தொடர்கள்
வலையங்கம்
ஜனநாயகத்தை நம்புங்கள்

20240729193917196.jpg

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இப்போது மூன்று கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இப்போது சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன் வந்திருக்கிறது.

இந்திய அரசியல் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடக்கும் சட்டமன்றத் தேர்தல். அதே சமயம் பல மாதங்களாக ஓய்ந்திருந்த பயங்கரவாத தாக்குதல்கள் மீண்டும் ஜம்மு காஷ்மீரில் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த தாக்குதல் நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் இந்த தாக்குதல் அவ்வளவாக இல்லை. இது பயங்கரவாதிகளின் அணுகுமுறை மாற்றமா அல்லது தேர்தல் நடத்தக்கூடாது என்பதற்கான அச்சுறுத்தலா என்று தெரியவில்லை.

எது எப்படியோ தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்த பிறகு தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வாக்குப்பதிவில் கலந்து கொள்ளும் வாக்காளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது. தேர்தல் ஆணையத்தின் கடமை. அதை சரிவர தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும். அதேசமயம் காஷ்மீர் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு என்றால் அது ஜனநாயகம் மூலம் மட்டுமே சாத்தியம் என்பதையும் உணர வேண்டும்.