தொடர்கள்
ஆன்மீகம்
"நான்" மறைந்த தினம். - 1 பால்கி

20221103000837961.jpg

ஆம். எனது இரண்டாவது சபரிமலை யாத்திரையின் போது தான் அப்பேறு கிட்டியது.

தனயன் தந்தைக்கு குருவானது.

நீ எதைத் தேடி வந்தாயோ? அது நீயே தான். உன்னுள் இறைவன் இருக்கிறான் என்ற தத்வமஸி மந்திரம் விளக்கப்பட்ட தினமும் கூட, எனில் அந்த பயணம் ஒரு அரிய ஆன்மீக ஸ்பெஷல் தானே.

மும்பையிலிருந்து, எனது ஏழு வயதே நிறம்பிய மூத்த பைய்யன் தீபக்குடன் அக்டோபர் 2, 1993 ஆம் நாள் துளஸி மணி மாலையிட்டு மண்டல விரத விதிகளை கோலாகலமாக அனுசரித்து அனுபவித்து நவம்பர் 13 ஆம் தேதி மும்பை குர்லா டெர்மினஸில் ரயிலேறி மறுநாள் திரிசூரில் இறங்கி குருவாயூர் க்ருஷ்ணன், மம்மியூர் மஹாதேவன், த்ரிப்ரயார் ராமன், சோட்டணிக்கரை பகவதி, குளத்துப்புழை பாலனான அய்யப்பன், ஆரியங்காவு ஆயனான அய்யப்பன், அச்சன் கோவில் அரசனான அய்யப்பன் என கோவில் தரிசனங்கள் முடித்துவிட்டு 17ஆம் தேதி எரிமேலி கிராத சாஸ்த்தா கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.

சிறுவன் தீபக்கின்.” அம்மாவிடம் போகணும்” என்ற அவ்வப்போது எழும் பெரும் அழுகைக் கட்டளைகள் சோதித்து விடும். இப்போதே போலாம் என்றால் நான் பட்ட பாடு சொல்லி மாளாது. லஞ்சமாய் பல பொம்மைகளைச் சேர்த்தான். இருந்தும் அந்த சோதனை என்று வருகையில் ஒரு ப்ரளயமே ஆகிவிடும். அங்கு நடந்த பேட்டைய்த் துள்ளல் அவனை அம்மாவை மறக்கச்செய்திருந்தது.

மாலை சுமார் நான்கு மணி அளவில் பம்பா நதியை நெருங்கினோம். இளந்தூறல் சற்றும் இடைவெளியின்றி சல சலக்க மாலையே தெரியாது இருள் கவ்விக்கொண்டது அங்கே. மாளிகைப்புரங்கள் (னுமதிக்கப்பட்ட வயதுடைய அய்யப்ப விரதத்தில் இருக்கும் பெண்மணிகள்) சிறுவர்களான மணிகண்டன்களை டோலியில் மலையேறி சன்னிதியை அடையுமாறு எங்கள் குருஸ்வாமி பணித்திருந்தார். இருமுடிக்கு ப்ளாஸ்டிக் ஷீட் போர்த்திக் கொள்ளவும் என்றும் உத்தரவு.

ஐய்யோ! இதென்ன சோதனை? குழந்தையை யாருடனோ தனியாக விட்டு , அதுவும் சல சல மழையில் இருட்டில்…என்று எண்ணத்தில் திகில் கலந்த திக்கில். அப்போது என்னுடன் இருந்த குமார் அய்யப்பன்,” மூர்த்தி! கவலைப்படாதே, எல்லாம் அவன் செயல் என்று விட்டு விடு”, என்ற அனுபவ வார்த்தைகளைக் கேட்டும், அந்த நேரத்திற்கு – இன்னும் எவ்வளவு சீக்கிரம் சன்னிதி அடைந்தால் தீபக்கைக் காணலாம் என்ற பய(ம்)ங்கர சப்புக்கட்டை ப்ளான் மட்டும் என் மூளையில் ஓடியது. ஜடமாகியது உடல் சிறுகச் சிறுக.

நேரம் எப்படி கடப்போமோ? தூரம் எப்படி கடப்போமோ? சன்னிதி எப்படி சட்டென சேர்வோமோ? என்ற இலக்கு கேள்விகள் மனதில் சுழட்டி சுழட்டி அடித்தன.இன்னும் டோலிகளின் ஸ்டாப்பிற்கு அருகிலேயே திரிந்து கொண்டிருந்தோம் நானும் குமாரும். கூட ஸ்ரீதர் ஜவள்கர் என்ற மராட்டிய அய்யப்ப பக்தன்.

நாந….நாந… என்று ஈனஸ்வரம் கேட்டு கன்றின் கரைதலைக் கேட்டு தாய்ப் பசு போன்ற பிரமை சட்டென ஏற்பட, அருகிலிருந்த டோலியினை குனிந்து டார்ச் அடித்து பார்க்க அந்த டோலியில் மீனாட்சி மாளிகைப்புரம் அந்த பிரதான அமரும் குழியில் அமர்ந்திருக்க அவரது தொங்கிக் கொண்டிருக்கும் கால்களுக்கிடையில் அந்த பாட்டியின் புடவையைத் தன் பிஞ்சுக் கைகளில் பிடித்தவாரே, நாந..நாந..என்று முனகிக்கொண்டிருந்த எனது தீபக்கைக் கண்டு பக்கென்றது. எனக்கு.

இது என்ன ஸ்திதி பகவானே? டோலியை தூக்கிக் கொண்டு ஓடுகையில் gripபின்றி கீழே விழுந்து விடுவானோ? என்ற கலக்கமுடன் நானிருக்க மற்ற டோலிகள் அங்கிருந்து சென்று விட்டிருந்தன.

பைய்யனின் நிலைகண்டு நிலையின்றி நின்றிருந்த எனக்கு அவன் அடுத்து கூறியது அடுத்த கலக்கத்தைத் திணித்தது. “நான் உன்னுடனேயே வந்து விடுகிறேன் நடந்து…..அப்பா” என்றானே பார்ப்போம்.

ஒரு க்ஷண நேரத்தில், குழந்தை யாருடனோ ப்படியோ இருட்டில் இந்த சல சல மழையில் செல்கிறானே என்ற ஏக்கத்திலிருந்த எனக்கு, இப்போது குழந்தை என்னுடனேயே வருகிறான் என்றது எனக்கு ஜாக்பாட் அடித்த மாதிரி இருந்தது.

எண்ணி முடிக்கவில்லை உடனே, அவனை எப்படி அழைத்துச்செல்வது? முன்பிலோ, குழந்தையை கூடவே நடத்தி இட்டுச் செல்ல குருஸ்வாமி பர்மிஷன் குடுக்கலியே என்று ஆதங்கப்பட்டேன், இப்பவோ, பெரியவர்களாலேயே இந்த சல சல மழை சறுக்கும் மலை இந்த கண்டிஷன்ல இவனைப் போய் …நான் போய்…எப்படி கொண்டு போகப்போகிறேனோ என்ற சுமையை உணர ஆரம்பித்தேன். நடந்து போகையில், எனக்கு சறுக்கினால், அவனும சறுக்கி விழுவானே, திடீரென்று, அவனுக்கு முடியவில்லை என்று சொல்லிவிட்டால் அவனை எப்படித் தூக்கிக் கொண்டு போவது? யார் துணை வருவார் என்ற என் புலம்பல்களுக்கு, கூட இருந்த குமார் ஐய்யப்பன் தான் தத்வார்த்தமாக.” மூர்த்தி ஐய்யப்பா! கவலைப்படாதே நீ வேணா பாரேன் இந்த மணிகண்டன் தான் இட்டுச் செல்லப் போறான்”, என்றான் திடமாக.

டோலியிலிருந்து தீபக்கை இறக்கி என்னுடன் சேர்த்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். பம்பா கணபதியை அடைந்தோம். தனது இடக்கைய்யால் எனது கைய்யைப் பிடித்துக்கொண்டான். தனது வலக்கய்யால் தலையில் அமர்ந்திருக்கும் தனது இருமுடியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தான். மனது ஏனோ கனமாயிருந்தது.

20221102212708990.jpeg

சல சல மழை தனது இச்சையை லேசாக்கிக்கொண்டிருந்தது. தன்னிச்சையாய் கட்டுக்கடங்காது அகலமாய் கால் போன போக்கில் வளர்ந்து பரவியிருந்த வேர்கள் செப்பனிப்படாத மலைப்பாதையாய் அமைந்திருந்தது. கால் வைக்குமிடம் சரியானதா? சரிவானதா? தெரியாது. போதாக்குறைக்கு, தூறிய மழையில் மலைப்பாதை மண் குழைந்து க்ரீஸ் மாறிப் போயிருந்தது.

எனக்கு, ஒரு அடி முன்னே வைத்தால், இரண்டடி பின்னுக்கிழுத்து. பைய்யனை,”கெட்டியாய் கைய்யாய் பிடிச்சிக்கோ” என்றேன்.

ஆச்சர்யம். அப்பா! நீ சறுக்கிறயே. என் கைய்யை நல்லாப் புடிச்சிக்கோ” என்ற பய்யனின் கிளியரான வாய்ஸ் அந்த இருளாகிப்போன மாலையை சத்தியமாக சன்னமாகக் கிழித்தது.

உணர்ந்தேன் அன்று. நினைக்கின்றேன் இன்றும் .. எழுதுகையில் சிலிர்த்துக்கொண்டேன் எனையுமறியாமல். “நான்” எனது முன்னால் இறப்பதை உணர்ந்தேன். வயது ஒரு பொருட்டல்ல. தனயன் தந்தைக்குக் குருவானான். அனைத்தையும் மதிக்கணும் என்று நெற்றிப் பொட்டில் அடிக்கப் பட்டேன்.

அந்த நேரம் முதல் சன்னிதி வரை நடந்தது ஏதோ அனிச்ச செயலாகவே பட்டது.

வழியில் காலை கல் குத்த தீபக்,” ஐய்யோ! என்று கத்துவான். “அப்பா” என்று சேர்த்து அய்யப்பா என்பேன் நான். எவ்வளவு தூரம்தான் இது தொடரும்…ம்ம்ம்….

நீலி மலை ஏறினோம். அப்பாச்சி மேடும் ஏறினோம். சபரி பீடமும் வந்தது. போனது.

மழை பெய்கிறது என்ற காரணமோ என்னவோ, ஆரம்பத்தில் மிகுந்திருந்த கூட வருவோர் எண்ணிக்கையில் நலிந்தனர் . நாங்கள் நால்வரும் தனிப்பட்டோம். நான்காமவர் ஸ்ரீதர் ஜவள்கர் என்ற மராட்டி பேசும் அய்யப்பன். அந்த யாத்திரை அவருக்கு இரண்டாவது முறை.

(அடுத்த வாரம் இறுதிப் பகுதி)