தொடர்கள்
பொது
மரத்தடி வகுப்பு - வேங்கடகிருஷ்ணன்

2022062307045751.jpg

மரத்தடி வகுப்பு

அடிக்கடி இடமாற்றம் உள்ள அரசாங்க வேலையில் என் அப்பா இருந்ததால் நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை நாங்கள் பார்த்த ஊர்கள் பல. இதில் அதிக நாட்கள் இருந்தது செங்கம் என்ற ஊரில்தான். திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள ஊர் இது.
நான் ஐந்தாவது முதல் பத்தாவது வரை இங்கு தான் படித்தேன்.
ஐந்தாவது பாஸ்(?!) ஆன பின் எந்த பள்ளியில் ஆறாவது சேர்ப்பது என‌ என் அப்பா விசாரித்த போது மூன்று தனியார் பள்ளிகள் இருந்தாலும், எல்லோரும் ஒரே குரலாக கோரஸ் பாடியது அரசு உயர் நிலைப் பள்ளியில் சேர்க்கச்சொல்லித்தான்.
அப்பாவுக்கே ஆச்சரியம்! என்ன இது? அரசு பள்ளிக்கு இத்தனை சிபாரிசா? என்று. ஆச்சரியப்பட்டு என்னை அங்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு முடிவு செய்தார். பள்ளியில் சேர்க்கும் நாளன்று தலைமை ஆசிரியர் "உங்க பையன் நல்ல பிரைட்டா இருக்கான் சார், அவனை இங்கிலீஷ் மீடியம் ல போடுங்க" என்று சொன்னார். அப்பா உடனே சரி என்று தலையாட்டினார். பையனை முதல் முறையாய் ஒருவர் புத்திசாலி என்று பாராட்டியதாலோ என்னவோ, ஆறாம் வகுப்பில் இருந்து ,பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் தான் படித்தேன். அமைந்த ஆசிரியர்கள் அனைவரும் மிக நன்றாக சொல்லிக் கொடுத்தார்கள்.
படிப்பு தவிர என்சிசி, விளையாட்டு, சோசியல் சர்வீஸ் என்று எல்லாவற்றிலும் சேரும்படி அழைப்பு விடுத்து சேர்க்கவும் செய்தார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கத்தில் தான் நான் ஏழாவது வகுப்பில் ஒரு கையெழுத்து பத்திரிகை துவங்கினேன். எங்கள் பள்ளிக்கு மட்டுமே என்று உருவாக்கிய பத்திரிகை அது. எல்லா வகுப்பு மாணவர்களும் அவர்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை அதற்காக தருவார்கள். கதை, கட்டுரை, படம் வரைவது, விளையாட்டு போட்டி என்று பல விஷயங்கள் அதில் சேர்த்தோம். எனக்கு அன்றைய கோகுலம் புத்தகம் தான் இன்ஸ்பிரேஷன்.
ஒருமுறை விவேகானந்தர் பற்றிய பேச்சு போட்டிக்காக சென்னை ராமகிருஷ்ண மடத்திலிருந்து தலைமை துறவி சுவாமி சர்வ ஞானந்தா வந்திருந்தார். அந்த பேச்சு போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. மேடையில் அதற்கான சான்றிதழை வழங்கும்போது மைக்கை பிடித்து, இந்த இரண்டாம் பரிசு பெற்ற பையன் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது, யார் எழுதிக் கொடுத்திருந்தாலும் அவன் அதை இங்கு சொன்ன விதம் என்னை கவர்ந்தது என்றார். என்னிடம் யார் இதை எழுதியது என்று கேட்டார்., அப்போது நான் இதை நானே தான் எழுதினேன் என்னுடைய தந்தையார் வைத்திருந்த புத்தகங்களில் இருந்து சில குறிப்புகளை எடுத்து அதை வைத்து நான் எழுதினேன் என்று சொன்னேன். மேடையிலேயே தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தார். அந்த ஆசிர்வாதத்தின் பலனே இன்றும் தொடர்கிறது என்று நான் நினைக்கிறேன்.

20220622234619923.jpg
வாரம் இரு நாள் நீதி போதனை வகுப்பு உண்டு. அந்த வகுப்பு மட்டும் வகுப்பறையில் நடக்காமல் காற்றோட்டமாய் எங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானம் ஓரமாய் வளர்ந்திருந்த ஒரு மரத்தடியில் நடக்கும். அருகில் உள்ள ஒவ்வொரு மரத்தடியிலும், ஒவ்வொரு வகுப்பின் நீதி போதனை வகுப்பு நடைபெறும் காற்றோட்டமான சூழலில், மனது இறுக்கங்கள் தளர்ந்து, ஆசிரியர் கூறும் கதையோடு சேர்ந்த நீதி, நம் காது வழியே மூளையில் சென்று அமர்ந்து கொள்ளும். இன்று அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது என் மகள் எவ்வளவு நல்ல விஷயங்களை இழந்திருக்கிறாள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இத்தனைக்கும் அவள் படித்தது சென்னையில் உள்ள ஒரு தரமான சிபிஎஸ்சி முறையில் கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனத்தில்தான்.


எங்கள் ஆசிரியர்களிடம் எங்களுக்கு மதிப்பு இருந்தது, பயம் இருந்தது, அதே நேரத்தில் தோழமை உணர்வும் இருந்தது. அன்றைய செய்திகள் எங்களுடைய காலை பிரேயரோடு ஒரு மாணவனால் வாசிக்கப்படும். அது தவிர நாட்டு நடப்புகள் மதிய உணவிற்கு பின் ஒரு இறைவணக்க பாடலோடு துவங்கும் போது ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படும். இது போன்ற விஷயங்களால் படிப்பு மட்டுமல்லாமல், நாட்டு, உலக நடப்புகளையும் எங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது. ஓவியப் பயிற்சி என்று ஒரு பீரியட் உண்டு. அதையும் மிகவும் சரியான முறையில் பயன்படுத்தி எங்களை ஓவியம் வரைய சொல்லி ஊக்கப்படுத்துவார் எங்கள் ஓவிய ஆசிரியர்.


இப்படி ஒவ்வொரு ஆசிரியர் கண்காணிப்பிலும், அரவணைப்பிலும் வளர்ந்த நாங்கள், இன்று வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு வேலைகளில் இருந்தாலும் இன்றும் தொடர்பில் இருக்கிறோம். நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு. குழந்தைகள் பற்றி பேச்சு வரும்போது எல்லாம் நாங்கள் அனுபவித்த அந்தப் பள்ளி வாழ்க்கை சுகமான நினைவுகளாக மனதை வருடி செல்கிறது. அதே நேரத்தில் அடிக்கடி செய்திகளில் வரும் மாணவர் சாவு, மாணவி தற்கொலை, மாடியில் இருந்து கீழே குதித்தார், இது போன்ற செய்திகள் மனதை மிகவும் வருத்தப்படுத்துகின்றன. நமக்கு மீண்டும் அந்த நீதி போதனை கல்வியும், அர்ப்பணிப்பான ஆசிரியர்களும் தேவையோ? என்று நாங்கள் பேசாத நாளில்லை.!