நம் வாழ்க்கைக்கு இனிமை சேர்ப்பவை எவை எவை என்று சிந்தித்து இருக்கிறோமா ?
சின்னச் சின்ன சங்கதிகளே அழகைக் கூட்டி நம் நாளை அர்த்தமுள்ளதாக்கி விடும்.
பேருந்தில் பயணித்துக் கொண்டிருப்போம், எதிர் இருக்கையில் அம்மா மடியில் அமர்ந்திருக்கும் இரண்டு வயது சிறுமி பரிச்சயத்துடன் நம்மைக் கண்டு புன்னகைக்க, நமது இறுக்கம் தளர்ந்து, பதில் புன்னகை நம் முகத்தில் மலர, அந்த நாளே நமக்கு அழகாகி விடும்.
இவ்வரிசையில், தொடர்பு விடுபட்ட நட்பின் திடீர் தொலைப்பேசி அழைப்பு, தூரத்து கோவிலில் ஒலிக்கும் கீர்த்தனை, எதிர்பாராமல் இல்லம் வந்து நலம் விசாரிக்கும் உறவு, அன்பு கொண்டவரின் ஸ்பரிசம், என்று வாழ்க்கைக்கு இனிமை சேர்க்கும் தருணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை நம் மனநிலையை அடியோடு மாற்றி, மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் 'இனியவை நாற்பது' எனப்படும் நீதி நூல் மனித வாழ்வில் இனிமை சேர்ப்பவற்றை வரிசைப்படுத்தி உள்ளது. ஈகை, கல்வியின் சிறப்பு, புலால் உண்ணாமை, அறச்செயல்களின் மாண்பு, வீரம், கடன் இன்றி வாழ்தல், மதி நுட்பம், தன்மானத்துடன் வாழ்தல், மழலையுடன் மகிழ்ந்து இருத்தல், நட்பின் பெருமை என்று மனித வாழ்வுக்கு இனிமை சேர்க்கும் சேதிகளை இனியவை நாற்பது உள்ளடக்கி கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து நாற்பது பாடல்கள் உள்ள இந்நூலில், ஒவ்வொரு பாடலிலும் மூன்று முதல் நான்கு கருத்துக்கள் 'இனிதே' என்று குறிக்கப்படுகின்றன.
இனியவை நாற்பது அழகாக தொடுக்கப்பட்ட வெண்பா மாலை. இந்நூலை இயற்றியவர் 'பூதஞ்சேந்தனார்' என்னும் புலவர். கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.
என்னும் கடவுள் வாழ்த்துப்பாடல், ‘கண் மூன்றுடைய சிவனை வணங்குதல் இனிது, துளபமாலை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது,, நான்கு முகம் கொண்ட பிரம்மனை வணங்குதல் இனிது’ என்ற பொருளில் எழுதப்பட்டுள்ளது. எனவே, பொது சமய நோக்கு கொண்ட புலவரால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்று கொள்ளலாம் .
இனி இந்த வாரத்துக்கான இனியவை நாற்பது பாடல் .
தங்கண் அமர்புடையார் தாம்வாழ்தல் முன்னினிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கையர் ஆகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது- (இனியவை நாற்பது 9)
"நம்மைச் சார்ந்து நம் மேல் அன்பு கொண்டு வாழ்பவர்கள் சிறப்பாக வாழ்தலைக் காணும் பேறு பெறுதல் இனிதானது .
பரந்து ,விரிந்த வானில் துலங்கி வலம் வரும் வெண்ணிலவைக் காண்பது இனிதானது.
குற்றமில்லாத ஒழுக்கம் கொண்டு , எல்லாரிடமும் அன்பும், இரக்கமும் உடையவராக வாழ்தல் இனிதானது" என்பது இப்பாடலின் பொருளாகும் .
எளிய சொற்களில் விவரித்தாலும் ,இப்பாடல் சொல்லும் கருத்துக்கள் ஆழமானவை . நம்மை நேசிப்பவர்களின் ஏற்றத்தை விட நமக்கு இன்பம் சேர்ப்பது எதுவும் உண்டோ? வெண்ணிலவை விட நம் மனத்துக்கு மகிழ்ச்சி தரும் இயற்கை அழகு எது இருக்க முடியும்? கள்ளமில்லாத மனம் கொண்டு, ஒழுக்கமான வாழ்வும் எல்லா உயிரிடத்திலும் அன்பு பாராட்டி வாழ்தலை விட உயர்வு வேறு எதுவும் இல்லை .
இப்பாடலில் வரும் 'அங்கண் விசும்பின் அகல்நிலா' என்னும் நிலவைக் குறிக்கும் அழகான சொற்றொடர் நாலடியாரின் பாடலிலும் வருவதை குறிப்பிடலாம் . சான்றோரையும் நிலவையும் ஒப்பிடுகைகையில் ,
அங்கண் விசும்பின் அகல்நிலா பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர் மன் -திங்கள்
மறுவாற்றும் சான்றோர் அஃதற்றார் தெருமந்து
தேய்வர் ஒரு மாசு உரின் (நாலடியார் -151)
என்று பாடுகிறது நாலடியார் .
'பரந்த வானத்தில் வரும் நிலவையும் , சான்றோரையும் ஒப்பிட்டு பார்க்கையில், இருவரும் தம்முள் ஓத்திருப்பர். இருவரும் வேறுபட்டு இருக்கும் நிலை ஒன்று உண்டு. நிலவு தனக்கு ஏற்படும் களங்கத்தைப் பொறுத்துக் கொள்ளும். ஆனால் அறிவில் சிறந்த சான்றோரோ தமக்கு ஒரு களங்கம் ஏற்பட்டால் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். அதற்காக தன்னையே வருத்திக் கொண்டு, தன் உயிரையே மாய்த்துக் கொள்வர்’ என்பது இப்பாடலின் பொருளாகும்
தமிழின் நீதி இலக்கியங்கள் படிக்க படிக்க , ஆழமான பொருளும் அற்புதமான அறிவுரைகளும் கொண்டு விளங்குபவை .
மேலும் ஒரு புதிய பாடலுடன் அடுத்த வாரம் சந்திப்போம் ..
- தொடரும்
Leave a comment
Upload