முன்பெல்லாம் தெருக்களில் பொருட்களை விற்பவர்கள் கூவி கூவி விற்பனை செய்வார்கள் அவர்கள் இந்த கூவல் மூலம் தேவையானவர்கள் வாசலுக்கு வந்து வாங்குவார்கள். ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி இப்போது அவர்களையும் தொட்டுவிட்டது. கோலமாவு விற்கும் பெண்மணி, பழைய பேப்பர் வாங்குபவர், கீரை விற்கும் பெண்மணி, காய்கறி விற்கும் பெண்மணி, மீன் விற்பனையாளர் இப்படி தெரு வியாபாரிகள் எல்லோரும் பதிவு செய்யப்பட்ட ஒலிபெருக்கி மூலம் தான் தெருக்களில் தங்கள் வருகையை பதிவு செய்கிறார்கள். அதுமட்டுமல்ல அவர்களிடம் ஜி பே மற்றும் இதர வசதிகளும் அவர்களிடம் இருக்கிறது.
20ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு தொடர்ந்து கீரை விற்கும் பெண்மணி தனது வியாபாரத்தை எல்லாம் முடித்துவிட்டு அக்கடா என்று எங்கள் வீட்டு வாசலில் இளைப்பாறுவார். என் அம்மாவும் அவருக்கு காப்பி அல்லது மோர் தந்து உபசரிப்பார். இப்போது அந்தப் பெண்மணியும் கீரை வியாபாரத்தை ஒலிப்பெருக்குகிறார். இந்த ஒலிபெருக்கி வசதி அவரது சௌகரியத்துக்கான ஒரு அடையாளம் ஆகிவிட்டது. இப்போது பயணிகள் ரயிலில் கூட கண் தெரியாத பிச்சைக்காரர்கள் அம்மா தாயே தர்மம் செய்யுங்கள் என்று ஒலிப்பெருக்குகிறார்கள். தொழில்நுட்பம் இப்போது சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்துவிட்டது.
முன்பெல்லாம் மின்சார ரயிலில் பெரும்பாலும் அரட்டை அடித்துக் கொண்டு வருவார்கள் ஒரே பேச்சும் சத்தம் கூச்சலும் கும்மாளம் ஆக இருக்கும். இப்போது அதுவும் மெல்ல குறைய தொடங்கியிருக்கிறது. எல்லோரும் செல்பேசியில் ஆழ்ந்த விடுகிறார்கள் காதில் இயர் போனை வைத்துக்கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடல் சினிமா இவற்றில் மூழ்கி விடுகிறார்கள். இதனால் தற்சமயம் ரயில்களில் சம்சா விற்பவர் குரல் மற்றும் ரயிலின் சத்தம் மட்டுமே நமக்கு கேட்கிறது.
இப்படித்தான் நேற்று நான் மின்சார ரயிலில் பயணம் செய்யும்போது அமைதியான அந்த சூழ்நிலையில் திடீரென்று ஒரு சுளிர் சத்தம் அதைத்தொடர்ந்து ஒரு சிறுவன் அழும் சத்தம் கேட்டது. ஒட்டுமொத்த ரயில் பெட்டி பயணிகள் கவனமும் அந்த சிறுவன் பக்கம் திரும்பியது. விஷயம் இதுதான் அப்பாவின் செல்பேசியை வாங்கி செல்பேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சிறுவன் செல்பேசியில் அவரிடம் இருந்து அவர் அப்பா வாங்கியதை தொடர்ந்து அவர் ஏதோ பிடிவாதம் பிடிக்க அப்பா அவர் முதுகில் ஓங்கி அறை வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த சிறுவன் அழுது ஆத்திரத்தில் அம்மாவிடம் தெலுங்கில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அப்பாவை திட்டுகிறார் என்பது மட்டும் எனக்கு புரிந்தது. தவிர தன்னை அடித்ததை எல்லோரும் பார்த்து விட்டார்கள் என்ற கௌரவ பிரச்சனையும் அந்த சிறுவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அதையும் சுட்டிக்காட்டி அம்மாவிடம் அவர் புகார் சொல்ல அதனைத் தொடர்ந்து தனது கணவரை தொடர்ந்து வசை பாடிக் கொண்டிருந்தார் மனைவி. இப்போது கணவருக்கு தர்ம சங்கடம் ஏற்பட அவர் சட்டென்று எழுந்து போய் ரயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டிருந்தார். இதெல்லாம் ஒரு பத்து நிமிடம் தான். அதற்குப் பிறகு அம்மாவும் பையனும் சகஜமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். நிலைமை சரியாகி விட்டதே உணர்ந்த அப்பா அல்லது கணவர் மீண்டும் தன் இருக்கையில் வந்து உட்கார அப்போது அப்பாவை பார்த்து புன்னகைத்தபடியே அந்த சிறுவன் அவர் பாக்கெட்டில் இருந்த செல்பேசியை எடுத்து மீண்டும் விளையாட்டில் மூழ்கி விட்டான்.
குடும்ப வாழ்க்கை என்பது இதுதான் போலும்.
நாம் சரியாகப் பேசினாலும் நமது உறவுகள் தவறாக புரிந்து கொள்கின்றன. நாம் தவறாக பேசினாலும் நம்மை சரியாக புரிந்து கொண்டிருப்பது google மட்டுமே. இது வாட்ஸ் அப்பில் வந்தது.
Leave a comment
Upload