இந்த வாரம் தமிழிசையை பற்றி பார்ப்போம் என்று சென்ற வாரம் சொன்னபடியே பரணீதரன் ஆரம்பிக்கிறார்.
பல மொழிகளில் இல்லாத சிறப்பு தமிழுக்கு உள்ளது. இசைக்கென்றே தனியான தமிழினை நமது முன்னோர்கள் வகுத்துக் கொடுத்துள்ளனர். அதனை இசைத்தமிழ் என்று நாம் இப்பொழுது கூறுகிறோம்.
மக்களுடைய வாழ்க்கையில் இன்றியமையாததாக இருந்த இசையினை அவர்கள் ஒரு தனி தமிழாகவே பிரித்து வைத்துள்ளனர். நாம் முன்பே பார்த்தது போல ஒவ்வொரு நிலத்திற்கும் அந்த நிலத்திற்குரிய பண், யாழ் மற்றும் பறை இருந்துள்ளது. புலவர்கள் உருவாக்குகின்ற செய்யுள்களை அதற்குரிய பண்களில் பண் அமைத்து பாடுவதற்கு பாணர்கள் இருந்துள்ளனர். திருப்பாணாழ்வார் இப்படிப்பட்ட பாணர் குலத்தில் அவதரித்தவரே ஆவார்.
அதேபோல யாழை மீட்டி பாடக்கூடிய பாணர்கள் இருந்த ஊர்தான் இன்றைய இலங்கையில் உள்ள யாழ்பாணம். யாழ்பாணர்கள் என்ற ஒரு குலமே முன்பு இருந்தது. பண்ருட்டி என்று நாம் அழைக்கக்கூடிய பண் உருட்டியிலும் பல்வேறு விதமான பண்களை அமைத்து பாடக்கூடிய பாணர்கள் இருந்தனர். வரகுண பாண்டியன் அவையிலிருந்த நமக்கு திருவிளையாடல் படத்திலிருந்து தெரிந்த பாணபத்திரரும் இந்த குலத்தை சார்ந்தவரே. இதே போல இலங்கை வேந்தனாக இருந்த இராவணனும் இசைக் கலையில் தேர்ச்சி பெற்று கையிலையில் இருந்த சிவபெருமானையே தன்னுடைய காம்போதி இராகத்தால் மனம் குளிர வைத்ததாக வரலாறு கூறுகிறது. இசை மேலிருந்த அளவற்ற ஆர்வத்தால் தன்னுடைய கொடியிலேயே வீணையை பொறித்த சிறப்பு இராவணனை சாரும். இப்படி தமிழ் இலக்கியத்தில் நெடுங்காலமாக இசைக்கு இருந்த புகழினை கீழ்வரும் சங்ககால நூல்களில் நாம் தெரிந்து கொள்ளலாம் :
அகத்தியம்
இசை நுணுக்கம்
இந்திர காளியம்
பஞ்சபாரதீயம்
பஞ்சமரபு
பெருங்குருகு (முதுகுருகு)
பெருநாரை (முதுநாரை)
தாளவகை யோத்து
சிலப்பதிகாரம்
திருப்புகழ்
தேவாரம்
நாலாயிர திவ்ய பிரபந்தம்
அந்த காலத்தில் இருந்த இராகங்களின் அந்த காலத்து பெயர் மற்றும் இந்த காலத்து பெயர்களை கீழே பார்க்கலாம் :
செவ்வழி = யதுகுல காம்போதி
சதாரி = காம வர்த்தினா
வியாழக் குறிஞ்சி = சௌராஷ்டிரம்
பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி
இந்தோளம் = மாய மாளகௌளம்
புறநீர்மை = பூபாளம் /ஸ்ரீகண்டி
நட்டராகம் = பந்துவராளி
நட்டபாடை = நாட்டை
கொல்லி = பிலஹரி
கொல்லி கவ்வாமை = நவரோகி
தக்கேசி = காம்போதி
தக்கராகம் = ஏகதேச காம்போதி
நேரிசை = சிந்து கன்னடா
குறிஞ்சி = மலகரி
கௌசிகம் = பைரவி
காந்தார பஞ்சமம்= கேதார கௌளம்
பழம்பஞ்சுரம் = சங்கராபரணம்
மேகராக குறிஞ்சி == நீலாம்பரி
குறுந்தொகை = நாதநாமக்கிரியை
அந்தாளிக் குறிஞ்சி = சாமா / சைலதேசாட்சி
செந்துருத்தி = மத்யமாவதி
திருத் தாண்டகம் = ஹரிகாம்போதி
பஞ்சமம் = ஆஹிரி
ஏகாமரம் = புன்னாக வராளி
சீகாமரம் = நாதநாமக்கிரியை
கொல்லி, கொல்லிக்கௌவாணம் = சிந்து கன்னடா
டி.தண்டபாணி தேசிகர் அவர்கள் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு வரையறை கூறுகிறார்.
5-6 மணி (காலை நேரம்) பூபாளம்
6-7 மணிக்கு பிலஹரி
7-8 மணிக்கு தன்யாசி
8-10 மணிக்கு ஆரபி, சாவேரி
10-11 மணிக்கு மத்யமாவதி
11-12 மணிக்கு மனிரங்கு
12-1 மணி (மதிய நேரம்) ஸ்ரீராகம்
1-2 மணிக்கு மாண்டு
2-3 மணிக்கு பைரவி, கரகரப்பிரியா
3-4 மணிக்கு கல்யாணி, யமுனா கல்யாணி
4-5 மணிக்கு (மாலை நேரம்) காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்
இப்படி இசையைப் பற்றிய பல்வேறு விதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பழங்கால தமிழர்கள் அவற்றுக்கான வரையறைகளையும் முறைகளையும் உருவாக்கி வைத்துள்ளனர். ஒரு யாழ் இணை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பழந்தமிழ் இலக்கியமான பொருநராற்றுப்படை கூறுகிறது. அந்த செய்யுளும் அதற்கான விளக்கத்தையும் கீழே பாருங்கள் :
குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல்
விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை
எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ் வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை;
அளைவாழ் அலவன் கண் கண்டன்ன,
துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி;
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண் நா இல்லா அமைவரு வறுவாய்;
பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்;
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்;
கண் கூடு இருக்கைத் திண் பிணித் திவ்வின்
ஆய் திணை யரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;
மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன,
அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி;
ஆறு அலை கள்வர் படை விட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை
யாழை ஓர் உறைக்குள் வைத்திருக்கிறார்கள். அதன் குடம் நடுவில் மேடாகவும் இரு பக்கமும் பள்ளமாகவும் இருக்கிறது. அதைப் பார்த்தால் மான் குளம்பினால் அழுத்திய இடம் எப்படி இடையில் மேடும் இரு பக்கமும் பள்ளமுமாக இருக்குமோ அப்படி இருக்கிறது. யாழை மூடிய உறை சிவப்பாக இருக்கிறது. விளக்கினுடைய எரிகின்ற நிறத்தைப் போன்றது அது. அதை இறுக்கித் தோற் போர்வையினல் மூடியிருக்கிறர்கள். யாழின் மேற் போர்வையைத் தைத்துப் போட்டிருக்கிறார்கள். இன்னும் நன்றாகத் தெரியாத இளஞ்சூலையுடைய சிவந்த நிறமுள்ள அழகிய வயிற்றில் மெல்லியதாக மயிர் தொடர்ந்திருப்பது போல அந்தத் தையல் இருக்கிறது. குடத்தைத் தைப்பதற்கு ஆணிகளை முடுக்கியிருக்கிரார்கள். அந்த ஆணிகள் வளையில் வாழும் நண்டுகளின் கண்களைப் போல இருக்கின்றன. வீணையில் தலைப்புறம் வளைந்திருக்கிறது. அதன் முடிவில் மேல்நாக்கு இல்லாமல் அமைந்த வறிய வாயைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. அந்த வாய் எட்டு நாள் ஆன பிறையைப் போல இருக்கிறது. யாழினுடைய தண்டு பாம்பு தலையெடுத்தாற் போல ஓங்கின தண்டை - கரிய தண்டை உடையதாக உள்ளது. நரம்புகளே ஒன்றொடொன்று நெருக்கமாக அமையும்படி திண்ணிய கட்டுதலையுடைய வார்க்கட்டை உடையதாக இருக்கிறது. விரலால் சுண்டி அசைக்கும் நரம்புகளை உடைய யாழ் அது; அது அதிசய அழகினையுடைய தினையைக் குத்தின் அரிசிபோல இருக்கிறது. குற்றம் சிறிதும் இல்லாத நரம்புகள் அவை. திருமணம் செய்யும் மங்கையரை அலங்காரம் செய்தாற் போன்ற மாதங்கி என்னும் தெய்வம் தன்னிடத்திலே பொருந்தி நின்ற அமைதியை உடைய அழகையுடையதுமாக உள்ளது அது. அந்த யாழ் பாலையாழ் என்னும் வகையைச் சார்ந்தது. போகும் வழியில் ஆறலை கள்வராகிய வழிப்பறிக்காரர்கள் இந்த யாழின் இசையைக் கேட்டால் அதைக் கேட்டுத் தம்மை மறந்து நிற்பார்கள். அவர்கள் கையில் உள்ள படைகள் தாமே நழுவிவிடும். அருளுக்கு மாறாகிய கொடுமையை அவர்களிடமிருந்து நீக்கிவிடும். அத்தகைய மருவுதல் இனிய யாழ் அது.
இப்படி தமிழிசையை பற்றிய பல்வேறு குறிப்புகள் நமது நூல்களில் மிகவும் அதிகமாக கிடைக்கிறது. அடுத்த வாரம் தமிழிசையை பற்றிய இன்னும் சிறிது குறிப்புகளை பார்ப்போம் என்று விடை பெறுகிறார் பரணீதரன்.
Leave a comment
Upload