தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் - கர்ம வீரரை மறக்கலாமா ???

20230614180741804.jpeg

இந்த மாதம் 15-ஆம் தேதி காமராஜர் பிறந்த தினம் .தமிழ்நாட்டில் பல முதல்வர்கள் ஆட்சி செய்தாலும் காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, இவைதான் இன்று வரை பேசும் பொருளாக இருக்கிறது. திமுக கூட தனது தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் நாங்கள் கருணாநிதி ஆட்சியை கொண்டு வருவோம் என்று பேசியது கிடையாது. ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கே உதாரணமாக இருந்தது காமராஜர் ஆட்சி. காமராஜர் ஆட்சி என்பது மக்களுக்கான ஆட்சி.

1967-இல் காங்கிரஸ் கட்சி திராவிடக்கட்சி இடம் ஆட்சியை பறி கொடுத்தது ,இன்று வரை மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியவில்லை. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி அது பற்றிய சிந்தனையே இல்லாமல் கூட்டணிக் கட்சியின் முதுகில் சவாரி செய்து சுகம் காணுகிறது என்பதுதான் உண்மை. ஆரம்ப காலங்களில் காமராஜர் ஆட்சியை பற்றி பெருமை பேசியவர்கள் இப்போது அதை மறந்து ஸ்டாலின் புகழ் பாட ஆரம்பித்து விட்டார்கள் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் காமராஜர் ஆட்சியை உதயநிதி ஸ்டாலின் தருவார் என்று சொன்னார் .காமராஜரை உதயநிதி ஸ்டாலினுடன் ஒப்பிட அந்த காங்கிரஸ் தலைவருக்கு எப்படி தான் மனம் வந்தது என்று தெரியவில்லை ,இதைவிட காமராஜரை யாரும் கேவலப்படுத்த முடியாது.

இன்றைக்கு காமராஜரை பற்றியும் பேசுவதில்லை ,காமராஜர் ஆட்சி பற்றியும் பேசுவதில்லை .காமராஜர் பிறந்த தினம் என்பது காங்கிரஸ் கட்சியில் ஒரு சடங்கு மாதிரி ஆகிவிட்டது.

காமராஜர் ஆட்சி என்பது காங்கிரஸ் கட்சியின் அடையாளம் அதை காங்கிரஸ் கட்சி மறக்கலாமா... கர்மவீரர் ஆட்சி என்பது அடித்தள மக்களுக்கான வாழ்வாதாரத்தை தேடி தரும் ஆட்சியாக இருந்தது என்பது தானே உண்மை. அதை காங்கிரஸ் கட்சி இந்த தலைமுறைக்கு சொல்ல வேண்டாமா ,மீண்டும் காமராஜர் ஆட்சி அமைக்க முயற்சி செய்ய வேண்டாமா கர்மவீரரை மறக்கலாமா கதர்சட்டைக்காரர்கள் யோசிக்கட்டும்.