நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் எண்ணிக்கை விவரத்தை மக்களவை உறுப்பினர் கேட்ட ஒரு கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்திருக்கிறது..இதன்படி உச்சநீதிமன்றத்தில் 72,062 வழக்குகள் தேக்கம்.உயர்நீதிமன்றங்களில் 59,45,709 வழக்குகள் தேக்கம்.மாவட்டம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 4,19,79,353 வழக்குகள் தேக்கம் என்று மத்திய அரசு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது.
மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் தான் நமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றைக்கும் அப்பாவி பாமரனுக்கு இருக்கிறது. ஆனால் அங்கேயே கோடிக்கணக்கில் வழக்குகள் தேக்கம் என்றால் இதற்கு என்ன காரணம் என்பதை அரசாங்கமும் நீதிமன்றமும் விளக்க வேண்டும். அது அவர்களுடைய பொறுப்புடைமை கூட.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடிக்கடி மாவட்ட அளவிலும் கீழமை நீதிமன்றங்களிலும் போதுமான நீதிபதிகளை அரசு நியமிப்பது இல்லை என்று சுட்டிக்காட்டி பேசி வருகிறார் இதற்கு அரசு இதுவரை எந்த விளக்கமும் தந்ததாக தெரியவில்லை. இதேபோல் உயர் நீதிமன்றத்திலும் பலமுறை நீதிபதிகள் நியமனத்திலும் காலதாமதம் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதுபற்றியும் அரசு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இவை எல்லாவற்றையும் விட கீழமை நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு என்ற பெயரில் அந்த தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்கிறது நமது சட்ட அமைப்பு. இது பற்றி முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மேல்முறையீடு செய்வதற்கு என்று சில நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எல்லா வழக்குகளுக்கும் மேல் முறையீடு என்பது நீதிமன்ற தீர்ப்புகளை கொச்சைப்படுத்துகிறது என்று கருத்து தெரிவித்தார். இது முற்றிலும் நியாயமானது. இப்போதாவது வி.ஆர்.கிருஷ்ணய்யர் கருத்தை பரிசீலித்து மேல் முறையீட்டுக்கு உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.இதுவே தேங்கிக்கிடக்கும் வழக்குகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
கீழ்மை நீதிமன்றங்களில் வழக்குகள் வேகமாக முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றங்கள் சுற்றறிக்கை அனுப்பிய வண்ணம் உள்ளது. ஆனால் வழக்குகளை எடுத்து வைக்கும் ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற பெஞ்ச் கிளார்க் கூட நியமிக்காமல், ஆள் பற்றாக்குறையுடன் நீதிமன்றங்கள் செயல்படுவதால், இப்படி வழக்குகள் தேங்கி கிடக்கிறது என்பதே நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்யும். இதை அரசும் நீதிமன்றமும் உடனே உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Leave a comment
Upload