சென்ற வாரம் நமக்கு மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சியில் உள்ள விதிகளை விவரித்த பரணீதரன், இந்த வாரம் வேறு சில புணர்ச்சி விதிகளை விரிவாக்குகிறார்.
குற்றியலுகர முற்றியலுகர குற்றியலிகரப் புணர்ச்சி
1. ஒரு தொடரில் முதல் சொல் குற்றியலுகரமாகவோ முற்றியலுகரமாகவோ இருந்து அடுத்த சொல்லில் உயிரெழுத்து வந்தால், முதல் சொல்லின் கடைசி எழுத்தில் உள்ள உகரம் (உ) மறைந்து விடும். பிறகு உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி ஒன்று சேர்ந்து விடும்.
எடுத்துக்காட்டு
சார்பு + எழுத்து - சார்ப் + எழுத்து - சார்பெழுத்து
நாடு + எனும் - நாட் + எனும் - நாடெனும்
துறவு + ஒழுக்கம் - துறவொழுக்கம் (முற்றியலுகரம்)
செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே (பாரதியார்)
2. ஒரு தொடரில் முதல் சொல் குற்றியலுகரமாகவோ முற்றியலுகரமாகவோ இருந்து அடுத்த சொல்லின் முதலெழுத்து யகரத்தில் (ய) தொடங்கினால், முதல் சொல்லின் கடைசி எழுத்தாக உகரம் (உ) இகரமாக (இ) மாறும் (குற்றியலுகரம் குற்றியலிகரமாக மாறும், குற்றியலுகரம் முற்றியலிகரம் ஆக மாறும்).
எடுத்துக்காட்டு
நாடு + யாது - நாட் + யாது - நாடியாது (குற்றியலுகரம் - குற்றியலிகரம்)
துறவு + யாது - துறவ் + யாது - துறவியாது (முற்றியலுகரம் - முற்றியலிகரம்)
இதனுடைய விதி
உயிர்வரி னுக்குறண் மெய்விட் டோடும்
யவ்வரி னிய்யா முற்றுமற் றொரோவழி
நன்னூல் - 164
ஈற்றுப்புணர்ச்சி
ஈறு என்றால் ஒரு சொல்லின் கடைசி என்று பொருள்.
முதலாவதாக நாம் பார்க்கப்போவது உயிரீற்றுப் புணர்ச்சி (உயிர் ஈற்றுப் புணர்ச்சி) . இரண்டு சொற்கள் சேரும்போது இரண்டாவது சொல்லில் உயிர் எழுத்துக்களோ உயிர்மெய்யெழுத்துக்களோ இருந்தால், அவை வல்லின எழுத்துக்கள் ஆக இருந்தால் ‘க்’, ‘ச்’, ‘த்’, ‘ப்’ ஆகிய ஒற்றுக்கள் மிகுந்து வரும். இவை இரண்டு வகையில் வரலாம்.
1. இயல்பாக புணரும் புணர்ச்சி. இரண்டு சொற்கள் இயல்பாகப் புணரும் பொழுது ஒற்று வரக்கூடும்.
எடுத்துக்காட்டு
திரு+குறள்=திருக்குறள்
பலா + சுளை - பலாச்சுளை
தத்து + பிள்ளை - தத்துப்பிள்ளை
2. விதியினும் புணர்ந்து வரும். வேறொரு புணர்ச்சி விதிகள் மூலமாக புணர்ந்து வருவது.
எடுத்துக்காட்டு
மரம் + தச்சன் - மர (மகர ஈற்றுப் புணர்ச்சி) + தச்சன் - மரத்தச்சன்
மரம் + கிளை = மரக்கிளை
காகிதம் + கூழ் - காகிதக்கூழ்
இதனுடைய விதி
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
க ச த ப மிகும் விதவாதன மன்னே
நன்னூல் - 165
உடம்படுமெய்
இதை உடன்படு மெய் என்று கூற வேண்டும். ஒரு சொல்லின் கடைசியில் உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து இருந்தாலும் அடுத்த சொல்லின் தொடக்கத்தில் உயிரெழுத்து இருந்தாலும் அவைகளை சேர்க்கும் பொழுது சரியாகப் புணராது. அதை சரி செய்வதற்காக இந்த உடம்படுமெய் உபயோகிக்கிறோம். இதில் மொத்தம் மூன்று விதிகள் உள்ளன. அவை
1. நிலைமொழி ஈற்றில் (முதல் சொல் கடைசியில்) உயிர் எழுத்து ஆகிய ‘இ’, ‘ஈ’, ‘ஐ’ வந்து வருமொழியில் உயிர் எழுத்துக்கள் வந்தால் அவை புணரும் பொழுது நடுவில் யகரம் வர வேண்டும்.
எடுத்துக்காட்டு
அணி(ண் + இ) + இலக்கணம் - அணி’யி’லக்கணம்
ஈ + அடித்தான் - ஈயடித்தான் (ஈயடித்தான் காப்பி நகைச்சுவையை நினைவில் கொள்க. இதே போல் அமைந்துள்ள மற்றொரு பெயர் ஈரோடு. ஈர் + ஓடை (இரண்டு ஓடை) என்பதன் மரூவே ஈரோடு ஆகும்).
வாழை (ழ் + ஐ) + இலை - வாழையிலை
சிலை + அழகு - சிலையழகு
நிலை + எழுத்து - நிலையெழுத்து
2. இவை தவிர மற்ற உயிர் எழுத்துக்கள் நிலைமொழியின் ஈற்றில் வந்தால் வகர (வ) எழுத்து நடுவில் வரும். வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு
கோ (க் + ஓ) + இல் - கோவி(வகரம்)ல்
திரு + அரங்கம் - திருவரங்கம்
திரு + அண்ணாமலை - திருவண்ணாமலை
திரு + ஆரூர் - திருவாரூர்
தே + ஆரம் - தேவாரம்
ஆராத அருளமுதம் பொதிந்த கோவில் *
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்த கோவில் *
தோலாத தனிவீரன் தொழுத கோவில் *
துணையான வீடணற்குத் துணையாங் கோவில் *
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோவில் *
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோவில் *
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோவில் *
திருவரங்க மெனத் திகழுங் கோவில் தானே! (ஸ்வாமி வேதாந்த தேசிகன்)
கோவில் அல்லது கோயில் இரண்டுமே இலக்கணத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சொற்கள் தான். குழப்பிக் கொள்ளத் தேவை இல்லை.
3. நிலைமொழியின் ஈற்றில் ஏ வந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் யகரமோ வகரமோ வரலாம்.
எடுத்துக்காட்டு
ஏ + எய்தான் - ஏவெ(வகரம்)ய்தான், ஏயெ(யகரம்)ய்தான்
அவனே + அவன் - அவனேயவன்
வாய்மையே + என்றும் - வாய்மையேவென்றும்
சே + அடி - சேவடி
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் (கந்த சஷ்டி கவசம்)
இதனுடைய விதி
இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும்
உயிர்வரின் உடம்படுமெய் யென்றாகும்
நன்னூல் - 162
மவ்வீறு புணர்ச்சி
ம + ஈறு + புணர்ச்சி - நிலைமொழியின் ஈற்றில் (முதல் சொல்லின் கடைசியில்) மகரம் (ம்) வந்தால், அதனால் ஏற்படும் புணர்ச்சியே மவ்வீறு புணர்ச்சி. இதில் மொத்தம் மூன்று வகை இருக்கிறது.
அவை :
1. இயல்பாக புணர்வது. இரண்டு சொற்கள் இயல்பாகப் புணரும் பொழுது முதலில் உள்ள ‘ம்’ என்பது மறையும்.
எடுத்துக்காட்டு
வட்டம் + நிலா - வட்ட நிலா
மரம் + அடி - மர + அடி - மரவடி (உடம்படுமெய்)
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும் (பொய்கையாழ்வார்)
2, 3. இயல்பாகப் புணரும் போது ஒற்று (புள்ளி வைத்த எழுத்து) வருவது . இரண்டு சொற்கள் சேரும்போது ‘ம்’ மறைந்து ஒரு ஒற்று எழுத்து மிகுவது. அந்த ஒற்று எழுத்து அதே எழுத்தாக இருக்கலாம் அல்லது அதன் இன எழுத்தாக இருக்கலாம்.
எடுத்துக்காட்டு
கமலம் + கண்ணன் - கமல + கண்ணன் - கமலக்கண்ணன்
பவளம் + வாய் - பவளவாய்
மரம் + சிலை - மர + சிலை - மரச்சிலை
உண்ணும் + சோறு - உண்ணு + சோறு - உண்ணுஞ்சோறு
அறம் + கூறினான் - அற + கூறினான் - அறங்கூறினான்
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண் (தொண்டரடிப்பொடி ஆழ்வார்)
மூன்று வகை என்று கூறினேன் இரண்டு தான் இருக்கு என்று நினைக்காதீர்கள். இரண்டாவதில் சாதாரண ஒற்று எழுத்துக்கள் இன ஒற்று எழுத்துக்கள் என்று இரண்டாகப் பிரிகிறது என்று கவன ஈர்ப்பு செய்கிறார்.
பின்னும் அவரே தொடர்கிறார்.
இதனுடைய விதி
மவ்வீறு ஒற்றுஅழிந்து உயிர்ஈறு ஒப்பவும்,
வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்
நன்னூல் - 219
அடுத்த வாரம் இணைவோம் தொடர்வோம் என்கிறார் பரணீதரன்.
Leave a comment
Upload