தொடர்கள்
தொடர்கள்
‘தமிழுக்கு ஒரு முத்தம்’ – 12 - பித்தன் வெங்கட்ராஜ்

20240507124720639.jpg

'காலம் பொன் போன்றது' -பழமொழி.

நாளுக்கு நாள் மதிப்பு அதிகமாகிக்கொண்டேபோகும் சில பொருள்களில் முக்கியமான இடத்தைப் பெறுவது தங்கம். உலகிலேயே தங்கத்தை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த விஷயத்திலும் இந்தியாவுடன் போட்டியில் இருப்பது சீனாதான். ஆம், அந்த முதலிடத்தைச் சீனாதான் பெற்றிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்தைப் பெரிதும் விரும்பும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால்தான் கடந்த மாதம் வந்த 'அட்சய திரிதியை' அன்று மட்டும் சுமார் 14000 கோடி ரூபாய் அளவுக்கு ஆபரணங்களாகவும், காசுகளாகவும் தங்கம் விற்பனையாகியுள்ளது.

இப்படித் தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட தங்கம் என்ற சொல் நம் சங்கத் தமிழ் இலக்கியங்களில் இல்லை. அதனால், தமிழர்க்கும் தங்கத்திற்கும் தொடர்பில்லையோ எனக் கருதவேண்டாம். பொன், பொலம் ஆகிய சொற்களால் தங்கம் சங்க இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளது.

தங்கத்தில் நான்கு‌ வகைகள் உண்டு. அவை சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம் மற்றும் சாம்பூநதம் ஆகியவை ஆகும். இதனைச் சிலப்பதிகாரப் பாடலொன்று நமக்குத் தருகிறது.

2024050712484801.jpg

'சாதரூபம் கிளிச்சிறை ஆடகம்

சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின்

பொலம்தெரி மாக்கள் கலங்கஞர் ஒழித்தாங்கு

இலங்குகொடி எடுக்கும் நலம்கிளர் வீதியும்'

(சிலம்பு - ஊர்காண்காதை- வரிகள்: 201-204)

மேற்கூறிய நால்வகைப் பொன்னையும் ஆய்ந்தறிந்து வாங்கும் அறிவுடைய வணிகர்களின் குழப்பத்தைத் தவிர்க்க, இந்த வகைப் பொன் (இங்குப் பொலம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது) இங்கே விற்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாகக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருக்கக்கூடிய பொன்விற்கும் வீதி என்கிறார் இளங்கோ.

20240507124926468.jpg

பொன் பொதுவாக மஞ்சள் நிறமுடையது என்றாலும் அவற்றின் வேறுபட்ட நிறக் கலப்பை வைத்தே இவ்வகைகள் பிரிக்கப்பட்டுப் பெயர்வைக்கப்பட்டுள்ளன.

சாதரூபம் - மெல்லிய வெண்மை கலந்த பொன். சாதம் என்றால் சோறு. அந்தச் சோற்றின் நிறத்தைவைத்து இப்பெயர் வழங்கப் பெற்றிருக்கலாம். (சாதம் - வடமொழி என்று சிலர் கருதுவர். ஆனால், அதன் வேர் தமிழென்பதே என் போன்றோர் கருத்து)

கிளிச்சிறை - கிளியின் கழுத்துப் பகுதியின் நிறமான மெல்லிய சிவப்புக் கலந்த பொன். இறை என்றாள் தோள் என்றொரு பொருளுண்டு. கிளியின் தோள் என்று பொருள்கொள்ளலாம்.

20240507125001698.jpg

ஆடகம் - மெல்லிய பச்சை நிறம் கலந்த பொன். அடகு என்றால் கீரை, இலை என்றும் பொருள். இலையின் நிறம் பச்சை அல்லவா!

சாம்பூநதம் - மெல்லிய சாம்பல் நிறம் கலந்த பொன். நாவற்பழ நிறம். நாவற்பழத்தை ஆங்கிலத்தில் ஜாமூன் என்கின்றனர். சாம்பூ-விலிருந்து ஜாமூன் பிறந்திருக்கலாம்.

தங்கத்தின் இந்நிறவேறுபாடுகளுக்குக் காரணம் அவற்றோடு சேர்க்கப்படும் பிற உலோகங்களே ஆகும். தங்கத்தைச் சுத்தத் தங்கமாகவே வைத்து ஆபரணங்கள் செய்யமுடியாது என்பது அறிந்ததே.

தற்போதைய கேரட் போலல்லாமல் தங்கத்தைக் கழஞ்சு என்னும் அலகால் குறிப்பிடுவது சங்க கால வழக்கு.

'ஏர் உடைய விழுக் கழஞ்சின்,

சீர் உடைய இழை பெற்றிசினே' -புறம் 11

என்று பாடியுள்ளார் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

பலகழஞ்சுகளால் செய்யப்பட்ட பொன்னாபரணங்களைப் பரிசாகப் பெறுவது இவ்வரிகளால் குறிப்பிடப்படுகிறது. ஒரு கழஞ்சு என்பது 5.4கிராம் எடை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும்,

'ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து' -குறள் 155

என்றும்,

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. -குறள் 267

என்றும்,

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை உற்ற குடி. -குறள் 888

என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

இக்குறட்பாக்களின் பொருளையும், அக்குறட்பாக்கள் உள்ள பால்களையும் கொஞ்சம் நுணுகப் பார்க்கும்போது, ஒரு வியப்புத் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

தனக்குத் தீங்கிழைத்தவரையும் பொறுத்துக்கொள்பவர்களைப் பொன்னுக்கு நிகரானவர்கள் என்றும், நெருப்பிலிட்டுச் சுடும்போது தங்கம் அதன் மீதுள்ள மாசுகள் நீங்கி ஒளிர்கிறது என்றும் அறத்துப்பாலில் தங்கத்தை உயர்த்திப் பேசுகிறார். அதேநேரத்தில், அரத்தினால் தேய்க்கத் தேய்க்க பொன்னானது தேய்ந்து இல்லாமலே அழிந்துகூடப் போய்விடும் என்று தங்கத்தின் நிலையாமையைப் பொருட்பாலில் குறிப்பிடுகிறார்.

இப்படி அறத்தை வலியுறுத்தும் அறத்துப்பாலில் பொன்னின் சிறப்புகளைக் கூறி, பொருளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்பாலில் பொன்னின் நிலையாமை பற்றி அறிவுறுத்திய ஐயன் வள்ளுவனின் நுண்ணறிவுக்குத் தலைவணங்கி அவனுக்கொரு தமிழ்முத்தம் தந்தோம்.

அவர்க்கும் நமக்கும் யாவர்க்கும் பொன்னாம் நம் தமிழுக்கு இது பன்னிரண்டாவது முத்தம்.

முத்தங்கள் தொடரும்.

-