தொடர்கள்
வலையங்கம்
மணிப்பூர் தலைகுனிவு - வலையங்கம்

20230622052858545.jpg

மணிப்பூர் கலவரத்தின் போது பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக அழைத்துச் சென்ற ஒரு வீடியோ சில தினங்களாக வைரல் ஆகிறது. இந்த வீடியோ பற்றி மத்திய அரசு வழக்கறிஞரிடம் தனது வேதனையை தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மணிப்பூர் அரசும் மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் தலைமை நீதிபதி. பிரதமர் மோடி ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் மணிப்பூர் சம்பவத்தால் அவமானமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். குற்றவாளிகள் யாரையும் விடமாட்டோம் எல்லோரையும் கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.

சிலர் இது இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்கிறார்கள் அது இன்னும் கேவலம் இரண்டு மாதங்கள் ஆகியும் யாரையும் மணிப்பூர் அரசு கைது செய்யாமல் வேடிக்கை பார்த்து இருந்தது. இப்போது பிரதமர் உச்ச நீதிமன்றம் கண்டனம் என்று சொன்னதும் ஒருவரை கைது செய்வது எல்லாமே வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம். ஒரு செய்தி நிறுவனம் பாதிக்கப்பட்ட பெண்களின் பேட்டி வெளியிட்டு இருக்கிறது. அதில் அந்தப் பெண்கள் எங்களை அந்த கும்பலிடம் ஒப்படைத்ததே போலீஸ் தான் என்கிறார்கள். அது உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதனை வருத்தம் என்று வெறும் வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அத்தோடு விடாமல் இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு தலைகுனிவு என்று பிரதமர் சொன்னது உண்மையாக இருந்தால், நடவடிக்கை அதற்கு ஏற்றபடி கடுமையாக இருக்க வேண்டும். இது நம் தேசத்திற்கும், ஏன், இந்த அரசுக்கும் மிகப்பெரிய தலைகுனிவு என்ற உணர்வோடு நடவடிக்கை எடுத்தால் தான் நடவடிக்கை கடுமையாக இருக்கும்.