தொடர்கள்
கதை
ரெட்டை வால் ராம்ஜி - எம்.ஆர். மூர்த்தி

20240731095202809.jpg

(ரெ.வா.ரெங்குடு படம் ஆசிரியர் மதன்)

என் பெயர் ராஜா. 2Gக்கும் ராஜாக்களுக்கும் என்ன விட்ட குறை, தொட்ட குறையோ…!

இங்கு நான் 2G என்று குறிப்பிட்டுள்ளது என் மனைவி ராஜி, சீமந்த புத்திரன் ராம்ஜி. இந்த 2 ஜி க்களால் எனது வேலை போனதுதான் இந்தக் கதையின் ஒன் லைனர்.

என் மகன் ராம்ஜிக்கு நாலு வயது கூட ஆகவில்லை. நானும் ராஜியும் ஆஞ்சநேய பக்தர்களாதலாலோ என்னவோ, அவரே அவதாரம் எடுத்தது போலப் பிறந்தவன். காலனி வாசிகளுக்கு சிம்ம சொப்பனம். கொட்டாவி விடும் பெரிசுகள் கூட ராம்ஜி என்றதும் வாயடைப்பர். ஒரு தடவைக்கு பல தடவை தீர ஆலோசனை செய்துவிட்டு, தேவைப்பட்டால் ஒழிய, எங்கள் வீட்டுக்கு வரவோ, அவர்கள் வீட்டுக்கு அழைக்கவோ செய்வார்கள். மனிதர்களின் எந்த அவயவமும் ராம்ஜியின் எக்ஸ்ரே கண்களுக்கு தப்பாது. சில நொடிகளில் பட்டப் பெயர் சூட்டி விடுவான்.

“ அப்பா, முட்டைக்கண் மாமா வந்திருக்கார்… மாமி, ஒங்க பின்னல் ஏன் எலி வால் மாதிரி இருக்கு..? உங்க வீட்டு மாமா நாய் மாதிரி, ஏன் காதை மட்டும் ஆட்டிண்டு இருக்கார்… அம்மா… ரெட்டை மண்டை மாமியை மார்க்கெட்டுல பார்த்தேன்…” , இந்த வகை வார்த்தகளைக் கேட்டு, இவனை எந்த வகையில் சேர்ப்பது என்று ரூம் போட்டு யோசித்திருக்கிறேன்.


வார்த்தைகளை விடுங்கள். ஆக்‌ஷனிலும் ஒரு அதிரடி ஆத்மா. எங்கள் வீட்டுக்கு யார் வெறுங்கையோடு வந்தாலும், வெறுங் காலோடுதான் போவார்கள். பாதுகைகளை எங்கேயாவது பாதுகாப்பான இடத்தில் பதுக்கி விடுவான். ராம்ஜியின் குணாதிசயங்களைப் புரியவைக்க எத்தனையோ சம்பவங்கள் இருந்தாலும் புல்லரிக்க வைக்கும் இந்த விஷயத்துக்கு வருகிறேன்.

எனக்கு வெகு நாட்களாக, என் பாஸ் பட்டாபியை, வீட்டுக்கு விருந்துக்கு அழைக்க வேண்டும் என்று ஆசை. அதே சமயம் என் கண்முன்னே பாஸ் ராம்ஜியால் பீஸ் பீஸாவது வயிற்றில் புளியைக் கரைத்தது. அதற்குக் காரணம் உண்டு. பாஸ் பட்டாபியின் மூக்கு உலகப் பிரசித்தி பெற்றது. பாஸின் மூக்கு, பரந்து விரிந்து எலிபெண்டா குகை மாதிரி முகத்தில் முக்கால் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். ஆபீஸில் அவருக்கு, ’மூக்கோபாத்யா ’ என்ற பெங்காலி செல்லப்பெயர் இருப்பது அவருக்கே தெரியும். இறைவன் கொடுத்ததை என்ன செய்ய முடியும்..? அது ராம்ஜியின் கண்களுக்குத் தப்பும் என்று நான் தப்புக் கணக்கு போட தயாராக இல்லை.

அவரை விருந்துக்கு அழைத்த நாளுக்கு ஒரு வாரம் முன்பே கான்ஃபரன்ஸ் கூடியது. “ ராம்ஜிக் கண்ணா... சமத்துக் கண்ணா... அடுத்த ஞாயிற்றுக் கிழமை நம்ம வீட்டுக்கு ஒரு மாமா டின்னருக்கு வருவார். ஒனக்கு நெறைய சாக்லெட்டெல்லாம் வாங்கிண்டு வருவார்... அவர் மூக்கைப் பத்தி மூச்சு விடக்கூடாது. அவர் போனப்பறம் ஒனக்கு வடை மாலை சாத்தி, ஒரு கிலோ ஐஸ் கிரீம் வாங்கித் தரேன்...” இதை தினமும் நானும் ராஜியும் மூன்று வேளை ராம்ஜிக்கு ஓதினோம். ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. அன்று மாலையே, பாஸ் கொடுத்தனுப்பினார் என்று ஒரு வண்டி தின்பண்டங்களால், மகனைத் திணறடித்தேன். ஒரு வேளை, பாஸ் வெறுங்கையை வீசியபடி வந்தால்....?

“ டிங் - டாங்..”

“ ராம்ஜிக் கண்ணா... பாஸ் வந்துட்டார்... சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்ல... அவரைப் பத்தியோ அவரோட மூக்கைப் பத்தி ஒண்ணும் சொல்லக் கூடாது...” நாங்கள் இருவரும் பட்டாபியை ஓடி ஆடி உபசரித்தோம்.

பட்டாபி சூப்பை சப்புக் கொட்டினார். டைனிங் டேபிளை ஒரு சர்வே செய்தார். இட்லி, சட்னி, சாம்பார், புலாவ், புளியோதரை, தயிர்வடை , பாதாம் கீர் என்று ஒரு மினி சரவண பவனே டேபிளை சரணடைந்திருந்தது. ஒரு சேரில், விளம்பில் உட்கார்ந்து, பட்டாபியையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் ராம்ஜி. “ பையன் ரொம்ப சமத்தா, சைலண்டா இருக்கானே... வெரிகுட்... வெரிகுட்..” என்று பாராட்டு மழை பொழிந்தார்.

பட்டாபி சாப்பிட ஆரம்பித்தார். எங்கள் இருவருக்கும் டென்ஷன் ஏறிக் கொண்டே போயிற்று. இவ்வளவு அமைதியாக ராம்ஜி இருந்து எங்கள் வாழ் நாளில் நாங்கள் பார்த்ததே இல்லை. இந்த அமைதிக்குப் பின்னால்....? இருவரும் அவன் மேல் ஒரு கண் வைத்தவண்ணம் இருந்தோம். ஒருகால், விபரீதம் விளைந்தால்... என்ற அச்சமும் எழாமல் இல்லை. ராம்ஜி, என்னையும், ராஜியையும் , பட்டாபியின் மூக்கையும் பார்த்து விட்டு தன் மூக்கை உறிஞ்சிக் கொள்ளும்போதெல்லாம், எங்கள் சர்வநாடியும் ஒடுங்கி விடும். ராக்கெட்டை ஏவி விட்டுவிட்டு, நகத்தைக் கடித்தபடி, கம்ப்யூட்டர் திரையைப் பார்த்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அறையில் காணப்படும் டென்ஷன் எங்கள் வீட்டிலும் வியாபித்தது. பட்டாபி முதல் ரவுண்டு முடித்து விட்டு, இரண்டு இட்லிகளை தன் தட்டில் போட்டுக் கொண்டார். ராம்ஜியை ஓரக்கண்ணால் பார்த்தபடி, மிளகாய்ப் பொடி கிண்ணத்துடன் அவரை அணுகிய ராஜி, “ இட்லிக்கு மிளகாய் பொடி போடட்டுமா...? “ என்று கேட்க நினைத்தவள் கேட்டாள்,

“ மூக்குக்கு மிளகாய் பொடி போடட்டுமா...? “