தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 72 - பரணீதரன்

20240507180228719.jpg

அந்தகக் கவி வீரராகவ முதலியார் அவர்களின் கவித்திறனை இந்த வாரமும் தொடர்கிறார் நமது பரணீதரன்.

ஒருமுறை அந்தகக் கவி வீரராகவ முதலியார் அவர்கள் திருச்செங்காட்டில் உள்ள பிள்ளையாரை வணங்கி நிற்கிறார். பிள்ளையார், தேவியர் இல்லாமல் தனியாக நிற்பதை பார்த்தவர் பின்வருமாறு ஒரு செய்யுளைப் பாடுகிறார் :

வீரஞ்சொரி கின்றபிள்ளா யுனக்குப் பெண்வேண்டு மென்றால்

ஆருங்கொடா ருங்களப்பன் கபாலி யம்மான் திருடன்

ஊருஞ்செங் காடுநின்றன் முகம்யானை யுனக்கிளையோன்

பேருங்கடம்ப நின்றாய்நீலி நிற்கும் பெருவயிறே

அதாவது, வீரம் சொரிகின்ற இளம் பிள்ளையாக இருக்கும் உனக்கு மனைவி வேண்டுமென்றால் பெண் கொடுப்பதற்கு யாரும் வரமாட்டார்கள். அதற்கு காரணம் உங்களுடைய அப்பா கபாலி, அம்மான் ஆகிய மாமா திருடன், உங்களுடைய ஊர் செங்காடு, உங்கள் முகமும் யானைமுகம், உங்களுடைய இளையவர் ஆகிய உங்கள் தம்பியின் பெயர் கடம்பன், உங்களுடைய தாய் நீலி, உங்கள் வயிறோ மிகவும் பெரிதாக உள்ளது. அதனால் உங்களுக்கு பெண் கிடைப்பது மிகவும் கடினம் என்று வஞ்சப்புகழ்ச்சியாக பாடுகிறார்.

அதாவது கபாலி என்பதற்கு கபாலங்களை (மண்டை ஓடுகளை) வைத்திருப்பவர் என்று பொருள். பொதுவாக மண்டை ஓடுகளை பிச்சை எடுப்பவர்களும் மந்திரவாதிகள் என வைத்திருப்பார்கள். ஆனால் சிவபெருமானுக்கு அது மிகவும் ஏற்றமானது. சிவபெருமானே இவருடைய தந்தை என்று பெருமையாக கூறுகிறார். இவருடைய மாமாவாகிய மகாவிஷ்ணு கிருஷ்ணா அவதாரத்தில் வெண்ணையை திருடி சாப்பிட்டார். அதனால் இவருடைய மாமாவை திருடன் என்று கூறுகிறார். மகாவிஷ்ணுவே இவருக்கு மாமாவும் இருப்பது மிகவும் பெருமையாகும். அதைத்தான் இங்கே கூறுகிறார்.

அடுத்ததாக இவருடைய ஊர் திருச்செங்காட்டங்குடி என்று கூறப்படுகின்ற இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். சாளுக்கியர்களின் தலைநகரமாகிய வாதாபியை (பாதாமி) பல்லவர்கள் அழித்தபின் அங்கிருந்த பிள்ளையாரை அன்றைய பல்லவ படைத் தளபதியான பரஞ்சோதி அவர்களால் அவர் வாழ்ந்த ஊரான திருச்சங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். இந்த பரஞ்சோதியே பின்னாளில் பிள்ளைக்கறி அமுது செய்வித்த சிறுதொண்ட நாயனார் என்கிற நாயன்மாராவார்.

செங்காடு என்பதற்கு சிகப்பான மண்ணை உடைய காட்டுப்பகுதி என்று ஒரு பொருள் உண்டு, சுடுகாடு (சிகப்பான நெருப்பு எரியும் காடு) என்பதை மங்கல சொல்லாகவும் இவ்வாறு கூறுவர். காட்டிலும் மேட்டிலும் எல்லா இடத்திலும் இருப்பவர் பிள்ளையார் என்பதை இங்கு புலவர் எடுத்துரைக்கிறார்.

இவர்க்கு ஆனைமுகத்தான் என்று ஒரு பெயர் உண்டு. இவரது முகம் யானையை போல் உள்ளது என்று கூறுகிறார். பொதுவாக யானைக்கு ஞானம் மற்றும் ஞாபக சக்தி மிகவும் அதிகம். அதனால் தான் பிள்ளையாருக்கு யானை முகத்தை நமது முன்னோர்கள் கொடுத்தார்கள். இவர் ஞானம் மற்றும் ஞாபக சக்திக்கான கடவுள். இவருடைய தம்பியின் பெயர் கடம்பன் என்று கூறுகிறார். கடம்பன் என்று சொல்லிற்கு இரண்டு விதமான பொருள் உள்ளது. கடம்ப மாலையை அணிந்தவன் என்று ஒரு பொருள் உண்டு. மற்றொரு பொருள் - கடுமையானவன், முரட்டுத்தனமானவன், கடுமையாக பேசுபவன். இதிலும் புலவர் வஞ்சப்புகழ்ச்சியை பயன்படுத்தியுள்ளார். கடம்ப மாலையை போட்டுக் கொண்டிருக்கும் முருகனுக்கே அண்ணனாக இருப்பவர் என்று இவரை புகழ்ந்துள்ளார். ஆனால் வெளிப்படையாக பார்த்தால் முரடனிற்கு அண்ணன் என்று பொருளில் இந்த பாடல் அமைந்துள்ளது.

பிள்ளையாரின் தாய் நீலி என்று புலவர் கூறுகிறார். நீலி என்பதற்கு இரண்டு விதமான பொருள்கள் உள்ளது. கருநீல நிறத்தை (நாகப் பழத்தின் நிறம்) உடையவள் என்று ஒரு பொருள். கொடியவள், பேய், பேய் போன்றவள் என்று ஒரு பொருளும் உள்ளது. உள்ளார்த்தமாக பார்த்தால் கருநீல நிறத்தை உடைய பார்வதியின் பிள்ளை என்று புலவர் புகழ்கிறார். வெளிப்புறமாக பார்த்தால் பேயினுடைய பிள்ளை என்று பொருளில் இந்த பாடல் இருக்கும்.

இவருடைய வயிறு மிகவும் பெரியது என்று இகழ்வது போல புகழ்ந்துள்ளார். இந்த மொத்த அண்ட சராசரத்தையும் தன்னுடைய வயிற்றுக்குள்ளேயே வைத்து அனைத்து உயிர்களையும் காப்பதால் இவரது வயிறு மிகவும் பெரிதாக உள்ளது. அதைத்தான் புலவர் இங்கே பெருமையாகக் கூறுகிறார். இப்படிப்பட்ட மிகப்பெரிய சிறப்புகளை உடைய பிள்ளையாருக்கு பெண் கொடுப்பதற்கு யாருக்கும் தகுதி இல்லை என்பதையே இங்கு சூசகமாக கூறுகிறார். இப்படி வஞ்சப்புகழ்ச்சியில் இவரும் சில பாடல்களை பாடி உள்ளார்.

இலங்கை மன்னராகிய பரராசசேகரனுக்கு மனதிலே இரண்டு ஐயம் (சந்தேகம்) தோன்றியது. அவருடைய மனைவியாகிய பட்டத்து ராணி அவரிடம் ஏன் கோபமாக இருக்கிறார் என்பதை முதல் சந்தேகம். அவருடைய தோட்டத்தில் உள்ள கிளிகள் தங்கள் கூடுகளில் இருந்து வெளியே வருவதும் மீண்டும் உடனே உள்ளே செல்வதும் மீண்டும் உடனே வெளியே வருவதுமாக இருப்பது ஏன் என்பது மற்றொரு சந்தேகம். இந்த இரண்டு சந்தேகங்களும் மன்னனின் மனதை போட்டு வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. இதை கண்ட சித்தி என்கிற ஒரு அபூர்வ கலையால் உணர்ந்த நமது புலவர், இந்த இரண்டு சந்தேகங்களுக்கும் ஒரு செய்யுளின் மூலமாக விடையை கூறி மன்னரின் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார். அந்த செய்யுள் :

வடவைக்கனலைப் பிழிந்துகொண்டு மற்றுமொரு கால்வடித் தெடுத்து,

வாடைத்துருத்தி வைத்தூதி மறுக்காய்ச்சிக் குழம்புசெய்து

புடவிக்கயவர் தமைப்பாடிப் பரிசுபெறாமற் றிரும்பிவரும்,

புலவர்மனம் போற்சுடு நெருப்பை புழுகென் றிறைத்தாற் பொறுப்பாளோ

அடவிக்கதலிப் பசுங்குருத்தை நச்சுக்குழலென் றஞ்சியஞ்சி,

அஞ்சொற்கிளிகள் பஞ்சரம்விட் டகலாநிற்கு மகளங்கா

திடமுக்கட வாரணமுகைத்த தேவேதேவ சிங்கமே,

திக்குவிசயஞ் செலுத்திவரு செங்கோனடாத்து மெங்கோனே

2024050718082565.jpg

குதிரை முகம் கொண்ட வடமுகாக்னியை (கடலின் வடக்கு பகுதியில் உள்ள தீ. உலகம் அழியும் பொழுது எழக்கூடிய ஊழித் தீ) பிழிந்து, அதை நாலில் ஒரு பங்காக சுருக்கி வடித்து, வடக்கிலிருந்து வேகமாக வீசும் வாடைக்காத்தை துருத்தி போல பயன்படுத்தி அந்த நெருப்பை நன்றாக ஊதி மீண்டும் காய்ச்சி அல்ல குழம்பு போல செய்து, இந்த பூமியில் உள்ள கயவர்களைப் பாடி, அந்த கயவர்களால் பரிசு பெறாமல் திரும்பி வரும் புலவர் மனம் போல சுடுகின்ற நெருப்பை இறைத்தால் அவள் பொறுப்பாளோ என்று முதல் சந்தேகத்தை தெரிவிக்கிறார். அதாவது மன்னர் இதோ காரணத்தால் அரசியை கோபத்தில் திட்டி இருக்கிறார். அது அவளுக்கு மேலே சொன்ன நெருப்பை போலவும், பரிசு பெறாமல் திரும்பிய புலவரின் மனம் போலவும் சுடுகின்றது என்று மன்னரிடம் கூறி அவளை சாந்தப்படுத்தும் படி புலவர் கூறியது.

20240507180917219.jpg

அடுத்ததாக, காடுகளில் உள்ள வாழை தோப்பில் இருக்கும் பசுமையான வாழைக் குருத்தை, விஷம் உள்ள குழல் என்று நினைத்து பயந்து அந்த கிளிகள் அவர்களின் இடத்தை விட்டு அகலாமல் நிற்கும் மிகப்பெரிய யானையை போன்ற மழையை உடைய தேவர்களுக்கெல்லாம் தேவனான சிங்கத்தைப் போன்றவனே, நான்கு திக்குகளிலும் வெற்றி வாகை சூடி வரும் செங்கோல் நெறி தவறாமல் எங்களை ஆளும் அரசனே என்று பாடுகிறார். இதில் இரண்டாவது பதிலையும் கூறிவிடுகிறார். வாழைக் குருத்துக்களை பார்த்து அவைகள் விஷ அம்புகளை ஏவும் நஞ்சு குழல் என்று பயந்து தான் கிளிகள் வெளியே வருவதும் போவதுமாக பயந்து கொண்டிருக்கிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

அடுத்த வாரம் இவர் இறந்தபின் இவருக்கு பாடிய ஒரு பாடலை பார்த்துவிட்டு நாம் மற்ற புலவர்களை பற்றி பார்க்கலாமா என்று விடை பெறுகிறார் நமது பரணீதரன்.