நீங்கள் நம்பவில்லை என்றாலும்
ஒரு குட்டி சட்டசபை தான்
தேநீர் கடை!
சீனி போடுவதில் முறைகேடு
என்பவர் எதிர்க்கட்சி!
கோடைக்கால வாடிக்கையாளர்கள்
கோவக்கார உறுப்பினர்கள்!
காலநேரமின்றி வரும்
வாடிக்கையாளர்
ஆளுங்கட்சியினர்!
தேநீர் போடுபவர்
சபாநாயகர்,
சொல்பேச்சை யாரும்
கேட்பதில்லை!
கடைக்காரர் அவைக்காவலர்,
பூஸ்ட் கிடைக்காதவர்
அதிருப்தி எம்.எல்.ஏ!
இங்கு தட்டுவதற்கு பதிலாக
அமர்வதற்கு மட்டும் வாய்ப்பு
கொடுக்கும் மேசை!
கடன் நோட்டுகள் அவைக்குறிப்பு!
ஒரு ஓரமாக
பஜ்ஜி, போண்டாவும் போடலாம்
என்ற யோசனை,
தனிநபர் மசோதாவில் சேரும்!
இது சட்டமாக மழைக்காலம் வர வேண்டும்!
ஊழலுக்கு ஆதாரம் அன்றைய செய்தித்தாள்!
தற்காப்புக்கு நறுக்கென்று நாலு கெட்ட வார்த்தைகள்!
இருந்தபோதும் என்ன
தேநீர் மசோதா
சட்டமாவதற்குள் ஆட்சியானது
சர்க்கரையில்லா தீர்மானத்தால்
கலைக்கப்பட்டுவிட்டது!
இர.மணிகண்டன்
Leave a comment
Upload