தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆண் பெண் இருவரும் ஒன்றாக சேர்ந்து படிக்கும் பள்ளிகள் தான் இருந்தன. எந்தப் பிரச்சனையும் இல்லை. திராவிட கட்சிகள் தான் பெண்ணுரிமை பெண்ணியம் பேசி பெண்களுக்கு என்று தனி பள்ளி என்று அறிமுகம் செய்தது. இப்போது பெண்களுக்கென்று தனி கல்லூரி கூட வர தொடங்கிவிட்டது. ஆனால் விவரம் அறிந்த கல்வியாளர்கள் இருபாலர் பள்ளிகள்தான் கல்வித்தரத்தை உயர்த்தும் என்று வாதிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மாணவர்கள் குறைந்த மார்க் வாங்கி ஆசிரியர் சுட்டிக்காட்டினால் மாணவிகள் எதிரில் தங்களுக்கு ஏற்பட்ட அவமானமாக பார்ப்பார்கள். இதனால் கவனம் கல்வியில் கூடுதல் அக்கறையுடன் இருக்கும். இது மாணவிகளுக்கும் பொருந்தும் என்று சுட்டிக் காட்டுகிறார்கள் யோசித்துப் பார்த்தால் இந்த வாதம் நியாயமானதுதான்.
கேரள மாநிலம் இப்போது மீண்டும் இருபாலர் பள்ளி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து விட்டது. 2023- 24 கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து பயிலும் கல்வி முறையை செயல்படுத்த கேரள குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது .இந்தியாவில் கல்வி விஷயத்தில் மற்ற மாநிலங்களுக்கு கேரளா தான் எப்போதும் முன்னோடி இங்கு கற்றல் சதவீதம் கூடுதலாக இருப்பதற்கும் அதுதான் காரணம்.
கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்த ஐசக் பால் என்பவர் கேரள குழந்தை உரிமை ஆணையத்திற்கு ஒரு கோரிக்கை மனு தந்தார். அவர் அந்த மனுவில் சமூகத்தில் பாலின சமத்துவம் அமைய வேண்டுமென்றால் பாலின பிரிவினையை ஊக்குவிக்கும் ஆண்கள் மட்டும் பெண்கள் மட்டும் என செயல்படும் பள்ளிகளை தடை செய்ய வேண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண் பெண் இருவரும் சேர்ந்து பயிலும் பள்ளியாக மாற்ற வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் மனதளவில் மட்டும் இன்றி சமூகத்திலும் அவர்களை பக்குவப்படுத்தும் என்று காரணம் சொல்லி இருக்கிறார் அந்த மனுவில் இந்த மனுவை சற்று சமுதாய நோக்கத்துடன் ஆராய்ந்த கேரள குழந்தை உரிமை ஆணையம் அதிரடியாக 2023 -24கல்வியாண்டில் இணைக் கல்வி முறையை அமுல்படுத்துமாறு உத்தரவிட்டது.
இதற்கான செயல் திட்டத்தை ஏற்படுத்துமாறு முதன்மை செயலாளர் பொதுக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் ஆகியோருக்கு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு கிடைத்த 90 நாட்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆணையத்துக்கு அறிக்கை அனுப்புமாறு அந்த உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.
ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த ஏதுவாக பள்ளிகளில் ஆண்கள் பெண்களுக்கு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் கவனத்தில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளையும் தேவையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் பெண் இருபாலர் கல்வி அவசியம் மற்றும் இது பற்றிய விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஆணையம் யோசனை சொல்லியிருக்கிறது.
கல்வியமைச்சர் இதுபற்றி குறிப்பிடும்போது இந்த திட்டத்தை செயல்படுத்த ஆலோசித்து வருவதாக தெரிவித்த அவர் ஒரே வருடத்தில் இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை படிப்படியாக பள்ளிகள் இருபாலர் இணைக் கல்வி நிலையங்களாக மாற்றப்படும் என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் இணை கல்விக்கான ஆதரவு குரல் கூடிய சீக்கிரம் வரக்கூடும்.
Leave a comment
Upload