தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் - 45-

20220622185906766.png

சென்னை பெருநகரில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர் ஆட்சி புரிந்துள்ளனர்

தொண்டைமான் இளந்திரையனிற்கு பிறகு, காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு, சென்னை பெருநகரை உள்ளிட்ட தொண்டை மண்டலத்தையும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளையும் கி.பி. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரை சுமார் ஆறு நூற்றாண்டுகள் பல்லவர் ஆட்சி புரிந்துள்ளனர்.

பல்லவர் ஆட்சிக் காலத்தை வரலாற்று அறிஞர்கள் நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர் -- பிராகிருத மொழியில் பல்லவ சாசனங்கள் வழங்கிய காலம், சமஸ்கிருத பல்லவ சாசனங்கள் வழங்கிய காலம்; பல்லவன் கல்வெட்டு காலம், குறிப்பாக சிம்மவர்மன் வழியை பின்பற்றியவர்கள்; சக்திவாழ்ந்த நந்திவர்மன் பல்லவமல்ல (731-796 CE) வழியை பின்பற்றியவர்கள் -- 9ம் நூற்றாண்டின் இறுதியில் விஜயாலய சோழர்கள் வம்சத்தினர்களிடம் பல்லவர்கள் தோல்விபெறும்வரை.

சிலர் பல்லவர் ஆட்சிக் காலத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர் -- தொடக்க காலத்திலிருந்து ஆறாம் நூற்றாண்டின் இடை வரை ஒரு பகுதி; ஆறாம் நூற்றாண்டின் இடையிலிருந்து எட்டாம் நூற்றாண்டின் இடைவரை உள்ளது இரண்டாவது பகுதி; எட்டாம் நூற்றாண்டின் இடையிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை உள்ளது மூன்றாவது பகுதியாகும். முதல் பிரிவில் உள்ள பல்லவ மன்னர்களைப் பற்றிய விவரங்கள் அதிகமாகத் தெரியவில்லை. இந்தக் காலத்தைச் பிராகிருத மொழியில் பல்லவ சாசனங்கள் வழங்கிய காலம், சமஸ்கிருத சாசனங்கள் வழங்கிய காலம் என இருவகையாக பிரிக்கின்றனர்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சிம்மவர்மன் என்பவன் பல்லவ நாட்டை ஆட்சி செய்தான். அவன் மகன் சிம்ம விஷ்ணு சோழ நாட்டைப் பல்லவ அரசோடு இணைத்துக் கொண்டதுதான் பல்லவர் பற்றிக் கிடைக்கும் முதல் செய்தியாகும். அதிலிருந்து 8-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை சிம்ம விஷ்ணு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்தனர். இதே காலகட்டத்தில் வாதாபியைச் சாளுக்கிய வம்சத்தினர் ஆட்சி புரிந்தனர். வடக்கே ஹர்சவர்த்தனர் ஆட்சியும், தெற்க்கே மதுரையில் கடுங்கோன் தலைமையில் பாண்டியர் மீண்டும் தங்களது அரசை நிறுவியும் ஆட்சி செய்ய தொடங்கினர்.

20220622190029976.jpg

காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு முற்காலப் பல்லவர்ளைப் பற்றித் தரும் தகவல்கள்:

பல்லவரின் தோற்றம் குறித்துத் தெளிவான கருத்துகள் இல்லை. பல்லவர் தமிழகத்தைச் சாராதவர்கள் என்றும் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. பாரத்துவாஜ கோத்திரத்தைச் சார்ந்த பல்லவ வம்சத்தைச் சார்ந்தவன் ஒருவன் நாக அரசன் மகளை மணந்து ஆட்சிப் பீடம் ஏறியதாக இவர்களுடைய சாசனங்கள் தெரிவிக்கின்றன.

சோழ மன்னனான கிள்ளி என்பவன் நாகலோகம் சென்று நாக கன்னிகை ஒருத்தியை மணந்து அங்கே சில காலம் தங்கியிருந்தான். தனக்குப் பிறந்த பிள்ளைக்குத் தொண்டைக் கொடி ஒன்றினை அடையாளமாகக் கட்டி அவன் தந்தையான சோழ மன்னனிடம் சேர்க்கப் படகு மூலம் அனுப்பி வைத்தாள். அது கடலில் மூழகவே, நீரில் மிதந்து வந்து கரை சேர்ந்த குழந்தையைத் தொண்டைக் கொடியின் அடையாளம் கண்டு சோழ மன்னன் எடுத்து வளர்த்துத் தன் நாட்டின் திரு பகுதிக்கு முடிசூட்டி வைத்தான். தொண்டைக் கொடியின் அடையாளத்தோடு வந்ததால் "தொண்டைமான்" என்றும் கடல் திரையால் கரை சேர்ந்ததனால் "திரையன்" என்றும் அவன் பெயர் பெற்றான். இந்த இளந்திரையன் காஞ்சியில் அரசாண்டான் எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இதை வலுவூட்டும் வண்ணம் தளவானூரிலுள்ள முதலாம் மகேந்திரவர்மனின் தமிழ்க் கல்வெட்டொன்று அவன் தொண்டை யந்தார் வேந்தன் எனக குறிப்பிடுகிறது. இதிலிருந்து பல்லவர்கள் தொண்டைமான் என்ற விருதைச் சூட்டியிருந்தனர் என்பதை அறியமுடிகிறது.

இளந்திரையனின் தந்தையான சோழமன்னன் கிள்ளி மணந்த நாககன்னியின் பெயர் பீலிவளை என்றும், அவள் தந்தையின் பெயர் வளைவணன் என்றும் மணிமேகலை கூறுகிறது.

'பல்லவர்கள் பரத்வாசர், துரோணர், அசுவத்தாமன், பல்லவன் என்ற வரிசையிலே வந்தவர்கள்'

பல்லவர் தங்களைப் பிரம்மக்ஷத்திரியர் என அழைத்துக் கொண்டது பற்றிக் காசாக்குடிச் செப்பேடு தெரிவிக்கிறது. அவர்கள் தங்கள் வம்சத்தினர் விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றிய பிரம்மாவிடமிருந்து அங்கிரஸ், பிரகஸ்பதி, சம்யு, பரத்வாசர், துரோணர், அசுவத்தாமன், பல்லவன் என்ற வரிசையிலே வந்தவர்கள் எனக் கூறிக் கொண்டவர்கள். அவர்களுடைய சாசனங்களில் இந்த முறையே காணப்படுகின்றது.

20220622190224553.jpg

முற்காலப் பல்லவர்

கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வேலூர்ப் பாளையச் செப்பேடு பல்லவ அரச மரபினைரைப் பற்றிக் கூறுகிறது. அதில் வீரகூர்சன் என்பவன் நாகராஜன் மகளை மணந்துகொண்டு அரசைக் கைக்கொண்டான், அவளையடுத்து ஸ்கந்தவர்மன், மூன்றாம் அரசனாகக் குமார விஷ்ணு, நான்காம் அரசனாகப் 'புத்தவர்மன்' என்ற பெயர்களைக் குறிப்பிடுகின்றது. வாயலூரில் கிடைக்கும் கல்வெட்டிலும் பல்லவ அரச மரபின் பட்டியலில் இந்நான்கு அரசர்களும் இதே வரிசையில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

பல்லவ சாசனங்களில் கிடைத்தவற்றுள் மிகவும் பழமை யானது மயிதவோலு செப்பேடுகள் ஆகும். பிராகிருத மொழியில் உள்ளது. அச்செப்பேடு சிவஸ்கந்தவர்மன் இளவரசனாக இருந்தபோது அளிக்கப்பட்டதாகும். செப்பேட்டு முத்திரையில் சிவஸ்கந்தவர்மன் என்று சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதே மன்னனின் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட மற்றொரு சாசனம் ஹிரஹத ஹள்ளிச் செப்பேடாகும்.

இவனே பல்லவ வம்சத்தின் முதல் அரசன் எனவும் இவன் ஸ்கந்தசிஷ்யன் எனப் பெயர் பெற்றிருந்தான் என்பதும் வரலாற்றாய்வாளர்களின் கருத்தாகும். இவனே காஞ்சியில் புகழ்பெற்றிருந்த கடிகையைச் சத்திய சேனனிடமிருந்து கைப்பற்றியுள்ளான். ஸ்கந்த சிஷ்யன் மகனான குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினான என்று வேலூர்ப் பாளையச் செப்பேடு தெரிவிக்கிறது. தந்தையின் ஆட்சியில் நடைபெற்ற போரில் இவனே முன்னின்று நட்த்தி வெற்றி கொண்டதால் இவன் கடிகையைக் கைப்பற்றினான் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இந் நான்கு அரசர்களும் ஒரே வம்சத்தின் வழி வந்தவர்கள் எனலாம். ஸ்கந்தவர்மன் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சி செய்துள்ளான். இவ்வழி வந்த அரசர்களின் ஆட்சி கி.பி. 4-ஆம் நூற்றாண்டின் இடையிலே முடிவடைந்து விட்டது.

வேலூர்ப்பாளையச் செப்பேடு புத்தவர்மன் காலத்திற்குப் பிறகு விஷ்ணுகோபன் ஆட்சி செய்தான். இவனுக்குப் பின் சிம்மவர்மன் தோன்றினான் எனக் கூறுகிறது. இதிலே குறிப்பிடப் பட்டுள்ள விஷ்ணுகோபனைப் பற்றிய செய்திகளை முழுமையாக அறியமுடிய வில்லை.

பல்லவர் ஆட்சியில் கோவில்கள், கல்வெட்டுகள்

பல்லவர் ஆட்சியில், மெல்ல மெல்ல, சைவமும் வைணவமும் (இந்து மதம்) வெற்றிநடைபோட்டன, கல்லினால் செய்யப்பட்ட நிறைய கோவில்கள் கட்டப்பட்டன, வரலாற்றை கூறும் ஏராளமான கல்வெட்டுகள் அமைக்கப்பட்டன.

அடுத்த சில வாரங்களில் பல்லவ காலத்தில் சென்னை பெருநகர் அடைந்த வளர்ச்சியையும் சாதனைகளைப் பற்றியும், இங்கே நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும்ப் பற்றி பகுதி வாரியாக ஆராய்வோம்.

-- (தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)