இறப்பு எங்கு நடந்தாலும் , யார் வீட்டில் என்றாலும் பெரும் துக்கத்தைத் தருவது . உறவில் , அண்டை வீட்டில் மரணம் ஏற்பட்டால் அவர்களது துக்கத்தில் பங்கு பெற நேரில் சென்று அஞ்சலியை செலுத்தி வருவோம். சினிமா ,அரசியல் பிரபலங்கள் வீட்டில் மரணம் நடந்தால் , நாம் பதைத்துப் போய் ." எப்படி நடந்தது , இந்த வயதில் மரணமா ? அவர்கள் எத்தனை சாதனைகள் செய்து இருக்கிறார்கள் .இன்னும் பல ஆண்டுகள் அவர்கள் இருந்திருக்க வேண்டும் " என்று ஆதங்கப்படுகிறோம் . இது இயல்பானது .
ஆனால் இன்றைய சமூக ஊடகங்கள் பிரபலங்களின் மரண வீட்டில் கேமரா ,மைக் சகிதம் சென்று அவர்களது வீட்டில் நுழைந்து ,பேட்டி எடுப்பதும் ,கருத்து கேட்பதும் என்று அத்து மீறி நடக்கிறார்கள் . சமீப காலத்தில் இது மிக அதிகமாகவே நடக்கிறது .
எனவே ,இந்த வார விவாதப்பொருள்
"பிரபலங்களின் இல்லங்களில் ஏற்படும் மரண நிகழ்வை படமாக்க சமூக ஊடகங்கள் எல்லை மீறி நடக்கின்றன ? இதைத் தடுக்க என்ன செய்யலாம் ?"
பார்கவன், Reston, VA USA
மரண நிகழ்வு ,யாராக இருந்தாலும், அது ஒரு துக்கமான நிகழ்வே. தனிபட்டவர்களின் துக்கத்தில் பங்கெடுக்க மற்றவர்கள் அமைதி காக்க ,அஙகு வரும் எவருக்கும் அந்த அமைதியாய் கெடுக்க உரிமை இல்லை , ஊடகங்களை சேர்ந்தவர்கள் உட்பட.
பாதுகாப்புக்காக இருக்கும் காவல்துறை மற்றும் தனிப்பட்ட செக்யூரிட்டி, ஊடகங்களை தடுத்து ,கேட்டிற்கு வெளியே நிறுத்தி விடலாம்.பொது மக்கள் அஞ்சலி செலுத்த, பொது இடங்களில் உடல் கிடத்தபடும் போதும் இதே நடவடிக்கை மேற்கொள்ளலாம் .மாற்றாக, எல்லோருமே, ஊடகங்கள சேர்ந்தவர்கள் உட்பட நாகரீகம், கண்ணியம் கடை பிடிக்கலாம்./கற்றுக்கொள்ளலாம்
தயாநிதி ,சென்னை
பிரபலமானவர்களின் வீடுகளில் இறப்பு நிகழும் போது , மிக அதிகமாக ஊடகங்களின் தலையீடு இருக்கிறது .இவர்கள் பொது மக்களின் கவனத்தைப் பெற அத்து மீறி நடக்கிறார்கள் . மரணம் யார் வீட்டில் நடந்தாலும் அது இழப்பு , துக்கத்தைத் தருவது .அவர்கள் மனம் விட்டு அழவோ, துக்கம் அனுசரிக்கவோ முடியாத அளவுக்கு சமூக ஊடகங்கள் , தொலைக்காட்சி சேனல்கள் இடையூறு செய்கின்றன ."யார் ,யார் வருகிறார்கள் , அவர்கள் என்ன சொன்னார்கள் ""யார் யார் வரவில்லை .அவர்கள் ஏன் வரவில்லை ?" என்று சங்கடமான கேள்விகளை கற்பனை கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள் . ஒரு படி மேலே சென்று "எதனால் இறப்பு நேர்ந்தது?" என்பதற்கும் கருத்து கேட்பதும் ,கற்பனையாய் கதைகளை சொல்வதுமாக இருக்கிறார்கள் .இது ஒரு அநாகரிகமான விஷயம் .அதை விட அழுபவர்களை க்ளோஸ் அப்பில் காட்டி கொண்டு இருப்பார்கள். இவ்வாறு செய்யாமல் இருக்கவும் , இறப்பு வீட்டில் கண்ணியமாக மரியாதை செலுத்தவும் நம் ஊடகங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் . தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்சார் தேவைப்படுவது பற்றி நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம் . இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது .
நன்றி வாசகர்களே .
இறப்பு நிகழும் வீடுகள் , பிரபலமானவர்களின் வீடானாலும் சரி ,யார் வீடானாலும் சரி ஊடகம் தனக்குரிய கண்ணியத்தை காக்க வேண்டும். துக்கத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான தனிமையைத் தர வேண்டும் . ஊடக பொறுப்பில் உள்ளவர்கள் இது குறித்து சிந்தித்து ,செயலாற்ற வேண்டும் .
இதுவே இப்போதைய தேவை .
Leave a comment
Upload