முதலிரவு அறை…..
இரட்டை கட்டில் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. படுக்கையின்
தலைமாட்டு பகுதியில் இனிப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அறை முழுக்க ரூம்
பிரஷ்னர் பீய்ச்சப்பட்டிருந்தது.
கட்டிலிலில் மணமகன் ஆர்வா அமர்ந்திருந்தான். பட்டுவேட்டி பட்டுசட்டை
உடுத்தியிருந்தான். இதுவரை நூற்றுக்கணக்கான ஆங்கில முத்தங்களை கொடுத்து பெற்றிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட புணர்ச்சி சுகங்களை அனுபவித்திருந்தாலும் புதிதாய் ஒரு பெண்ணுடலை தொடப் போகிறோம் என்கிற ஆவேசஆர்வம் அவனின் மனமெங்கும் கிளைத்தது.
முதலிரவு அறைக்குள் பால்செம்புடன் தள்ளப்பட்டாள் மோகனா.
மோகனாவிடமிருந்து மல்லிகைப்பூ நறுமணம் கிளம்பியது.
“வா மோகனா!”
பால் செம்பை இனிப்புகள் அருகில் அமர்த்திவிட்டு கணவனின் அருகில் வந்து
அமர்ந்தாள். அவளது இடதுகையில் சில பச்சைத்தாள்கள் இருந்தன.
வாக்சல்யமாய் மோகனாவின் வலதுகையை பற்றினான் ஆர்வா. உதறினாள்.
“உங்களுக்கு உங்க காரியம் முக்கியம். எனக்கு காரியத்தின் முன் சில
முன்னெச்சரிக்கைகள் முக்கியம்!”
“புரியல மோகனா!”
“ஒரு திருமணத்தில் பெண்ணுக்கு எங்கிருந்து பிரச்சனைகள் வரும்?
கணவனிடமிருந்து… மாமியாரிடமிருந்து… மாமனாரிடமிருந்து… நாத்தனாரிடமிருந்து..
ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள். புகுந்து வீட்டு
வார்த்தைகள் சித்திரவதை செய்து கொல்லும்!”
“நாங்கள் புரிதலும் மனப்பக்குவமும் மிக்கவர்கள். உன்னை சொல்லாலும்
செயலாலும் ஒரு போதும் துன்புறுத்த மாட்டோம்!”
“வாய்வழி உறுதிமொழிகளை நான் நம்பமாட்டேன். நாம்
எழுத்துப்பூர்வமாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்!”
“என்ன ஒப்பந்தம்?”
“ஒப்பந்தம் முழுவதையும் பின்னர் படித்துக் காட்டுகிறேன். ஒப்பந்தத்திலுள்ள முக்கியமான ஷரத்துக்களை வாய்வழி கூறுகிறேன்!”
“சரி சொல்லு மோகனா!”
“ஒப்பந்தம் உனக்கும் எனக்கும் உன் தாயாருக்கும் இடையே ஆனது. தினசரி
நானும் உன் அம்மாவும் பல வார்த்தைகள் பேசவேண்டி வரும். அப்ப உங்கம்மா ஒரு தேவையில்லாத வார்த்தைகயை அல்லது ஒரு வாக்கியத்தை என் மீது வீசுவார்.
அந்த ஒரு வார்த்தை என்னை மரணக்காயப்படுத்தக்கூடும். தேவையா? அதனால் நான் ஒரு பட்டியல் தயாரித்துள்ளேன். உன் அம்மா என்னிடம் பேசும்போது நான் தடைசெய்த 25வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை பேசக்கூடாது. பேசினால் என்ன நடக்கும் என்பதனை உரையாடலின் முடிவில் கூறுகிறேன்!”
“புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்னுடையை பங்கென்ன?”
“உனக்கு அப்பா உயிரோடு இல்லை. அதனால் மாமனார் கொடுமை எனக்கு
இராது. எனக்கும் உன் அம்மாவுக்கும் முட்டல் மோதல் வந்தால் நீ உன்
அம்மாவுக்கு சார்பாக நாலு வார்த்தை உதிர்ப்பாய். நீயும் நானும் சேர்ந்து இருக்கும் அந்தரங்க நொடிகளில் உன் அம்மா பெருமை பேசுவாய். அதனால் நான் ஒரு பட்டியல் தயாரித்துள்ளேன். நீ என்னிடம் பேசும் போது நான் உனக்காக தடை செய்த 25 வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை பேசக்கூடாது. பேசினால் தண்டனை என்ன கிடைக்கும் என்பதனை என் உரையாலின் இறுதியில் கூறுகிறேன்!”
“என் அம்மா, 25தடைசெய்த வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை பேச
கூடாது. நான் 25 தடை செய்த வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை உன்னிடம் பேசக்கூடாது. சரி அந்த தடை செய்த வாக்கியங்களை கூறு!”
“முதலில் உன் அம்மா பேசக்கூடாத 25வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள். ‘நீ என் மருமக இல்ல மக மாதிரி’ இந்த வாக்கியத்தை உன் அம்மா ஒருபோதும் என்னிடம் கூறக்கூடாது. ‘ராட்சசி’ நோ. ‘என் மகனை தலையணை மந்திரம் போட்டு மயக்கிட்ட’ நோநோ. ‘கும்பகர்ணி’ நான் நினைச்ச நேரத்ல தூங்குவேன் நினைச்ச நேரத்ல முழிப்பேன். பட்டப்பேர் வைத்து வசவக்கூடாது. ‘சம்பந்தி வீடு ஒரு பிச்சைக்காரக் கும்பல்’ நீங்க ஒரு ராயல்பேமிலின்னு நினைச்சுக்கிட்டு மல்லாக்க படுத்து எச்சில் துப்பக்கூடாது. ‘பேய் தீனிக்காரி’ ‘குழந்தைக்கு தாய்பால் குடேன்’
‘அக்குள்ல கிழிஞ்ச நைட்டியை போட்டுக்கொண்டு தள்ளுவண்டிகாரன்கிட்ட காய்கறி வாங்கப் போகாதே’ ‘தினம் குளிக்காம தலைவிரி கோலமா நிக்காத’ ‘மாசம் நாலு புதுப்புடவை வாங்காதே’ ‘அந்நிய ஆம்பளைகள்கிட்ட இளிச்சு இளிச்சு பேசாத’ ‘பல் விலக்குரேன்னு பேஸ்ட்டை தின்னாதே’ ‘கணவனின் சம்பளத்தை வாங்கி ஊழல் செய்யாதே’ ‘பொம்பிளை ஹிட்லர்’ ‘ட்ராமாக்காரி’ ‘பொய் வாக்குறுதிக் காரி’
‘வயசுக்குரிய பக்குவம் இல்லாதவள்’ ‘எனக்கு அடிபட்டா உள்ளுக்குள்ள
சந்தோஷபட்டுக்கிட்டு வெளியில முதலைக்கண்ணீர் விடுறியே நீ’ ‘அக்கம்பக்கத்து பெண்களிடம் தினம் கோள்குண்டுனி பேசாதே’.. தொடர்ந்தாள் மோகனா.
அவள் சொன்னதை ஒவ்வொன்றாய் எண்ணி பார்த்து திருப்தியானான்.
“ஆஹா.. பிரமாதமான பட்டியல்… என் அம்மா உன்னை இப்டிஇப்டி எல்லாம்
பேசுவான்னு யூகிச்சு பட்டியல் தயாரிச்சிருக்க பார்.. வாவ்!”
“பாராட்டுகிறாயா, நக்கல் செய்கிறாயா?”
“முழுக்க முழுக்க பாராட்டே…”
“நீ பேசக்கூடாத 25வார்த்தைகள் அல்லது வாக்கியங்களின் பட்டியல்
ஒப்பிக்கிறேன். கேள்…”
“சரி, சொல்லு!”
“1. அம்மாவின் இடத்தை என் மனைவியாலும் என் மகள்களாலும் ஒருபோதும்
நிரப்ப முடியாது’ நாங்க கேட்டோமாடா நிரப்பச்சொல்லி. நீங்களா ஏன்டா
பீத்திக்கிறீங்க? அம்மாதான் எல்லாம்னா ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிறீங்க. அம்மா
மடிலயே படுத்து கிடக்கவேண்டியதுதான? சாப்பாடும் வேணும் செக்ஸும் வேணும்னு
ஏன்டா நடிக்றீங்க?
2. ‘அம்மாவி்ன் சமையலுக்கு கால்தூசி பெறாது உன் சமையல்’- நாங்க
சமைச்சு போடுறதை நாக்கை சுழட்டி தி்ன்னுப்புட்டு நன்றி கெட்டதனமாய் பேசுற
வாய்ல சூடு போட்டா என்ன? இதே பயலுக ஆபிசில பக்கத்து சீட்டுக்காரி டிபன்
பாக்ஸை திறந்து தின்னுப்புட்டு ‘என் அம்மா என் மனைவி சமையலை விட உன்
சமையல் டாப்… ஹிஹி’ ன்னு நூல் விடுவான்க.
3.‘நான் எப்பக் கூப்ட்டாலும் நீ தாம்பத்யத்துக்கு ஓடோடி வரனும்’- நாங்க
அப்படி கூப்ட்டா நீங்க ஓடோடி வருவீங்களாடா? சிகரட் புகைத்துவிட்டு குடித்துவிட்டு
தாம்பூலம் தரித்துவிட்டு பக்கத்தில் வந்தால் எட்டி ஒரே உதைதான். தாம்பத்யத்தின் முன் குளித்தலும் பல் துலக்குதலும் சிறப்புடா.
4. ‘நாலு ப்ரன்ட்ஸை கூட்டி வந்திருக்கேன். உடனே சமைச்சு விருந்து
பரிமாறு’- ப்ரண்ட்ஸை ஹோட்டலுக்கு கூட்டிட்டு போ. வீட்டுக்கு கூட்டிட்டு வராதே.
வீடு என்ன மங்கம்மா சத்திரமா?
5.‘கல்யாணத்தப்ப 45கிலோ இருந்த கல்யாணத்துக்கு பிறகு 60கிலோ ஆன ஒரு
குழந்தை பெத்தவுடனே 100கிலோ ஆய்ட்ட. டயட்ல இருந்து பழைய பன்னீர்செல்வி ஆகு!’- ஹார்மோனல் ப்ராப்ளம்டா நாங்க என்ன பண்ணுவோம். நீங்க குண்டு தடிமாடு ஆனா உங்களை ஓஎல்எக்ஸ்லயா வித்துகுரோம்?
6.‘என் பேங்க அக்கவுன்டர் ஏடிஎம் கார்டு டீயெல் கேக்காத. என் சம்பள
பணத்தை பிடுங்கிக்கிட்டு தினம் நூறு ரூபா பாக்கட் மணி தர முயற்சிக்காதே.’- இந்த வசனத்தை ஒருநாளும் என்கிட்ட பேசாதே.
7. ‘நமக்கு பிறக்ற குழந்தைக்கு நான்தான் பெயர் வைப்பேன்’ - டேய் பத்து
மாதம் சுமந்த பிள்ளை பெறுறது நாங்க. பேர் வைப்பீங்களாக்கும் எட்டி போங்க இனி பெயர் வைக்கும் உரிமை தாய்க்குலம் எங்களுக்கே.
8. ‘என் பேஸ்புக் அக்கவுண்ட்டுக்குள்ள நீ ஏண்டி வர்ற? என் ஸெல்போனை நீ
ஏண்டி நோண்டுற?’- உன் முகநூலில் நான் கட்டாயம் இருப்பேன். உன் திறன்பேசியை நானும் என் திறன்பேசியை நீயும் எப்போதும் பார்க்கலாம். நோ லாக் நோ
பாஸ்வேர்ட்.
9. ‘உன்னுடன் காலேஜில் படித்த ஆண்நண்பர்கள் வீட்டுக்கு வரக்கூடாது.’- நீ
என்னிடம் எப்படி இருக்கிறாயோ அதனை போலவே நானும் உன்னிடம் இருப்பேன்.
10. ‘அம்மாவை பாக்கப்போறேன் அம்மாவை பாக்கப்போறேன்னு ரெண்டு
மாசத்துக்கு ஒருதடவை உயிரை வாங்கக்கூடாது.’- பிறந்தவீட்டை மறக்கிற அளவுக்கு புகுந்த வீட்டு அன்பிருந்தா நான் ஏன் அம்மா வீட்டுக்கு அடிக்கடி போகப்போகிறேன்?
11. மேக்கப் மோகனா. 12 பெண்ணாதிக்கவாதி 13. வேலில போறதை
மடிலவிட்டு ஒரண்டை இழுப்பவள். 14. சுயநலப்பேய். 15. புள்ளபூச்சி போல
நொச்சரிப்பவள். 16. சீரியல் கிறுக்கி 17. யாரையும் அட்ஜஸ்ட் பண்ணி போக
விரும்பாத ஒத்தைக்குரங்கு. 18. ஈறை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்குபவள். 19.நொறுக்குத் தீனிகாரி 20. ஊர் சுற்றி 21. குடும்பஉறவுகளை புரிந்த கொள்ளாதவள். 22.வம்புசண்டைக்காரி 23. படித்தும் வேலைக்கு போகாத வாழைப்பழ சோம்பேறி. 24.கனவுகளில் மிதப்பவள். 25. வாழ்க்கையை நாவல் போல பாவிப்பவள்… இந்த மேற்சொன்ன 25 வார்த்தைகள் அல்லது வாக்கியங்களை நீ பேசக்கூடாது!”
“மீறி பேசினால்?”
“மீறி முதல் தடவை பேசினால் ஒருவாரத்துக்கு தாம்பத்யம் கிடையாது. மீறி
இரண்டாவது தடவை பேசினால் ஆறுமாதத்துக்கு தாம்பத்யமும் வீட்டு சமையலும் கிடையாது. மூன்றாவது தடவை பேசினால் விவாகரத்து. விவாகரத்துக்கு முன் நமக்கு குழந்தை இருந்தால் என்ன செய்யவேண்டும் தெரியுமா? ஆண்குழந்தை என்றால் அது என்னிடம் வளரும். பெண் குழந்தை என்றால் அது உன்னிடம் வளரும்.
இருபது ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திடு. சாட்சி கையெழுத்து இரண்டு ஏற்கனவே வாங்கி வந்துவிட்டேன். கையெழுத்திட்டு ஒரு காப்பியை நீ வைத்துக்கொள். ஒரு காப்பியை நான் வைத்துக் கொள்கிறேன்.!”
ஸ்தம்பித்தான் ஆர்வா.
சில நொடிகள் கரைந்தன.
“உன்னிடம் என் ஸ்வீப்பர்ஸெல் ஒன்று உள்ளது. அது உன் ஐம்பது
வாக்கியங்களை பற்றி முன்னமே என்னிடம் போட்டு உடைத்துவிட்டது. உன்
பத்திரத்ல நானும் என் அம்மாவும் கையெழுத்திடுவதற்கு முன் நான் வைத்திருக்கும்
பத்திரத்தை படித்து நீ கையெழுத்திடவேண்டும்!”
ஒரு பத்திரத்தை நீட்டினான். அதில்-
‘பணம் புகழ் பதவி அழகு நிறம் ஈகோ மற்ற அகபுறகாரணிகளை முழுவதும்
தலையை சுற்றி விட்டெறிந்து விட்டு தாம்பத்யத்தை வெற்றிகரமாக நடத்தி
மகிழ்ச்சிகரமான முன்னுதாரண தம்பதிகளாய் திகழ்வோம். நெகடிவ் வார்த்தைகளை பேசுவதற்கு முன் வாய்க்குள் தணிக்கை செய்வோம். உறவுகள் நிர்வகிப்பு ஆண்பெண்நிர்வகிப்பை சிறப்பாக செய்தால் கணவன் –மனைவிக்கிடையே எந்த பிரச்சனையும்
வராது. எது கிடைத்தததோ அது சிறப்பானது என தெளிவடை மனமே!’
கணவனின் ஒப்பந்தம் மோகனாவின் நெஞ்சில் ஆணி அறைந்தது. தனது
ஒப்பந்தத்தை கிழித்து எறித்தாள். “உன்னுடைய ஒப்பந்தம் தேவைப்படாத போது என்
ஒப்பந்தமும் தேவைப்படாது!” தனது ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தான் ஆர்வா.
இருவரும் தாம்பத்யத்துக்குள் விடியவிடிய ஆழ்கடல் நீச்சலடித்தனர்.
“அடியே ராட்சசி!” கொஞ்சினான். “போடா அம்மாகோண்டு!” கொஞ்சினாள்
கொஞ்சலில் வார்த்தைகள் சுயம் இழந்து விடுகின்றன.
Leave a comment
Upload