நமது விகடகவியில் தொடர்ந்து வெளிவந்த அமெரிக்க வாழ் தமிழர் சரளா ஜெயப்பிரகாஷ் அவர்களின் பயண கட்டுரைகளின் தொகுப்பு அமெரிக்காவின் அழகிய அனுபவங்கள் என்கிற தலைப்பில் புத்தகமாக தொகுக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது.
குடும்ப விழாவாக துவங்கி இறுதியில் தமிழ் ஆர்வலர்களின் சங்கமமாக அமைந்த இந்த விழா அண்ணா பல்கலைக்கழகத்தின் முந்தைய மாணவர்கள் அமைப்பின் அரங்கத்தில் நடைபெற்றது விழாவிற்கு கலை மாமணி முனைவர் லேனா தமிழ்வாணன் அவர்கள் தலைமையேற்று புத்தகத்தை வெளியிட்டது மிகப் பொருத்தமாக அமைந்தது புத்தகத்தின் முதல் பிரதியை கிருத்திகா ராதாகிருஷ்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர் முரளிதரன் அவர்களும் பிரபல தொழில் ஆலோசகர் ஞானசேகரன் அவர்களும் உளவியல் ஆலோசகர் நமது விகடகவி எழுத்தாளர் ரேணுகா தினகரன்( ரேணு மீரா) அவர்களும் விகடகவியின் சார்பில் இந்த புத்தகத்தை தொகுத்து வெளியிட உதவிய வகையில் நானும் கலந்து கொண்டேன். பயண கட்டுரைகள் என்பது ஏகே செட்டியார்,தேவனிலிருந்து துவங்கி சாவி, சிட்டி, பரணிதரன்,இதயம் பேசுகிறது மணியன் லேனா தமிழ்வாணன் போன்றோர் வரை மிகச் சிறப்பாக இயங்கி வந்த தளம்.இன்று அந்த தளத்தில் செயல்பட அதிகமான ஆட்கள் இல்லை.சரளா ஜெயப்ரகாஷ் நமது விகடகவியில் தொடர்ந்து எழுதி வரும் போது, அதற்கு கிடைத்த பாராட்டுக்களும் வாசகர்களின் வரவேற்பும் நிச்சயம் இது புத்தகமாக தொகுக்கப்பட வேண்டும் என்பதை என்னுள் எண்ணமாக வலுப்பெற துவங்கியது.அதை நான் அவரிடம் தெரிவித்து முயற்சி செய்யுங்கள் உங்களுடைய முதல் புத்தகமாக இது அமையட்டும் என்று வாழ்த்தினேன். மிகுந்த யோசனைக்குப் பிறகு அவர் இதனை ஏற்றுக்கொண்டு பொறுப்பை என்னிடம் தந்தார். ஏன் நீங்கள் இதை புத்தகமாக்க விரும்புகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் நிச்சயம் இது புத்தகமாக வெளிவர வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியது. "நான் என்னுடைய எழுத்தை மின் இதழில் பார்த்து விட்டேன் ஆனால் இதை அச்சுப்பிரதியாக வெளிக்கொண்டுவந்து கைகளில் ஏந்தி படித்தும் சுகம் எனக்கு வேண்டும். மேலும் எனது நண்பர்களிடம் நான் இந்த புத்தகத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் .அதேபோல என்னுடைய பங்களிப்பாக எனக்குப் பிறகு இந்த உலகத்தில் நான் விட்டுச் செல்லும் மிக முக்கிய சொத்தாக இது இருக்க வேண்டும்" என்றார்
மேலும் இந்தப் புத்தகம் மேலே நான் சொன்ன எழுத்தாளர்களை நெருங்கும் விதமாய் அமைந்திருக்கிறது என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை, காரணம் அவருடைய சரளமான நடையும் படிப்பவர்களை அந்த இடத்திற்கே கொண்டு செல்லும் உத்தியாக தகுந்த புகைப்படங்களை தானே முயன்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருப்பதும் மிகச் சிறப்பான ஒன்று. பல புலம்பெயர்ந்த தமிழர்கள் அமெரிக்காவில் தற்போது வசித்துக் கொண்டிருப்பவர்கள் இவருடைய கட்டுரையை படித்து விட்டு நான் இந்த இடத்திற்கு பக்கத்தில் தான் வசிக்கிறேன் ஆனால் நான் இதனை கண்டதே இல்லை என்றும் இந்த இடத்தை நான் ஏற்கனவே பார்த்து இருக்கிறேன் ஆனால் ஆசிரியர் கூறியது போல் இவ்வளவு விஷயம் அங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது மீண்டும் ஒருமுறை நான் நிச்சயம் இந்த கட்டுரையோடு சென்று அந்த இடத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். ஒவ்வொரு முறை சரளாவின் கட்டுரை வெளிவரும்போதும் அதற்கு அடுத்த வாரம் வாசகர் கடிதம் ஒன்றல்ல,இரண்டல்ல பல பதிவுகள் அந்தக் கட்டுரையை பாராட்டி விகடகவிக்கு வந்துவிடும்.அந்த வகையில் அவரின் எழுத்துக்கள் இன்று புத்தகமாக வெளிவந்திருப்பதை பாராட்டி விகடகவியின் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.
Leave a comment
Upload