தொடர்கள்
ஆன்மீகம்
ராமா எனும் ரக்‌ஷை - ஜி ஏ பிரபா

20240015112528881.jpeg

இந்த பிரபஞ்சம் எங்கும் எல்லையற்ற சக்தி பரவி இருக்கிறது. அந்தச் சக்திக்கு வெவ்வேறு பெயரிட்டாலும் அது அனைத்தும் ராமா என்ற ஒரு சொல்லில் அடங்கி விடுகிறது.

மனிதர்களுக்குத் தங்கள் வாழ்வில் நடந்த துக்கங்கள்தான் பெரிதாக நினைவில் நிற்கிறது. அதைத் தாண்டி, அதன் மூலம் நிகழ்ந்த நன்மைகள், கிடைத்த ஆனந்தம் இவைகளை நினைத்துப் பார்ப்பதே இல்லை.

ஆனால் ராமன் ஆனந்தமாக இருப்பவன். மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தருபவன். அவனுக்கில்லாத துன்பங்களா? ஏற்படாத கஷ்டங்களா? என்றாலும் உள்ளுக்குள் ஆனந்தமாக, சுகதுக்கங்களில் சலனம் அடையாமல் ஒரு யோகியாக வாழ்ந்து காட்டியவன். வேதங்கள் கூறும் தர்ம நெறிகள் நமக்குத் தெரியாது. அவற்றை முழுமையாகக் கடைப்பிடிக்கவும் தெரியாது என்றாலும், அந்த வேதத்தின் சாரமாக, தர்ம நெறிப்படி வாழ்ந்து காட்டியவன். ராமா ராமா என்றாலே அந்த தர்ம நெறியும், நேர்மையும், உண்மையும் சத்தியமும் நமக்குள் குடி கொண்டு விடும்.

ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும் இது தன் கருத்து என்று சொல்லவே மாட்டான் ராமன். ரிஷிகள் சொல்கிறார்கள், வேதம் சொல்கிறது என்று தான் கூறுவான். சாந்தம், பணிவு, அடக்கம்,எளிமை மற்றும் மன்னிக்க தெரிந்தவன். சரணாகதி அடைந்தவர்களைக் கை தூக்கி அணைக்கும் அன்பான தாய்.

ஒழுக்கம் கட்டுப்பாட்டோடு வேத சாஸ்திரங்களில் கூறி இருக்கின்ற தர்மங்களை பின்பற்றி வாழ்ந்து உயிர்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக இருந்தவன் வேதப் பொருளாக இருந்த ராமன். காட்டிற்கு செல்லும்போது அவன் தாய் நீ அனுசரிக்கும் தர்மம் உன்னை காக்கும் என்று ஆசீர்வாதம் செய்துதான் அனுப்புகிறார். நியமம், விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்படுவது, தைரியம் துணிச்சல் அன்பு என்று வாழ்ந்தவன் பரம்பொருளான ராமன்.

“நீ அனுஷ்டிக்கும் தர்மம் உனக்கு எத்தனை கஷ்டங்களைத் தந்திருக்கிறது?” என்று லக்ஷ்மணன் பரிகாசம் செய்த போதும் அதை பொருட்படுத்தாமல் அதன் வழியில் நின்றவன் ராமன்.

ராமனை விட ராம நாமத்திற்கு வலிமை அதிகம்.

அந்த ராம நாமத்தினாலேயே பலம் பெற்று விளங்குகிறார் ஆஞ்சநேயர்.

சீதைக்கு எப்போதும் அனுமார் மேல் ஒரு பொறாமை உண்டு. அனுமான் வரும்போதெல்லாம் ராமரின் பார்வை ஆஞ்சநேயர் மீதே பதிந்திருக்கும். அது தெரிந்த ராமர் ஒரு முறை ஆஞ்சநேயர் உடம்பில் இருந்து ஒரு ரோமத்தைப் பிடுங்கி சீதையின் காதருகில் வைக்கும் போது அது ராமா ராமா என்று உச்சரித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது ராமர் சொல்கிறார் “பார்த்தாயா நான் அவனைப் பார்க்கவில்லை. ஆனால் அவன் ஆழ்ந்த பக்தியோடு கூறும் ராமா என்னும் நாமம் அவனிடம் என்னை ஈர்க்கிறது” என்கிறார்.

கடலில் அணை கட்டும் போது வானரங்கள் தூக்கிப் போடும் கற்கள் எல்லாம் சரியாக ஒன்றின் மேல் ஒன்று அமர்ந்தது. அதைப் பார்த்து ஆசையுடன் ராமரும் ஒரு கல்லைத் தூக்கி அந்த அணையின் மேல் போடுகிறார். ஆனால் கல் அடித்துச் சென்று கடலில் மூழ்கி விடுகிறது. அதைக் கண்டு ராமர் வருத்தப்படுகிறார். அப்போது ஆஞ்சநேயர் கூறுகிறார் “ பிரபோ! உங்களை விட உங்கள் நாமத்திற்கு வலிமை அதிகம். எனவேதான் உங்கள் நாமத்தைக் கூறி கல்லை எடுத்துப் போடுகிறோம். நீங்களும் அப்படிச் செய்திருந்தால், அந்த கல் மிகச் சரியாக மற்ற கற்களின் மேல் அமர்ந்திருக்கும்” என்று கூறுகிறார் அதோடு நில்லாமல் மேற்கொண்டு “ராமா அந்தக் கல்லை நீங்கள் தண்ணீரில் தூக்கிப் போட்டீர்கள். ராமனே என்னைக் கைவிட்ட பிறகு தான் ஏன் இருக்க வேண்டும் என்றுதான் அந்த கல் கடலில் மூழ்கி விட்டது” என்று சமாதானம் கூறுகிறார். சொல்லின் செல்வனாக விளங்கிய ஆஞ்சநேயர் ராமனுக்கே ராம நாமத்தின் பெருமையை உணர்த்துகிறார்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமாவென் றிரண்டெழுத்தால்”

என்கிறார் கம்பர்.

மகிமை வாய்ந்த ராம நாமம் சொல்வோம்.

அது கவசமாக நம்மைக் காக்கும்.

20240020093316826.png