தொடர்கள்
அனுபவம்
நடந்தது - ஜாசன்

20231109000225172.jpg

ஞாயிற்றுக்கிழமை முடி வெட்டிக் கொள்வதற்காக சலூனில் காத்திருந்தேன். அப்போது என் அருகில் ஏற்கனவே இருவர் எனக்கு முன்பாகவே காத்திருந்தார்கள் .அப்போ என் பக்கத்தில் இருந்த இளைஞரின் செல் பேசி ஒலித்தது. எதிர் முனையில் இருந்தவரிடம் ' ஒரு டம்ளர் அரிசி போதும் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை குக்கரில் வைத்துவிடு அதற்கு மேல் ஒரு தட்டு வைத்து அதில் நாம் ஏற்கனவே கட் பண்ணி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை வைத்து விடு சாதத்தோடு சேர்ந்து உருளைக்கிழங்கும் வெந்துவிடும்.

நான் வந்து பொடிமாஸ் எப்படி செய்வது என்று சொல்லித் தருகிறேன். இரவு தோசைக்கு அரிசி ஏற்கனவே ஊற வைத்து விட்டேன் எனவே அரிசி ஒரு டம்ளருக்கு மேல் போட வேண்டாம் சாதம் மீந்து போனால் வீணாகிவிடும். காரணம் நம் இரவு தோசை சட்னி சாப்பிட போகிறோம் ' என்று சொல்லிவிட்டு செல்பேசியை அணைத்தார். எனக்கு இந்த உரையாடல் ஆச்சரியமாக இருந்தது. 'நீங்கள் இப்போது யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ? என்று நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

'தாராளமாக ' என்ற அந்த இளைஞர் 'நான் என் மனைவியிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் .எங்களுக்கு திருமணம் ஆகி ஆறு மாதம் ஆகிறது. என் மனைவிக்கு சமைக்க தெரியாது. என் அத்தை திருமணத்துக்கு முன்பே மாப்பிள்ளை அவளுக்கு சமைக்கத் தெரியாது பலமுறை சமையல் கற்றுக்கொள்ள சொல்லி நான் வற்புறுத்தியும் அவள் என் பேச்சைக் கேட்கவில்லை திருமணம் ஆகி நீங்கள் தனி குடித்தனம் போனால் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள் என்ற கவலை இப்போதே எனக்கு வரத் தொடங்கி விட்டது என்று சொன்னார்.

நான் அப்போது என் அத்தையிடம் இது ஒரு பிரச்சனையே அல்ல நான் கோயம்புத்தூரில் வேலைக்கு சேர்ந்த புதிதில் எனக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை எனவே நான் சமைத்து சாப்பிடு திட்டமிட்டேன். பக்கத்து வீட்டில் இருந்த பாட்டி எனக்கு சமைப்பதற்கு கற்றுக் கொடுத்தார். அவர் நன்றாக சமைக்க கூடியவர் அவரது கை பக்குவம் எனக்கு அப்படியே வந்து விட்டது என் அப்பா அம்மா கோவையில் என் வீட்டுக்கு வரும்போது கூட அவர்களுக்கு நான் சமைத்துப் போட்டு இருக்கிறேன் நான் பார்த்துக் கொள்கிறேன் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னேன்.

திருமணமான பிறகு ஒரு வாரத்தில் நாங்கள் இங்கு வந்து தனிக்குடித்தனம் ஆரம்பித்து விட்டோம். அதாவது ஏற்கனவே நான் தனியாக இருக்கும் போதே தனி அறை என்று இல்லாமல் வீட்டை வாடகை எடுத்து தங்கினேன் காரணம் என் அப்பா அம்மா வந்தால் அவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக. இப்போது என் மனைவி வந்துவிட்டாள் ஆனாலும் நான் அவளை சமைக்க சொல்லி வற்புறுத்தவே இல்லை. நானே தூங்கி எழுந்ததும் காபி போட்டு கொடுத்தேன். காய்கறி நறுக்குவது சமையல் செய்வது நேரம் கிடைக்கும் போது பாத்திரம் தேய்ப்பது உட்பட எல்லா வேலையும் நானே செய்வேன். எந்த சூழ்நிலையும் என் மனைவியை நீ ஏன் சமைக்க கற்றுக் கொள்ளவில்லை என்று கேட்கவே இல்லை. ஒரு கட்டத்தில் அதாவது குறிப்பிட்டு சொல்வதென்றால் சென்ற வாரம் முதல் நான் சமையல் செய்வதை காய்கறி நறுக்குவதை பாத்திரம் தேய்ப்பதை கவனித்து வந்தாள்.

பிறகு பாத்திரம் நான் தேய்க்கிறேன் என்று அவளே ஆர்வமாக செய்ய ஆரம்பித்தாள் .நான் தடுக்கவில்லை அதன் பிறகு காய்கறி நறுக்க பழக்கமானாள். இப்போது சாதம் வைக்க தெரிந்து கொண்டு விட்டாள். அடுத்த மாதம் முதல் நீங்கள் எந்த வேலையும் செய்ய வேண்டாம் உங்களை உட்கார வைத்து சாதம் போடுகிறேன் என்ற முனைப்போடு இருக்கிறாள். என்றார் அவர் பேசும்போது மனைவியை அவர் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது தெரிந்தது. அதைக் கேட்கவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நான் அந்த இளைஞருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

மாலை நானும் பக்கத்து வீட்டு நண்பரும் வாசலில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரை பார்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி வந்து நலம் விசாரித்தார். அப்போது பக்கத்து வீட்டுக்காரரை பார்த்ததும் 'உங்கள் மகள் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு அந்த நண்பர் அவளுக்கு என்ன நல்லா தான் இருக்கா ஒரு தகப்பனா அவளுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் நான் செய்து தந்து விட்டேன். ஆனால், நான் தொடர்பு கொண்டு பேசினாலே ஏதோ பெரிய வேலை செய்து கொள்வது போல் அலுத்துக் கொள்கிறாள்.

அதனால் நான் இப்போது பேசுவதையே நிறுத்தி விட்டேன் அவளே பேசட்டும் என்று சொன்னார். என் பக்கத்து வீட்டுக்காரர் இந்த தலைமுறைக்கு உறவின் மகிமை தெரியவில்லை இதே அனுபவம் தான் எனக்கும் ஏற்படுகிறது எனவே நான் பேசினால் பேசுவேன் அவ்வளவுதான் என்றார்.

முகநூலில் ஒரு நண்பர் தனது சக நண்பரிடம் என்னை தயவுசெய்து சார் என்று அழைக்காதீர்கள் வெறுமனே பெயர் சொல்லி மட்டும் அழையுங்கள், சார் என்ற வார்த்தையே எனக்கு அலர்ஜியாக இருக்கிறது என்றார். அப்படியா ? !