தொடர்கள்
ஆன்மீகம்
சநாதன தர்மம் "மோட்ச சாதனம் " - ஆர் சங்கரன்

20240106220340800.jpg

சநாதன தர்மத்தின் மூன்றாவது சடங்குகளைப் பற்றி கூற ஆரம்பிக்கிறார் சங்கரன்.

சநாதன தர்மத்தின் சடங்குகளை மூன்று தொகுப்பாகப் பிரித்து முதல் தொகுப்பு ஆரோக்கியத்தையும், இரண்டாவது விழிப்புணர்வையும் மூன்றாவது மோட்ச சாதனத்தையும் தழுவியது என்று சொன்னோம்.

முதல் மற்றும் இரண்டாவது தொகுப்பை விரிவாகப் பார்த்தோம். மூன்றாவது தொகுப்பில் உள்ள சடங்குகளின் இயல்பை இப்போது அலசுவோம்.

இந்தத் தொகுப்பில் சொல்லப் படும் சடங்குகள் அல்லது கிரியைகள் எல்லாமே மோட்சம் எனும் இலக்கை நோக்கியவையாகும்.

‘பிறந்த எல்லாவற்றிற்கும் இறப்பு உண்டு, இறந்த எல்லாம் மறுபடி பிறக்கும்’ என்பான் கண்ணன் கீதையில். அப்படி பிறந்திறக்கும் சுழற்சியிலிருந்து விடுபட்டு நித்தியமான ஆனந்தத்தில் நிலைப்பதே மனிதப் பிறவியின் குறிக்கோள் என்பது சநாதன தர்மத்தின் வேதாந்தம்.

‘உணவு, உறக்கம், அச்சம், இனப்பெருக்கம் என்ற இந்த நான்குமே எல்லா ஜீவராசிகளையும் அவற்றின் வாழ்வில் உந்து சக்தியாக இருக்கிறது. மனிதனுக்கு மட்டுமே விவேகம் என்ற ஆய்ந்தறியும் திறன் கூடுதலாக உள்ளது. அதனைப் பயன்படுத்தாதவன் விலங்குக்கு நிகரானவன்’ என்பது நீதி நூல்.

இன்றைய காலகட்டத்தில் மேற்சொன்ன நான்குடன் கேளிக்கை என்பதையும் சேர்த்தால் அதுவே மனிதனின் வாழ்வாகி விட்டது. மற்ற உயிரினங்களுக்குக் கிட்டாத அறிவு மனிதனுக்குக் கிடைத்ததன் பலன் ‘நான் யார், எனது இந்த பிறவியின் இலக்கு என்ன’ என்ற சிந்தனையில் ஈடுபட்டு அந்த கேள்விகளுக்கு விடை காண்பதே ஆகும்.

நாம் ஏற்கெனவே பார்த்த மூன்று விஷயங்களை இங்கே நினைவு கூர்வோம்.

Ø எண்ணம், சொல், செயல் என்ற மூன்றுமே கர்மா ஆகும். அவற்றின் வினைப்பயனை அனுபவித்தே ஆக வேண்டும்.

Ø வினைப்பயன் முழுவதும் இல்லாமல்போனால் மோட்சம் கிடைக்கும்

Ø நல்வினை சுவர்கத்தையும் தீவினை நரகத்தையும் தரும். அவற்றின் கணக்கு தீர்ந்ததும் மீண்டும் பிறவியே.

என்றால் மோட்சத்திற்கு வழி என்ன?

2.12.2023 தேதியிட்ட நமது விகடகவி இதழில் பார்த்தது போல சஞ்சித கர்மாவை ஞானத்தால் எரித்து, ஆகாமி கர்மாவைத் தவிர்த்து, ப்ராரப்த கர்மாவை முழுவதும் அனுபவித்து விட்டால், மோட்சம். சொல்வதற்கு எளிதானாலும் இது ஒரு முழு வாழ்வின் முயற்சியாகும்.

நான் என்பது இந்த உடலோ அல்லது அதுசார்ந்த எதுவுமோ அல்ல, அது ஆன்மா, அந்த ஆன்மா என்று உறுதியான தெளிவுதான் ஞானம்.

நமது காலத்தில் பகவான் ரமணர், காஞ்சிப் பெரியவர், ஞானானந்தர் முதலியவர்கள் இந்த ஞான நிலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கினார்கள்.

அந்த ஞானம் வருவது எப்படி?

பலகாலம் பயன்படுத்தாத ஒரு வெள்ளிப் பாத்திரத்தைப் பலமுறைதேய்த்து அதில் படிந்த களிம்பை நீக்கி சுத்தம் செய்வதுபோல, உலகியலில் அமிழ்ந்த நமது அறிவைத் தேய்த்து உலகியல் அறிவு எனும் களிம்பை நீக்கி ஆன்மாவைக் காண உதவுபவை இந்த மூன்றாவது தொகுப்பு சடங்குகள்.

உடலெங்கும் ஓடும் ரத்தத்திலிருந்து பாலை உருவாக்கித் தரும் ரஸவாதத்தை ஒரு பசுவின் மடி செய்வது போல, பரபஞ்சம் முழுவதும் பரந்த பரம்பொருளை நமது அறிவில் தெரிய வைக்கும் ரஸவாதத்தைச் செய்வது இந்த சடங்குகள்.

இந்தச் சடங்குகள் எந்த உலகியல் பலனையும் எதிர்பாராது அவற்றால் நிகழும் ஞானத்தின் வெளிப்பாட்டிற்காகவே செய்யப் படுகின்றன. அவ்விதம் செய்தால் அந்த ஞானம் வரும். ஆன்ம ஞானத்தையே தரவல்ல இந்த சடங்குகள் உலகியல் நன்மைகளையும் தரும். ஆனால் அவற்றை ஒதுக்கி ஞானத்தை மட்டுமே வேண்டி நிற்கும்போது நமது அறிவு தெளிவுறும்.

இதையே ஆதி சங்கரர் ‘கர்மா என்பது அறிவைத் தூய்மைப் படுத்தவே, உலகியல் செல்வங்களை அடைவதற்கல்ல’ என்று விவேக சூடாமணியில் அழுத்தமாகச் சொல்வார்.

நான் யார், எனது இந்த பிறவியின் இலக்கு என்ன என்ற கேள்விக்கு உண்மையான விடை கண்டவர் பலர்.

உபநிடதங்களில் அது பலவாறாகச் சொல்லப் பட்டுள்ளது. ஆனாலும், அதை ஒரு நம்பிக்கையாக மட்டும் ஏற்காமல் ஒவ்வொருவரும் தாமே அதை உணர வேண்டும் அதுவே உண்மையான விடையை அறியும் சரியான வழி என்று வேதாந்தம் சொல்லும். அப்படி உணரவே இந்த மூன்றாவது தொகுப்புச் சடங்குகள் சொல்லப் பட்டுள்ளன.

ஒரு மாங்கொட்டை முளைப்பதின் குறிக்கோள் என்ன? அது தனது ஆயுள் முடியுமுன் தன்னைபோல் இன்னொரு மாங்கொட்டையை, தன்னைப்போல் இன்னொரு மாங்கொட்டையை உருவாக்கும் திறன்படைத்த மாங்கொட்டையை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும். ஆனால் அது நேரடியாக அதைச் செய்ய முடியாது. அதனால் அது முளைத்து வளர்ந்து பெரிதாகிப் பூத்துக் காய்த்துப் பழுத்து அந்தப் பழங்களின் உள்ளே உள்ள பல கொட்டைகளில் ஒன்று மீண்டும் முளைத்து வரும்போது, முதலில் முளைத்த மாங்கொட்டையின் பிறப்பு பலன் பெறுகிறது.

அதுபோல நானே ப்ரம்மம் அல்லது நீயே அதுவாகிறாய் என்பது போன்ற வேதவாக்கியங்களைச் சொல்வதாலோ அல்லது அவற்றைக் கண்மூடித்தனமாக நம்புவதாலோ ஞானம் பிறப்பதில்லை.

ஒன்றும் செய்யாமல் ஒருவனால் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அவன் உயிருள்ளவன் அல்ல, பிணம்.

ஆக, செய்யும் கர்மா எல்லாம் ஆன்மாவாகிய எனது அல்ல, அது தங்கியுள்ள இந்த உடல் தொடர்புடையது. ஆதலால் அந்த கர்மாவின் வினைப்பயன் எல்லாவற்றையும் நான் துறக்கிறேன் (ந மம - எனது அல்ல) என்று மனமாரச் சொல்பவனுக்கு அந்த வினைப்பயன்களைத் தாண்டிய ஞானம் தோன்றுகிறது. அவ்விதன் பலனைத் துறந்து கர்மாக்களைச் செய்ய இந்த மூன்றாவது தொகுப்புச் சடங்குகள் வழிவகுக்கின்றன.

இப்படி ஞானம் பிறந்தால், சஞ்சிதம் என்ற கர்மா எரிக்கப் படுகிறது, ஆகாமி என்ற கர்மா தவிர்க்கப் படுகிறது, ப்ராரப்தம் என்ற கர்மாவை அனுபவித்துத் தீர்க்க அந்த ஆன்மாவிற்கு வலிமை வருகிறது.

அது சரி, இப்படி சடங்குகள் நமது அறிவைத் தூய்மைப் படுத்துமா என்ற கேள்வியும் வரும். உடல் எடை கூடியவர்களுக்கு பல வித முறைகளைச் சொல்வார்கள். அதில் சாப்பிடாதே என்று சொல்ல மாட்டார்கள். உணவால் வந்த எடையை உணவால்தான் குறைக்கவும் முடியும். ஆனால் அந்த உணவு மாறும். அதுபோல கர்மாவால் வந்த வினைப்பயனை, கர்மாவால்தான் நீக்க முடியும், ஆனால் அந்த கர்மாக்களும் அவற்றைச் செய்யும் முறையும் மாறும்.

அந்த விதத்தில் இந்த மூன்றாவது தொகுப்பில் உள்ள சடங்குகள் யாவை, அவற்றின் தன்மை என்ன, அவற்றால் விளையும் நன்மை என்ன, அவை இந்த காலத்திலும் பொருந்துமா என்ற விஷயங்களை எல்லாம் வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம் என்று விடை பெறுகிறார்.