அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகளை நான் வழக்கமாக கூர்ந்து கவனிப்பேன். குறிப்பாக முகநூலில் உள்ள நண்பர்கள் அங்கு தலைமை ஆசிரியராகவோ , ஆசிரியராகவோ பணி செய்யும் போது அவர்களது பதிவுகளைக் கவனமாக படிப்பேன். அர்ப்பணிப்பும் கடமை உணர்வும் கொண்ட நல்ல நண்பர்கள் பலர் அரசுப் பள்ளிகளில் தங்கள் உழைப்பைத் தந்து அவற்றை மேம்படுத்தி வருகிறார்கள் . சிறு சிறு உதவிகளை அவர்கள் கேட்காமலேயே செய்வேன் .
ஓச்சேரி அருகில் உள்ள மேலபுலம் கிராமத்தில் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த தி.பரமேசுவரி இங்கு வியக்கத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளார் .மிகவும் பின்தங்கி இருந்த பள்ளியின் கட்டமைப்புகளை சீரமைத்துள்ளார். சுற்றுச்சுவர் கட்டி, பள்ளிக்கு வர்ணம் அடித்து , நூல்நிலையம் அமைத்து ,ஸ்மார்ட் வகுப்புகள் என்று அப்பள்ளிக்கு ஒரு புதுப் பிறப்பைத் தந்துள்ளார் . சிலம்பம், கைவேலை கற்றுத்தருதல், மூலிகைத் தோட்டம், கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வைத்தல் என்று குழந்தைகளின் திறமையை வளர்த்து வருகிறார். இவை அனைத்தையும் அவர் நண்பர்களின் உதவிகளுடன் சாதித்து இருக்கிறார் .
இவரது ஒரே கவலை , மாணவர்களின் ஆங்கில அறிவைப் பற்றியதாக இருந்தது .அரசுப் பள்ளி மாணவர்கள் தடுமாறும் இடம் அது. நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்கல்வி நிலையங்களில் சேரும் போது பிற மாணவர்களுடன் சரியான விதத்தில் உரையாட முடியாமல், வகுப்புகளைப் பின் தொடர முடியாமல் தாழ்வு மனப்பான்மையில் தவிக்க வைக்கிறது அவர்களது ஆங்கிலம். அச்சமயத்தில் அவருக்கு நான் தொடர்பு கொண்டு , அம்மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த உதவி செய்வதாக உறுதி தந்தேன்.
ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு zoom வழி ஆங்கில மேம்பாட்டு வகுப்புகளை எடுக்க ஆரம்பித்தேன். கடந்த ஓராண்டாக, வாரம் இருமுறை ஆங்கில இலக்கணம், மொழிப் பயிற்சி , ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி அளித்து வருகிறேன். பவர் பாயிண்டில் வகுப்பைத் தயாரித்து, படங்களுடன் கற்பிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலம் ,தமிழ் இரண்டு மொழிகளின் இலக்கணங்களை ஒப்பிட்டு ,தமிழ் கலந்தே எளிமையாக பாடம் நடத்துகிறேன். மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் வகுப்பில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள் .
அப்போது நான் அறிந்த விஷயம் , கிராமப்புற மாணவர்களுக்கு வீட்டில் ஆங்கில பயிற்சி பெற செய்தித்தாளோ, ஆங்கில புத்தகங்களோ இல்லை.
அவர்களிடம் குறைந்த பட்சம் ஒரு ஆங்கில அகராதியாவது இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது ..ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வாங்கித்தர வேண்டும் என்று முடிவு செய்தேன்.
வீட்டில் இதைப்பற்றி பேசிக் கொண்டு இருக்கையில் , ஐந்தாம் வகுப்பு படிக்கும் என் பேத்தி ரியா தன் மண் உண்டியலை உடைத்து ரூபாய் நோட்டுகளும் ,காசுகளுமாக கை நிறைய அள்ளித் தந்தாள் .எண்ணிப் பார்த்ததில் இரண்டாயிரத்துக்கு கொஞ்சம் குறைந்தது .ஒரு பாக்கெட் டிக்ஷனரி அளவு வாங்கித் தர முடியும் என்று தோன்றியது . பரமேசுவரி மேடமுடன் இது பற்றி பேசிய போது ,"கொஞ்சம் பொறுங்க , பள்ளியில் உள்ள 617 மாணவர்களுக்கும் வாங்கித் தர நாம் முயற்சி செய்யலாம்" என்று சொன்னார்கள் .
முகநூலில் இது பற்றி உதவி கேட்டு நான் கோரிக்கை வைத்தேன். முகநூலில் ராஜா மகள் என்று அழைக்கப்படும் கோதை பதிப்பக உரிமையாளர் உதவிக்கு வந்தார் . நன்கொடை கேட்டு அவரும் திரு சரவணகுமார் தனிப்பதிவுகளில் கோரிக்கை வைக்க , நண்பர்கள் ஆயிரம், இரண்டாயிரம் என்று அனுப்பி வைத்தனர் . சென்னை புத்தக விழாவில் இருந்த தேன்மொழி , சுரா பதிப்பகத்தில் பேரம் பேசி 30% தள்ளுபடியில் நூல்கள் வாங்க பேசி வைத்தார் .ஒரு நண்பர் ரூ 12,600 அனுப்பி வைத்தார் .அத்துடன் மொத்த பணமும் சேர்ந்து விட்டது . 620 புத்தகங்களை வாங்கியது மட்டுமில்லாமல் அதை பள்ளி வரை கொண்டு சேர்க்கவும் உதவியது தேன்மொழியின் பரந்த மனம் .
இந்த மாதம் ஆறாம் தேதி பள்ளியில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் அந்த அகராதிகளை வழங்கினோம். மாணவர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அத்துடன் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுத் தந்தோம் .ஆங்கில ஆசிரியர்களை சந்தித்து, குழந்தைகளின் ஆங்கில அறிவை மேம்படுத்த அவர்கள் எடுக்க வேண்டிய முயற்சிகளைப் பற்றி விவாதித்தோம் .
ஆங்கிலத்தில் புலமை பெற தேவையான Listening , Speaking ,Reading , Writing என்னும் நான்கு வழிகளையும் எப்படி செம்மைப்படுத்திக் கொள்வது என்பது பற்றி மாணவர்களிடம் உரையாடினேன். ஆங்கில அகராதி ஒரு சிறு நூல்தான் .ஆனால் அதை ஆர்வமாக படித்தால் ஒரு வாழ்க்கையே மாற்றக்கூடிய நூல் . ஆங்கில அறிவு அவர்களை பல உயரங்களைத் தொட வைக்கும் என்பதையும் புரிய வைத்தோம் . என் அலுவலக தோழி சாந்தி அன்பரசும் மாணவர்களிடையே நல்ல கருத்துக்களை முன்வைத்தார் .
அடிப்படையில் நான் ஆசிரியை அல்லள். ஆனால் கற்பிக்கும் ஆர்வத்துடன் இந்த ஓய்வு காலத்தில் என்னால் ஆன சிறு பணியைச் செய்து வருகிறேன் . மாணவர்களது உற்சாகம், ஆர்வம் ஆனந்தம் எல்லாம் நாம் அனுபவித்து அறிய வேண்டிய சுகம் . இது போன்ற நிகழ்ச்சிகளில் அவர்களுடன் நேரம் செலவிடும் போது நாம் நிறைய கற்கிறோம். அது நூல்வழி நாம் பெறும் அனுபவங்களை விட மேலானது .
சமூகத்தில் இருந்து நாம் நிறைய பெற்றுக் கொண்டுள்ளோம் . இந்த சமுதாயத்துக்கு நாம் திருப்பி செய்ய கடன் பட்டவர்களாக இருக்கிறோம் .அதற்கான சிறு முயற்சியே இந்த உதவி. நீங்களும் அருகில் உள்ள அரசு பள்ளிகள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு உதவ வாய்ப்பு வந்தால் அதைத் தவற விடாதீர்கள் .
நமது நேரம், திறமை ,பொருள் போன்றவற்றை இந்த சமுதாயத்துக்காக செலவிட ஓர் உந்து சக்தியாக இந்நிகழ்ச்சி இருக்கவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம் தவிர வேறொன்றும் இல்லை .
நாளைய தலைமுறையை உயர்த்த நாமும் பங்களிப்போம் .
Leave a comment
Upload