முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகேயுள்ள திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் இல்லக் கிணற்றில் கார்த்திகை அமாவாசையன்று கங்கை பொங்கி வந்தது போல இன்றைக்கும் வருடந்தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தில் ஸ்ரீதர அய்யாவாள் இல்லக் கிணற்றில் கங்கை நீர் பொங்கி வருவதாகவும், அதில் புனித நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தற்போது ஸ்ரீதர அய்யாவாள் இல்லம் மடமாக மாற்றப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் இந்த மடத்தில் கங்காவதரண மஹோத்ஸவம் பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை அமாவாசை அன்று காலை இந்த கிணற்று நீரில் குளிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். முதலில் மடம் அருகே உள்ள காவேரி நதியில் நீராடி, பின்னர் மடத்தின் வெளியே வரிசையில் நின்று கங்கை நீரில் புனித நீராடுகின்றனர். இதனால், கார்த்திகை அமாவாசை அன்று திருவிசநல்லூரில் கங்கை, காவேரி இரண்டிலும் நீராடிய புண்ணியத்தைப் பெறுகிறார். மேலும், அங்கு பெரிய அன்னதானமும் நடைபெறுகிறது.
ஆரம்பக்கால வாழ்க்கை:
எத்தனையோ மகான்கள் பகட்டையும் படாடோபத்தையும் விரும்பாமல் எளிமையாக வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் திருவிசநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் என்கிற ஸ்ரீதர அய்யாவாள். மக்கள் அவர் மீது வைத்திருக்கும் மிகுந்த மரியாதையின் காரணமாக அய்யாவாள் என்று அழைக்கப்பட்டார். இன்றும் அந்த பெயரில்தான் அறியப்படுகிறார்.
ஸ்ரீதர அய்யாவாள் மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்த லிங்கராயர் என்பவரின் ஒரே மகன். அய்யாவாள் ஒரு சிறுவயதிலிருந்தே ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர். அதனால் அவரது தந்தை இளவயதில் சிறந்த வேதக் கல்வியை அளித்து, அவருடைய திருமணத்தையும் நடத்தி வைத்தார். அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு அய்யாவாளுக்கு மைசூர் சமஸ்தானத்தின் திவான் பதவி வழங்கப்பட்டது, ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் பல்வேறு புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள விரும்பினார். எனவே அவர் தனது மனைவி மற்றும் தாயுடன் தமிழகத்தின் திருச்சிராப்பள்ளிக்கு வந்து சிறிது காலம் வாழ்ந்தார்.
திருச்சிராப்பள்ளியில் தொடங்கிய ஆன்மீக பயணம்: திருச்சிராப்பள்ளியில் ஸ்ரீதர அய்யாவாள் தங்கியிருந்தபோது, அப்பகுதியை நாயக்கர் வம்சத்தில் வந்த ஒரு மன்னன் ஆண்டு வந்தார். அப்போது, சைவ, வைணவ வேற்றுமைகள் நிலவிய காலகட்டம். ஆனால் மன்னன் வைணவ சமயச் சிந்தனையைப் பின்பற்றுபவர். சிலர் ஸ்ரீதர அய்யாவாள் சைவ சமயத்தைப் போதிப்பதாக மன்னரிடம் தவறாகக் கூறினார்கள். மன்னர் ஸ்ரீதர அய்யாவாளைத் தானே சோதிக்க விரும்பினார். எனவே, மலைக்கோட்டை கோயில் மாத்ருபூதேஸ்வரரை கிருஷ்ணராக அலங்கரித்து வீதி உலாவும் ஏற்பாடு செய்தார். ஆனால் அய்யாவாளுக்கு அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாத்ருபுதேஸ்வரர் கிருஷ்ணரைப் போன்று தோற்றமளிக்கப்பட்டதால், மாத்ருபுதேஸ்வரரை கிருஷ்ணராகவே வணங்கி,12 ஸ்லோகங்களில் “கிருஷ்ணாத்வாஸ மஞ்சாரி ஸ்தோத்திரத்தை” பலமுறை பாடினார். கிருஷ்ண பரமாத்மாவிடம் எந்த பாகுபாடும் இல்லாமல் அவர் கொண்டிருந்த அன்பைக் கண்டு மன்னர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
திருச்சிராப்பள்ளியில் இவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில், ஒரு சிறுவனுக்கு திடீரென்று நோய்வாய்ப்பட்டு நினைவற்று மிக மோசமான நிலையில் இருந்தான். விஷயமறிந்த ஸ்ரீதர அய்யாவாள் அந்த வீட்டுக்குச் சென்று சிவனை வேண்டித் தியானித்து ஜபம் செய்து, "தாராவளி" என்ற "நக்ஷத்திர சங்கை" அடங்கிய ஸ்தோத்திரத்தைப் பாடி குழந்தையின் உயிரைத் திரும்பப் பெற்றார். அந்த சிறுவன் எழுந்து பழையபடி நடமாடினான். இந்த சேதி எங்கும் பரவியது. அய்யாவாளின் அற்புத சக்தி, பணிவு, அறிவு மற்றும் அனைத்திற்கும் மேலாக அவரது அளவற்ற பக்தி ஆகியவற்றால் அரசனும், பொது மக்களும் மிகவும் நெகிழ்ந்தனர். அய்யாவாளிடம் நிரந்தரமாகத் திருச்சிராப்பள்ளியில் தங்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். பின்பு, ஸ்ரீதர அய்யாவாள் திருச்சிராப்பள்ளியிலிருந்து ஆன்மீக பயணமாக தஞ்சை, கும்பகோணம், திருபுவனம், திருநாகேஸ்வரம் எனப் பல ஸ்தலங்களுக்குப் பயணம் செய்தார்.
திருவிசைநல்லூரை அடைந்த ஸ்ரீதர அய்யாவாள்:
காவிரிக் கரையில் உள்ள பல ஸ்தலங்களுக்கு தனது மனைவியுடன் பயணம் செய்து கடைசியில் நிரந்தரமாகத் தங்குவதற்கு மகான்கள் வாழ்ந்த திருவிசலூர் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார். (கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவிசலூர் என்கிற கிராமம். திருவிசநல்லூர் என்றும் சொல்வது உண்டு. திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் வியலூர் என்று இந்த ஊரைக் குறிப்பிடுகிறார். இங்குள்ள சிவாலயம் பாடல் பெற்றது தவிர, அருளாளர்களின் திருவடி பட்ட திவ்ய ஸ்தலம் இது)
தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார். சிவபெருமானிடம் அபார பக்தி கொண்ட ஶ்ரீதர அய்யாவாள் ஏக பாவத்தில், சிவ-விஷ்ணு என வித்தியாசம் ஏதும் பாராட்டாமல் திகழ்ந்தவர்.
ஸ்ரீதர அய்யாவாள், கோவிந்தபுரம் போதேந்திர ஸ்வாமிகள், நெரூர் சதாசிவ பிரும்மேந்திராள் மூன்று பேரும் சமகால மகான்கள். இவர்கள் அடிக்கடி சந்தித்து ஆன்மீக உரையாடல்கள் நடத்துவார்கள்.
ஶ்ரீதர அய்யாவாளின் புத்தகங்கள்:
ஶ்ரீதர அய்யாவாள் புத்தகங்கள் பல எழுதியுள்ளார். வடமொழியில் வல்லவரான ஶ்ரீதர அய்யாவாளின் மிக முக்கியமான புத்தகங்கள் ஆக்யாசஷ்டி, சிவன் மீது பாடப்படும் தயா சதகம், மாத்ருபூத சதகம், ஸ்துதி பத்ததி, சிவ பக்தி கல்பலதிகா, சிவ பக்த லக்ஷணம், தாராவலீ ஸ்தோத்ரம், ஆர்த்திஹர ஸ்தோத்ரம், குளீ ராஷ்டகம், ஜம்புநாதாஷ்டகம், தோஷ பரிஹாராஷ்டகம், க்ருஷ்ண த்வாதச மஞ்சரி, அச்சுதாஷ்டகம், டோலா நவரத்ன மாலிகா, நாமாம்ருத ரஸாயனம் உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தவையாகும். அவர் இயற்றிய பகவன் நாம பூஷணம் இன்றும் நமக்குக் கிடைக்கவில்லை.
காவேரியின் எல்லையற்ற மஹிமையை அவர் அருமையாக விவரித்துள்ளார்.
“காவேரி கங்கையை விடப் புனிதமானது. காவேரி திருமாலின் தலை, இடை, கடை என்ற மூன்று இடங்களிலும் பெருமை பெற்று விளங்குகிறாள். மைசூர் ஸ்ரீரங்கபட்டணம், ஸ்ரீரங்கம், கொள்ளிடக்கரை அரங்கம் என்ற மூன்று அரங்கங்களும் காவேரி நதியைப் புனிதமாக்குகின்றன. காவேரி நீரானது அன்பையும், அறிவையும், அருளையும் பெருக்குகின்றது. உலகில் உள்ளோர் தொடர்ந்து செய்யும் எல்லா பாவங்களையும் காவேரியில் ஸ்நானம் செய்த ஒரு நொடிப்பொழுதில் இறைவனே காவேரியாக இருந்து அவைகளை நீக்கி விடுகிறது.” என்று இப்படி அவர் காவேரியின் மஹிமையைப் பாடிப் போற்றுகிறார்.
ஶ்ரீதர அய்யாவாள் எழுதிய புத்தகங்களில், சில இன்னும் அச்சிடப்படவில்லை, இன்னும் சில நமக்கு கிடைக்கவில்லை.
ஸ்ரீதர அய்யாவாளின் அற்புதங்கள்:
ஸ்ரீதர அய்யாவாளின் வாழ்க்கையோடு பல்வேறு அற்புதங்கள் தொடர்புடையவை.
ஒரு கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரின் படத்தை அலங்கரித்து ஸ்ரீதர அய்யாவாள் வாழ்ந்த வீதி வழியே சென்ற ஊர்வலத்தில் இருந்தவர்கள் அவரை அவமதிக்கும் விதத்தில் அவர் வீட்டில் நிற்காமல் அவர் வீட்டை வேகமாகக் கடந்து சென்றனர். பக்கத்து வீட்டிற்கு ஊர்வலம் போனபோது கிருஷ்ணரின் திருவுருவப்படம் காணாமல், தேரில் வெறும் சட்டம் மட்டும் நின்றதைக் கண்டு, திகைத்தனர். தங்களின் அறியாமையை நினைத்த ஊர்வலத்தினர் அய்யாவாள் வீட்டிற்கு விரைந்தனர். அங்கு, வீட்டிற்குள் ஊஞ்சலில் காணாமல் போன கிருஷ்ணரின் திருவுருவ படத்தை கண்டனர். அய்யாவாள் டோலோத்ஸவம் நடத்திக் கொண்டிருந்தார், ஒரு தாயின் பாவத்துடன் , தன் சிறு குழந்தையைத் தொட்டிலிட்டுக் கொண்டிருந்தாள். அதே பாவத்தில் , அவர் "டோலானவரத்னமாலிகா" என்ற படைப்பை இயற்றினார்.
திருவிசைநல்லூரும் அதைச் சுற்றி இருந்த பகுதிகளும் மழையின்றி பெரிதும் வறண்டிருந்த போது மக்கள் நீரின்றி வருந்தினர். உடனே ஶ்ரீதர ஐயாவாள் திருவிசைநல்லூரில் எழுந்தருளியிருக்கும் கர்கடேஸ்வர மீது குளீராஷ்டகம் என்ற ஸ்துதியை இயற்றிப் பாட மழை கொட்டோ கொட்டென்று பெய்து அனைவரையும் மகிழச் செய்தது.
கோவிந்தசாமி என்பவர் ஸ்ரீதர அய்யாவாளை அவமதித்தார். அவரைக் காவேரிக் கரையில் இறைவன் சொப்பனத்தில் விரட்டவே, அவர் மனம் திருந்தி அவரை வணங்கிப் போற்றி அவரது பக்தராகவே ஆனார்.
ஸ்ரீதர அய்யாவாள் தஞ்சாவூருக்கு வந்ததும், தஞ்சாவூர் மராட்டிய சாம்ராஜ்யம் அப்போதைய ஆட்சியாளரான ஷாஹூஜி அவருக்கு அனைத்து உதவிகளையும் மரியாதைகளையும் வழங்கினார் . சிறிது காலத்திற்குப் பிறகு, அவர் பாம்புக்கடியால் இறந்த ஒரு பிராமணரை மீண்டும் உயிர்ப்பித்தார், இதனால் ஒரு அற்புதம் செய்பவர் என்ற நற்பெயரைப் பெற்றார்.
கிணற்றில் பிரவாகமாகப் பொங்கிய கங்கை:
ஒருமுறை, ஸ்ரீதர அய்யாவாளின் இல்லத்தில், அவரது தந்தையார் மறைந்த திதி நாளான கார்த்திகை அமாவாசை தினத்தில் சிரார்த்த காரியங்கள் நடைபெற்றன. பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார்செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, காவிரியில் நீராடச்சென்றார். நீராடி இல்லம் திரும்பும்போது எதிரே வந்த வயதான ஏழை அய்யாவாளிடம், "சுவாமி, ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன்'' எனக் கேட்டார். அவர் மீது இரக்கம் கொண்ட ஸ்ரீதர அய்யாவாள் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது சிரார்த்த சமையல் மட்டுமே தயாராக இருந்தது. பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக்கொடுத்துப் பசியாற்றினார். இதைக் கண்ட சிராத்தத்திற்கு வந்த சாஸ்திரிகள் திதி கொடுக்கும் முன்பே சிரார்த்த சமையலைப் பிறருக்கு அளித்து விட்டதால் கங்கையில் நீராடுவதுதான் பிராயச்சித்தம் என்றார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த ஶ்ரீதர அய்யாவாள் காசி சென்று வர பல மாதங்கள் ஆகுமே அதுவரை திதி கொடுக்காமல் இருக்க முடியாதே என மனம் வருந்தி, சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தார். ஊரார் முன்னிலையில் கங்காதேவியைப் பிரார்த்தனை செய்து "கங்காஷ்டகம்' எனும் ஸ்தோத்திரத்தை மனமுருகி பாராயணம் செய்தார். அவ்வளவுதான்! அவர் வீட்டுக் கிணற்றிலிருந்து கங்கை பிரவாகமாகப் பெருக்கெடுத்தது. அந்த வெள்ளம் வீதியிலும் ஓடிவரலாயிற்று. அதில் காசியில் கங்கையில் போடப்பட்ட மஞ்சள், பூ போன்ற மங்கல திரவியங்கள் காணப்பட்டன. அவரது வீட்டுக் கிணற்றில் கங்கை பிரவாகமாகப் பொங்கியது. இதில் திருவிசநல்லூர் கிராமமே வெள்ளக்காடானது . இதனால் அய்யாவாளின் பெருமையை ஊர்மக்கள் உணர்ந்ததுடன், கங்கை வெள்ளத்தில் இருந்து இவ்வூரையும் தங்களையும் காப்பாற்றிட அவரை வேண்டிக்கொண்டனர். இதையடுத்து அய்யாவாள் கங்கையை தன் வீட்டுக் கிணற்றிலேயே தங்கிட மீண்டும் பிரார்த்தனை செய்தார் இதனையடுத்து, இதனால் வெள்ளத்தின் சீற்றம் தணிந்து ஊர் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இத்தகைய சிறப்புப் பெற்ற ஸ்ரீதர அய்யாவாளின் பெருமையை உலகுக்கு உணர்த்திய தினமான கார்த்திகை அமாவாசை தினத்தில் மட்டும் ஆண்டு தோறும் இங்குள்ள கிணற்றில் கங்கை நீர் பிரவாகமாகப் பொங்கி வருகிறது என்பது ஐதீகம்.
இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில் ஆண்டுதோறும்
கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்குப் பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்.
ஜோதியில் ஐக்கியமான ஶ்ரீதர அய்யாவாள்:
தினமும் ஶ்ரீதர அய்யாவாள் அர்த்தஜாம பூஜை வேளையில் திருவிடை மருதூர் மகாலிங்க ஸ்வாமியைத் தரிசிக்க வருவார். 1720 இல் தனது 85 வயதில் அர்த்தஜாம தரிசனத்துக்காக ஶ்ரீதர அய்யாவாள் மகாலிங்க ஸ்வாமி சந்நிதிக்கு வந்தபோது அவர் முகம் கூடுதல் பிரகாசமாக இருந்தது. அங்கு இருந்த பக்தர்களுக்குப் பல உபதேசங்களை வழங்கினார். அந்த நேரத்தில் கர்ப்ப கிரகத்துக்குள் மகாலிங்க ஸ்வாமி ஜோதி சொரூபமாகக் காட்சி தந்து கொண்டிருந்தார். அர்த்தஜாம பூஜையில் தரிசனம் செய்து விட்டு மகாலிங்க ஸ்வாமி சந்நிதிக்குள் நுழைந்து, மகாலிங்கத் திருமேனியில் ஜோதியாக ஐக்கியமானார். இறைவனுடன் இப்படி அவர் ஐக்கியமானதைக் கண்ட உலகம் வியந்து பிரமித்தது.
கங்காவதரண மஹோத்ஸவம்:
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரருடன் ஐக்கியமான ஶ்ரீதர அய்யாவாள் மறையவில்லை. அவரது சிவபக்தியையும்
இறைப்பணிகளையும் போற்றும் விதத்தில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பத்து நாள் மஹோத்ஸவம் நடக்கின்றது. இந்த நாள்களில் சிறப்புப் பூஜைகளும் பஜனைகளும் நடைபெறும். இராமாயண, மகாபாரத, பாகவத, நாம சங்கீர்தனம்,சங்கீதக் கச்சேரிகள் வெகு விமரிசையாக நடைபெறும். கார்த்திகை அமாவாசை கங்காவதாரணம் தினத்தன்று சுமார் 20,000 பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடுவார்கள். இவர்களுக்குக் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே அன்றைய தினத்தில் புனிதமான இந்தக் கிணற்றில் நீராட பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் இந்த மகானின் மகிமையை உணர்ந்து, நீராடும் வைபவத்தில் கலந்து கொள்கிறார்கள். அனைவருக்கும் அன்னதானமும் அளிக்கப்படும். மேற்படி உற்சவ நாள்களில், குடந்தை சங்கர மடத்திலிருந்து திருவிசநல்லூர் வந்து செல்ல வேன் வசதி ஏற்பாடு செய்யப்படும். கங்கைக்குச் சென்று நீராட இயலவில்லையே என்ற மனக்குறை உள்ளோர்க்கு இது ஓர் அரியவாய்ப்பு.
எப்படிச் செல்வது?
கும்பகோணத்திலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ தொலைவில் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்துக்கள், தனியார் பேருந்துகளும் உண்டு. இறங்க வேண்டிய இடம் திருவிசநல்லூர் மடம். ஆட்டோ வசதி உண்டு. அங்கிருந்து சுமார் 10 நிமிடம் நடந்தால் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தை அடைந்துவிடலாம்.
இவ்வருஷத்திய உத்ஸவம் ஸோபக்ருத் வருஷம் கார்த்திகை மாதம் 17-ம் தேதி (03.12.2023) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து கார்த்திகை மாதம் 26-ம் தேதி (12.12.2023) செவ்வாய்கிழமை அமாவாஸையன்று கங்காஸ்நானத்துடன் நடைபெறுகிறது.
ஶ்ரீதர அய்யாவாளின் சிவபக்தியின் மகிமை காரணமாக வருடத்தில் ஒருநாள் திருவிசநல்லூர் அய்யாவாள் மடத்தில் இருக்கும் கிணற்றில் கங்கை வரும் நாளில் நாமும் சென்று நீராடி புண்ணியம் பெறுவதோடு, ஶ்ரீதர அய்யாவாளின் அருளாசியும் பெறுவோம்!!
https://youtu.be/7GxlCGw3HHE?si=IiBIzdtsDWD8b5lp
https://youtu.be/0oa1gZKGmcg?si=MHBUYQ5IctH_OUrh
https://youtu.be/zthVTepYyaw?si=ipGdeMJOVrzy8gDq
Leave a comment
Upload