தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் - திராவிட வரலாற்றை சரியாக படியுங்கள் !!

20231109002258350.jpeg

உதயநிதி ஸ்டாலின் என்ற திடீர் அரசியல் தலைவர் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார் என்பதற்கு இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் ஒரு உதாரணம்.

கொசு டெங்கு போன்றவற்றை ஒழிப்பது போல் சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என்று அவர் பேசியதின் தாக்கம் தான் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மத்திய பிரதேஷ் மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது இரண்டு மாநிலங்களில் ஆட்சியை இழந்ததற்கும் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர்களே இப்போது கருத்து சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினின் சனாதனையை எதிர்ப்பு கருத்தை பாரதிய ஜனதா தனது வலுவான பிரச்சார கருவியாக பயன்படுத்தி மூன்று மாநிலங்களில் ஆட்சியை இப்போது பிடித்து விட்டது.

உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட வரலாறை விவரம் தெரிந்த திராவிடர் தலைவர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பது நல்லது. சனாதன தர்மத்தை பெரியார் எதிர்த்தார், அண்ணா எதிர்த்தார்,நானும் எதிர்க்கிறேன் என்று சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக வரலாறு தெரிய வாய்ப்பில்லை காரணம் அவர் திடீரென்று அரசியலில் நுழைந்திருக்கிறார். பெரியாரை எதிர்த்து தான் திமுகவே ஆரம்பிக்கப்பட்டது. திமுகவினரை பெரியார் துரோகிகள் எதிரிகள் என்று கடுமையாக தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டிருந்தார். 1967 சட்டசபை தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் கட்சியை ஆதரித்து திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியவர் தான் பெரியார்.

அண்ணாவைப் பொறுத்தவரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் நான் பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன் என்று கடவுள் எதிர்ப்பு பிரச்சாரத்தில் இருந்து ஒதுங்கியதால் தான் அவர் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

சட்டசபையில் ஆமாம் நான் பாப்பாத்தி தான் என்று சொல்லிக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு தான் திராவிடர் கழக வீரமணி சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை தந்தார், கருணாநிதிக்கு தரவில்லை. திராவிடர் கழகம் போல் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒரு சமுதாய இயக்கம்தான் என்று சொன்னவர் கருணாநிதி.

முதல்வர் ஸ்டாலின் கூட என் மனைவி கோயிலுக்குப் போகிறார் கடவுளை வணங்குகிறார் அவரது சுதந்திரத்தில் நான் தலையிடுவதில்லை என்று தான் சொல்கிறார். அப்படி இருக்கும் போது சனாதனத்தை நீங்கள் எப்படி ஒழிக்க முடியும். முதலில் திராவிட வரலாற்றை ஒழுங்காக படியுங்கள் அதன் பிறகு துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுங்கள்.