தொடர்கள்
தொடர்கள்
பெண்களுக்கான சுய அதிகாரம் -12 - பத்மா அமர்நாத்

20240108220538360.jpg

பாலின வேறுபாட்டைக் களைந்து, பெண்கள் ஒவ்வொருவரும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கான கல்வியின் அவசியத்தையும், தன்னை அறிதல் பற்றிய முக்கியத்துவத்தையும் முன் கட்டுரைகளில் பார்த்தோம்.

இதைத் தொடர்ந்து, சுய நிர்ணய உரிமை பெற்றுச் செயல்பட, அடுத்த முக்கியமான அம்சம்…

பொருளாதாரம் :
காசு.. பணம்.. துட்டு.. MONEY.. MONEY….

பெண்களுக்கான பொருளாதாரச் சுதந்திரம், சுய வருமானம் கட்டாயம் தேவை.
தான் பெற்ற கல்வியின் மூலமாக பெறப்படும் வேலையாக இருக்கலாம் அல்லது சுய தொழிலாகவும் இருக்கலாம்.

பொருளாதாரச் சுதந்திரம் என்பது, ஒரு வாழ்க்கைப் பயணம், இலக்கு அல்ல. சம்பாதித்து, தொடர்ந்து சேமித்து, அதைச் சிறந்த முறையில் முதலீடு செய்வது தான் பொருளாதாரச் சுதந்திரத்தின் உத்தி. வாழ்க்கையில் செலவுகளைச் சமாளிப்பதற்கும், மற்றவர்களை நம்பாமல் விரும்பிய வாழ்க்கை முறையை அனுபவிப்பதற்கும், குறிப்பாக ஓய்வுக்குப் பின், போதுமான நிதி ஆதாரங்களை ஒருவர் சேமித்து வைத்துள்ள நிலையை, பொருளாதாரச் சுதந்திரம் எனலாம்.

பணம் என்பது, பெரும்பாலும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையாகவே இருந்து வந்தது. உலகளவில், நிதித் துறையில் வேலை செய்ய, ஆண்களையே நியமித்து வந்தனர். இன்றளவும் பல துறைகளில், ஆண்கள் செய்யும் அதே வேலையைப் பெண்கள் செய்தாலும், பாலின வேறுபாட்டின் அடிப்படையில், பெண்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது (gender pay gap).

பல நாடுகளில் இதை எதிர்த்துப் பெண்கள் போராடி வருகின்றனர்.

தான் வேலை செய்து, தன் கைகளால் வருமானத்தைப் பெறும் ஒவ்வொரு பெண்ணும், சாதித்த உணர்வைப் பெறுவார்கள். பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக இருக்கும்போது, ​​அவர்கள், இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாகச் செயல்படுகிறார்கள்.

20240108220736541.jpg

இது ஒரு நல்ல மாற்றத்திற்கு வழி வகுப்பதுடன், சுதந்திரத்துடன் பெண்கள் செயல்படும், ஒரு முற்போக்கான சமூகத்திற்கு வழிவகுக்கும்.

ஓர் உதாரணத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மகாராஷ்டிராவில் உள்ள ரோபர்கெடா (Roperkheda) கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர், கல்பனா சரோஜ். போலீஸ் கான்ஸ்டபிளின் மூத்த மகள். 12 வயதில் திருமணம். கணவர் வீட்டில், உடலளவிலும் மனத்தளவிலும் துன்புறுத்தப்பட்டார்.

பின், சகித்துக்கொள்ள முடியாமல், தனது பெற்றோருடன் கிராமத்திற்குத் திரும்பினார். சிறு வயதிலேயே அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலைக் காரணம் காட்டி, வீட்டில் முடங்கி விடாமல், பொருளாதார ரீதியாக, தன்னை வலுவாக்கிக் கொள்ளும் சிந்தனையில் இறங்கினார், கல்பனா.

16 வயதில், குடும்பத்தைக் காப்பாற்ற, கார்மென்ட் கம்பெனியில் சேர்ந்து, தொழில் கற்றுக் கொண்டார். பிற்படுத்தப்பட்ட சாதியினருக்காக வழங்கப்படும் அரசாங்கக் கடனைப் பயன்படுத்தி, சொந்தமாக ஒரு தையல் கடையைத் தொடங்கினார்.

20240108220922776.jpg

பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கிய கல்பனா, 4 கோடி ரூபாய் சம்பாதித்தார். எல்லாவற்றையும் தாண்டி, நலிந்த நிறுவனமாக இருந்த ‘கமானி டியூப்ஸ்’ஐ, லாபகரமாக மாற்றி, தற்போது அந்நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

கல்பனா 2013 இல் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

20240108221018816.jpg
இன்று, இந்திய அரசாங்கத்தின் ‘பாரதிய மகிளா வங்கி’யின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக, கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.

சுயமாகச் சம்பாதிக்கும் ஒரு பெண்ணிற்கு, பொருளாதாரத்தின் மீது கட்டுப்பாடு இருக்கும். நிர்வகிக்கும் திறன் அதிகரிக்கும். தன் தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்து இருக்காமல், சுயமாகச் சிந்தித்துச் செயல்பட ஊக்கமளிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, தன்னம்பிக்கை பிறக்கும்.

பொருளாதாரச் சுதந்திரம், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நாம் விரும்புகிறோமோ இல்லையோ, செல்வந்தர்களைக் கண்டால், சமூகம் அவர்களை வரவேற்கும். இதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். பணம் பெரும்பாலும் அதிகாரம், செல்வாக்கு மற்றும் உயர்வான அந்தஸ்துடன் பார்க்கப்படுகிறது.

பொருளுக்கு இவ்வளவு மதிப்பா, என்று திகைக்க வேண்டாம்…

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். (751)
என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது, தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை. இவ்வளவு பெருமைகள் கொண்ட பணத்தை, ஒவ்வொரு பெண்ணும் சுயமாகச் சம்பாதிக்க வேண்டும்.
அத்திறனை, பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் தேவைகளுக்கு யாரையும் சார்ந்து இருக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

பொருள் என்பது, ஒரு அணையா விளக்கு போன்றது. நினைத்த இடத்திற்குச் சென்று, அங்குள்ள இடையூறுகளையும், சிக்கல்களையும் களைந்து விடுமாம்.
குறள் 753ல் வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். உங்கள் சம்பாத்தியம், அதனால் நீங்கள் பெரும் பொருளாதாரச் சுதந்திரம், உங்களையும் தாண்டி, பிறருக்கும், இந்த சமூகத்திற்கும் உதவுவதற்கான சிறந்த வழியாக இருக்கும்.

20240108221112472.jpg

இப்படிபட்ட பொருளாதாரத்தை, நாம் கவனத்துடன், சிக்கனமாகக் கையாளவேண்டிய அவசியத்தை, ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து செயல் பட வேண்டும். பொருளைச் சேர்ப்பதற்கு நிகராக, பொருளாதார மேலாண்மை பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

20240108221155285.jpg

“அதெல்லாம் அவர் பார்த்துக்குவார்.” என்றில்லாமல், குடும்பத்தில் கவனம் செலுத்த வேண்டிய சிலவற்றை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

இணைந்திருங்கள்