நிற்க வைத்து அசிங்கமான வார்த்தைகளின் அர்ச்சனைகளோடு அடிகளும் விழும். இடைப்பட்ட நாட்களில் பெற்றோர்கள் வந்தாலும் தங்கள் பிள்ளைகளை பார்க்க அனுமதி இல்லை. இதுதான் எல்லா உறைவிடப் பள்ளிகளில் நடக்கிறது.
பெற்றோரை பார்க்கும் நாளில் பிள்ளை "என்னால் முடியவில்லை.!" என்று அழுதால் "எவ்வளவு லட்சங்கள் கடன் வாங்கி கட்டி இருக்கிறோம் தெரியுமா ? படிப்பதை தவிர வேறு வேலை என்ன உனக்கு?" என்று பெற்றோரும் கோபப்பட, இந்த நெருக்கடியை சமாளிக்கும் குழந்தைகள் தாக்குப்பிடிக்கிறார்கள். முடியாத குழந்தைகள் தற்கொலை செய்கின்றனர்.
தற்போது ஒரு அப்பாவி மாணவியின் தற்கொலையும் அதை தொடர்ந்து நடந்த பெரும் கலவரமும் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாணவி உண்மையிலேயே தற்கொலை செய்யவில்லை வேறு ஏதோ நடந்திருக்கிறது என்றெல்லாம் செய்திகள் பரவுகிற சூழ்நிலை. ஆனால் சம்பவம் நடந்த பள்ளியின் ஹாஸ்டல் மேலாளர் "எங்கள் பள்ளி மிகவும் பாதுகாப்பானது." என்று பேட்டி கொடுக்கிறார். நடு இரவில் மாடியிலிருந்து தரையில் விழுந்து கிடந்த மாணவியின் உடலை காலையில் பால்காரர் வந்து பார்த்து சொல்லும் அளவுக்கு இவர்கள் கொடுக்கும் பாதுகாப்பின் லட்சணம் இருக்கிறது. மனசாட்சி அற்ற வியாபாரிகள் திருந்த மாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனால் லட்சங்களை கொட்டிக் கொடுத்து கடைசியில் தங்கள் குழந்தையின் உயிரையும் பறிக்கொடுத்து நிற்கும் பெற்றோர்கள் எப்பொழுது தான் திருந்துவார்கள். ?
குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் வந்து தங்கள் மனக்குமுறல்களை சொன்னால் தயவு செய்து காது கொடுத்து கேளுங்கள்.
மருத்துவம் பொறியியல் படிப்புகள் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. உங்கள் பேராசையை அவர்களின் மீது திணிக்காதீர்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (JK) " ஒரு குழந்தையைப் புரிந்து கொள்ள, அக்குழந்தை விளையாடுவதைப் பார்க்க வேண்டும், அவனது வெவ்வேறு மனநிலையை படிக்க வேண்டும்; நம்முடைய சொந்த எண்ணங்கள், நம்பிக்கைகள் மற்றும் அச்சங்களை அவன் மீது செலுத்த கூடாது. நம் ஆசைகளுக்கு ஏற்ற மாதிரி அவனை வடிவமைக்க முடியாது." என்று சொல்கிறார்.
கலீல் ஜிப்ரானின் கவிதை ஒன்றில்
"உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல...
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்,
ஆனால், அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை..
அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய அன்பைத்தரலாம்...
உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனெனில் அவர்களுக்கென்று அழகான சிந்தனைகள் உண்டு..
அவர்களின் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம்...
அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல..
ஏனென்றால் அவர்களின் ஆன்மா வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது..
அந்த வீட்டை நீங்கள் கனவில் கூடச் சென்றடைய முடியாது..
அவர்களை உங்களைப்போல ஆக்கி விடாதீர்கள்..
வாழ்க்கை பின்னோக்கி பயணிப்பதில்லை..
கடந்தகாலத்தில் சுணங்கி கிடப்பதுமில்லை..
உங்கள் குழந்தைகள் எனும் உயிருள்ள அம்புகளை ஏவும் வில் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
அவன் முடிவுகளற்ற பாதையில் குறிவைத்து
முழுவலிமையோடு வில்லான உங்களை வளைக்கிறான்...
அம்புகளாகிய அவன் அதிவேகமாய், அளவற்ற தொலைவுகள் பயணிக்கலாம்...
பாய்கிற அம்பை விரும்புகிற அவன்,
பதறாத வில்லையும் விரும்புகிறான் " பெற்றோர்கள் இதை உணர்ந்தால் பிள்ளைகளை இழக்க வேண்டிய சூழ்நிலை தோன்றாது.
இனி ஒரு குழந்தைக்கு இப்படிப்பட்ட கொடூர முடிவுகள் நடக்காமல் தடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கையில் தான் உள்ளது.
Leave a comment
Upload