தொடர்கள்
பொது
சாக்கடையில் இறங்கிய பில் கேட்ஸ் ! மாலா ஶ்ரீ

20231108235209253.jpg

கடந்த சில நாட்களுக்கு முன் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சுக்கு பில்கேட்ஸ் சென்றிருந்தார். அங்கு நடைபாதையில் மூடி போட்டிருந்த கதவைத் திறந்தார். பின்னர், அதற்குள் இருந்த கழிவுநீர் தடத்தில் படிக்கட்டு வழியாக இறங்கி, பூமிக்கு அடியில் உள்ள பிரபல கழிவுநீர் அருங்காட்சியகத்தை நோக்கி பில்கேட்ஸ் கம்பீரமாக நடக்கத் துவங்கினார். இதைப் பார்த்து பெல்ஜியம் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் வலைதளப் பக்கத்தில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு வீடியோ பதிவாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ பதிவு வைரலாகப் பரவியது.

அந்த வீடியோ பதிவில், பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள பிரபலமான கழிவுநீர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட, நடைபாதையில் இருந்த கழிவுநீர் தடத்தில் பில்கேட்ஸ் இறங்கியுள்ளார். அங்கு பிரஸ்ஸல்ஸ் நகரின் கழிவுநீர் அமைப்பின் மறைக்கப்பட்ட வரலாற்றை பில்கேட்ஸ் ஆய்வு செய்வதும், இதுகுறித்து அங்குள்ள ஆய்வாளர்களும் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்துவதும் தெரியவந்துள்ளது.

அதன்படி, பிரஸ்ஸல்ஸ் நகரில் மொத்தம் 321 கிமீ தூரத்துக்கு கழிவுநீர் அமைப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பில்கேட்ஸ் கூறுகையில், ''பிரஸ்ஸல்ஸ் நகரில் நிலத்துக்கு அடியே அமைந்துள்ள கழிவுநீர் அருங்காட்சியகத்தை ஆய்வு செய்தேன். இந்த கழிவுநீர் அமைப்பு வரலாற்று ரீதியாகப் பல்வேறு கதைகளைக் கொண்டுள்ளது. கடந்த 1800ம் ஆண்டுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர் நேரடியாக சென்னே ஆற்றில் விடப்படும்.

இதனால் அப்போது காலரா போன்ற மோசமான தொற்று நோய்கள்கூட பெல்ஜியம் மக்களுக்கு ஏற்பட்டது. தற்போது இந்த 321 கிமீ நீளமுள்ள கழிவுநீர் அமைப்பில் பெறப்படும் கழிவுகளை, அவர்கள் முறையாக சுத்திகரித்து, அவற்றை பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தி வருகின்றனர்!" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

பில்கேட்ஸ் தொடர்ச்சியாகப் பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக தனது முன்னாள் மனைவியுடன் சேர்ந்து ‘தி பில்’ மற்றும் ‘மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளைகளை நடத்தி வருகிறார் .