புதுக்கோட்டையில் ஆதனக்கோட்டை கிராமத்தில் மாணவி கே.ஜெயலக்ஷ்மி வசிக்கிறார். பதினெட்டு வயதாகும் இவர் தற்போது இளங்களை பட்டம் வரலாறு படித்து வருகிறார்
கல்வியே செல்வம். முன்னேறுவதற்கு கல்வியால் மட்டுமே முடியும் என்கிறார் இவர். தனது முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களின் பங்கு ஒரு பெரிய உந்துகோல், இல்லையேல், முன்னேற்றம் கண்டிருக்க முடிந்திருக்காது என்றும் தொடரும் இவர் செய்த சாதனை தான் என்ன?
அரசு மேல் நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலுகையில் பள்ளியில் கீழே விழுந்து கிடந்த செய்திதாளில் இருந்த ராக்கெட் படமும் அதில் வந்த செய்தியை, அதாவது, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்கு ஒரு சிறுமி சென்ற செய்தியின் தாக்கம் இவரை தானும் ஏன் நாசாவுக்கு செல்லக்கூடாது என்ற துடிப்பு கொள்ளச்செய்தது.
அந்த திசையில் இணையத்தில் மாணவர்களை நாசா அழைத்து செல்லும் நிறுவனம் பற்றி தேடி அறிந்து கொண்டது. இந்த அணுகுமுறை என்பது இக்காலத்து மாணவர்களிடையே அரிதாக காணப்படும் ஒன்றாகும்.அந்த நிறுவனம் நடத்திய தேர்வில் தேர்ச்சியும் பெற்றார்.
நாசா செல்ல ஏற்படும் செலவிற்கு நாசா பாதி செலவை ஏற்றுக்கொண்டாலும் மீதி தொகைக்கு அவர் எடுத்த முயற்சி, செய்தி ஊடகங்கள் வாயிலாக அந்த செலவினத்தை ஏற்கும் நலம் விரும்பிகளை இணைத்து கொண்டார். தொகையும் தயாராகி விட்டது.
இத்துணை முயற்சியும் ஒருங்கே பெற்ற இம்மாணவிக்கு இந்த கொரோனாவின் காரணமாக இன்னும் அந்த பயணம் தள்ளி போய்க்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், இவரது நாசாவிற்குச் செல்லத்தேவையான பணத்தை தாங்களே தர கிராமாலாயா என்ற தொண்டு நிறுவனம் முன் வர, அவர்களிடம் ஜெயலக்ஷ்மி, தனக்கு தேவையான பணம் கிடைத்து விட்டது என்று சொல்ல அவர்கள், வேறு ஏதாவது தேவையெனின் கேட்குமாறு சொல்ல....
நமது கதாநாயகி, தமது கிராமதிலுள்ள 126 வீடுகளுக்கு கழிப்பறை வசதி செய்து தாருங்கள் என்று கேட்டுக் கொண்டாராம். அந்த தொண்டு நிறுவனமும் மனமுவந்து அந்த வேண்டுதலை நிறைவற்றியிருக்கிறார்கள்.
டாக்டர் ஏ.பி.ஜே கலாம் பவுண்டேஷன், ஸ்பேஸ் ஸோன் இந்தியா மார்டின் குரூப் ஆகிய நிறுவனங்கள் இணந்து சிறிய ரக செயற்கைகோள் உருவாக்கும் பயிற்சியில் நாடு முழுவதிலுமிருந்து விண்ணப்பித்திருந்தார். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்தில் ஒருவரானார். செயற்கை கோள் உருவாக்கும் பயிற்சியும் பெற்றார். வெளி மண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு ஆகிவற்றை அளவிடும் செயற்கை கோளை தயாரித்தார். பலூனில் எடுத்துச் செல்வதற்கு ஏற்ப குறைந்த எடை வேண்டுமென்பதற்காக வெளிப்பகுதியை கார்பன் ஃபைபரால் உருவாக்கியிருக்கிறார்.
ராமேஸ்வரத்திலிருந்து இரண்டு ராட்சத பலூன்களில் நூறு செயற்கை கோள்கள் பறக்க விடப்பட்டன. அரசு பள்ளி மாணவர்களாலும் இம்மாதிரி வானியல் சாதனைகளை செய்ய முடியும் என்பது பெருமிதம்.
கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததை விட இப்போது வளி மண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கிறது என்ற தனது ஆய்வு முடிவும் முக்கியமானது என்கிறார் இவர்.
வானியல் படிக்க ஆசை கொண்டிருக்கும் இவர் இந்திய ஆட்சி பணிக்கு வந்தால் ஏராளமான சமூக பணிகளைச் செய்ய முடியும் என்பது இவரது கனவு. அதனால் தற்போது இளங்கலை வரலாறு படித்து வருகிறார்.
தற்போது, இன்னுமொரு பெருமையும் சேர்கிறது இவருக்கு. இவர் கூறியதனைத்தும் கனவு மெய்ப்படும் என்ற பாடத்தலைப்பில், மஹாராஷ்ட்டிர மாநிலப் பாடநூலாக்கம் மற்றும் பாடத்திட்ட ஆய்வுக் கழகம், புனே -411004 வெளியிட்டுள்ள தமிழ் பாலபாரதி வகுப்பு ஏழாம் வகுப்பு புத்தகத்தில் பாடமாக இருக்கிறது.
தற்போது தமிழக மாணவர்களைப் பற்றிய வருந்தத்தக்க செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னுதாரண மாணவராக இவர் நம்மாநிலத்தில் மட்டுமில்லாது இந்தியா முழுவதிலும் அறியப்படுவது, ஒரு நேர்மறை எதிர்பார்ப்பாக அமையும்.
இவரது கனவு மெய்படட்டும், விரைவில் நாசா சென்றும், வென்றும் வரவும் விகடகவி சார்பில் வாழ்த்துவோம்.
Leave a comment
Upload