(அது சி.எஸ்.கே...)
இது டி.எம்.கே
அட்டைப் பட கட்டுரைக்கு முன்னால் தன்னுடைய 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு சுஜாதா எழுதிய ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியிலிருந்து.....
"மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.
மெரீனாவில் நடக்கும்போது
எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள்.
ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட்
பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.
நான் யோசித்து, ''கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.
"எதுக்குப்பா?"
"தொடுங்களேன்!"
சற்று வியப்புடன் தொட்டார்.
"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசையுங்கோ!" என்றேன்.
''இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன? என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.
"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."
"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.
"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.
அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"
"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன்னீங்க. மறந்துட்டீங்க!" என்றேன்.
தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன.
வயதானால் ஞாபகம் பிசுகுவது இயற்கை தான். வயதானால் நம்மூரில் சீனியர் சிட்டிசன்களுக்கு, அதிலும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு பல சலுகைகள் கிடைப்பதில்லை.
அரசியல் பதவிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
சமயத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது கட்சியில் உஷ்ணத்தை ஏற்படுத்தியது. திமுகவின் சீனியர் நிர்வாகிகளை ஸ்டாலின் எப்படி கையாளுகிறார் என்பது குறித்து அவர் பேசியது சிலர் ஜோவியலாக எடுத்துக் கொண்டாலும் , குறிப்பாக துரைமுருகன் பற்றி அவர் பேசிய பேச்சு தேவையற்றது. அந்த விழாவில் ரஜினி பேசியது முழுவதையும் இறுகிய முகத்துடன் தான் கவனித்து வந்தார் அமைச்சர் துரைமுருகன். அதே சமயம் மேடையில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ரசித்து சிரித்தாலும் மேடைக்கு கீழே அமர்ந்திருந்த மூத்த தலைவர்கள் ரஜினியின் பேச்சை ரசிக்கவில்லை.
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கட்சியை சீரமைக்க வேண்டும். இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். என்று பேசினார்,
பேசிக் கொண்டிருக்கிறார். இன்னமும் பேசிக் கொண்டுதான் இருப்பார். அவரால் நினைத்தபடி கட்சியில் பெரிய அளவு எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை.
உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி பொறுப்பாளராக பொறுப்பேற்ற பிறகு இளைஞர் அணி நிர்வாகிகள் ஆட்சியிலும் கட்சியிலும் எங்களுக்கு முக்கிய பதவிகள் தர வேண்டும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் சற்று உரக்கவே பேச ஆரம்பித்தார்கள் .
பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார், என்று சொல்லப்பட்டது. கலைஞர் தொலைக்காட்சியில் மூத்த அமைச்சர் உட்பட மூன்று பேர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட இருக்கிறார்கள் மூன்று புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்று பிரேக்கிங் நியூஸ் போனது. இது பற்றி முதலமைச்சரிடம் நிருபர்கள் கேட்டபோது எனக்கு அப்படி எந்த தகவலும் வரவில்லை என்று சொன்னார்.
அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு கூட நிருபர்களிடம் அமைச்சரவை மாற்றம் பற்றிய கேள்விக்கு (நீண்ட தாமதத்திற்க்குப் பின்) மாற்றம் ஒன்றே மாறாதது வெயிட் அண்ட் ஸீ என்று சொல்லி இருக்கிறார் முதல்வர்.
துரைமுருகன் பற்றி ரஜினி பேச்சு ஏவா வேலு ரஜினியிடம் சொல்லி பேசச் சொன்னதாக மூத்த அமைச்சர்கள் ஏவா வேலு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். துரைமுருகனும் பல் போன நடிகர்கள் எல்லாம் இன்னும் சினிமாவில் இருந்து கொண்டு இளைஞர்களுக்கு வழி விடாமல் இருக்கிறார்கள் என்று ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசினார். இது ஸ்டாலினை கொஞ்சம் டென்ஷன் படுத்தியது. ரஜினி நம் விழாவுக்கு வந்த விருந்தாளி அவர் நகைச்சுவையாக பேசியதை ஏன் இவர் சீரியஸாக எடுத்துக் கொள்கிறார். உடனே துரைமுருகனிடம் பேசி சரி செய்ய சொல்லுங்கள். இல்லையென்றால் என் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் துரைமுருகனுக்கு எச்சரிக்கை செய்ய அதன் பிறகு துரைமுருகன் நான் நகைச்சுவையாக பேசியதை பகைச்சுவையாக ஆக்காதீர்கள் என்று பேட்டி தந்தார்.
திமுகவை பொருத்தவரை அண்ணா ஆரம்பித்த போது அது இளைஞர்களின் பாசறை படித்தவர்களின் இருப்பிடம் என்று இருந்தது. வழக்கறிஞர்கள் பட்டதாரிகள் என்று இளைஞர்கள் திமுகவை அப்போது மெய்த்துக் கொண்டிருந்தார்கள். அதே இளைஞர்கள் இன்று கிழைஞர்களாக தொடர்கிறார்கள்.
அமைச்சர் துரைமுருகனுக்கு வயது 86 அமைச்சர் முத்துசாமி வயது 75 பொன்முடி 74 கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் 75 அமைச்சர் ரகுபதி 74 அனிதா ராதாகிருஷ்ணன் 71 ராஜ கண்ணப்பன் 76அமைச்சர் காந்தி இப்படி பெரும்பான்மை அமைச்சர்கள் வயதேஎழுபதைத் தாண்டி விட்டது.முதலமைச்சர் ரஜினியை விட ஒரு வயது சிறியவர் அதாவது 71 வயது என்று மேடையிலேயே சொல்லியிருக்கிறார் மற்ற அமைச்சர்களிலும் பெரும்பாலோர் 60 பிளஸ்.
தி.மு.க என்பதை தா.மு.க.தாத்தாக்கள் முன்னேற்ற கழகம் என்று தான் சொல்ல வேண்டும். இளைஞர் அணி கூட்டத்தில் ஒரு இளைஞர் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை முதலில் இதை நீங்கள் உங்கள் அப்பாவிடம் தான் சொல்ல வேண்டும் அவருக்கும் வயதாகிவிட்டது உங்களிடம் பொறுப்பை ஒப்படைக்க சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார்.
நாங்கள் உதயநிதி ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்வோம் அதன் பிறகு அவர்கள் மகனையும் தலைவராக ஏற்றுக் கொண்டு வாழ்க கோஷம் போடுவோம் என்கிறார்கள் உடன்பிறப்புக்கள். ஒரே குடும்பம் தான் ஆட்சியில் இருக்க வேண்டுமா என்றால் அது நம் பிரச்சினையில்லை. அது அந்த கட்சிக்குள் நடக்கும் விஷயம்.
திமுகவில் மட்டும் தான் மூத்த குடிமகன்கள் தாத்தாக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம், எல்லாக் கட்சிகளிலும் இதே நிலைதான் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்பது எல்லாக் கட்சியிலும் வெற்று பேச்சாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை. மாநில கட்சி முதல் தேசிய கட்சி வரை இது தான் நிலைமை.
ஆனால் வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. செயல்பட முடிந்தால், அதிலும் சிறப்பாக செயல்பட முடிந்தால் எந்த வயதும் தடையில்லை. சீனியர்,அனுபவம் அதிகம் என்று மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தால் மட்டும் தான் பிரச்சினை.
Leave a comment
Upload