தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 114 - பரணீதரன்

அடுத்ததாக சிலேடை அணியை பார்ப்போம் என்று ஆரம்பித்தார் பரணிதரன்.

ஒரு செய்யுளில் சொல்லை பிரிக்காமல் படிக்கும் போது இரண்டு பொருள் வருமாறு பாடுவது சிலேடை அணி என்பது பெரியோர் வாக்கு. இதற்கு இரட்டுற மொழிதல் அணி என்ற பெயரும் உண்டு.

எடுத்துக்காட்டு

20250318203943906.png

வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்

போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற

செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்

வைக்கோலும் மால்யானை யாம் - காளமேகப்புலவர்

முதல் பொருள் - வைக்கோலை வாரி களத்தில் அடிக்கப்படும். அதற்குப் பின்பு வைக்கோல் போர் அல்லது வைக்கோல் கோட்டையில் வைக்கப்படும். வைக்கோல் போரில் அது அழகாக இருக்கும்.

இரண்டாவது பொருள் - யானை போர்க்களத்தில் தன்னுடைய தும்பிக்கையால் வாரி அடிக்கும். போர் முடிந்து நாட்டிற்கு வரும் பொழுது நாட்டில் உள்ள கோட்டையில் சென்று இருக்கும். போரில் ( போர்க்களத்தில்) மிகவும் சிறப்பாக செயல்படும்.

சிறப்பான அழகிய மேனியை உடைய திருமலை ராயன் மலையில் வைக்கோலும் யானையும் ஒன்றே என்று காளமேகப்புலவர் பாடுகிறார்.

20250318203959923.png

ஓடுஞ் சுழிசுத்த முண்டாகுந் துன்னலரைச்

சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத்

தேடுபுகழான் திருமலைரா யன்வ ரையில்

ஆடுபரி காவிரி யாமே - காளமேகப்புலவர்

முதல் பொருள் - குதிரை நன்றாக ஓடும். அசுவ சாஸ்திரம் என்ற குதிரையைப் பற்றிய கலையில், சிறப்புகள் நிறைந்த சிறந்த குதிரைக்கு நல்ல சுழி சுத்தம் இருக்க வேண்டும் என்று நியதி உள்ளது. குதிரை எதிரிகளை எதிர்த்து விரட்டி அடிக்கும். குதிரையிடம் அன்பாக உள்ளவர்களிடம் பரிவாக தன் தலையை சாய்க்கும்.

இரண்டாவது பொருள் - காவிரி ஆறு நன்றாக ஓடும். காவிரி ஆறு சுழித்துக் கொண்டு ( அதாவது சுழலில் உருவாக்கிக் கொண்டோ அல்லது திருப்பங்கள் நிறைந்தோ (திருச்சுழி, திருவலஞ்சுழி போன்ற ஊர்களில் காவிரி ஆறு சுழித்துக் கொண்டு செல்கிறது) செல்லும். காவிரி ஆறு தன்னிடம் வரும் பூக்களை அடித்துக் கொண்டு ஓடும். காவிரி ஆற்றில் முங்கி குளிக்கப் போகிறவர்கள், பரிவாக தங்கள் தலைகளை சாய்த்து உள்ளே முங்குவார்கள்.

அனைத்து நாட்டு மக்களும் பாராட்டுகின்ற புகழையுடைய திருமலை ராயன் மலையில் ஆடல்மா என்று அழைக்கப்படுகின்ற குதிரையும் காவிரி ஆறும் ஒன்றே என்று காளமேகப்புலவர் பாடுகிறார்.

அடுத்ததாக மடக்கு அணி என்ற அணியை பற்றி பார்த்து விடுவோம்.

ஒரு செய்யுளில் சொல்லை பிரித்து படிக்கும் போது இரண்டு பொருள் வருமாறு பாடுவது மடக்கு அணி என்பது பெரியோர் வாக்கு

எடுத்துக்காட்டு

20250318204016905.png20250318204031453.png

ஆவலுடன் பாவலரும் ஆறுகால் வண்டினமும்

காவலரைச் சூழும் கலைசையே - மேவும்

அரிவையம்பா கத்தா னரனொருமூன்றெய்தோன்

அரிவையம்பா கத்தா னகம் - தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்

முதல் பொருள் - பாவலர்கள் என அழைக்கப்படும் புலவர்கள், பரிசில் பெறுவதற்காக காவலர்கள் என்று அழைக்கப்படும் அரசர்களை நாடுவார்கள். அதே போல ஆறு கால்களை உடைய வண்டு இனங்கள் பூக்கள் நிறைந்த தோட்டங்களில் சென்று சூழ்ந்து கொள்ளும். இப்படிப்பட்டதான வளங்களையும் நல்ல அரசனையும் பெற்ற நாடு கலைசையாகும் (தொண்டை நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டிக்கலை என்று அழைக்கப்படும் ஊர்). இங்குள்ள சிவபெருமான் அரி என்று அழைக்கப்படுகின்ற திருமாலை அன்பாக வைத்து திருபுறத்தின் மீது எய்தவன் - அரிவை/அம்பாகத்தான்

இரண்டாவது பொருள் - பாவலர்கள் என அழைக்கப்படும் புலவர்கள், பரிசில் பெறுவதற்காக காவலர்கள் என்று அழைக்கப்படும் அரசர்களை நாடுவார்கள். அதே போல ஆறு கால்களை உடைய வண்டு இனங்கள் பூக்கள் நிறைந்த தோட்டங்களில் சென்று சூழ்ந்து கொள்ளும். இப்படிப்பட்டதான வளங்களையும் நல்ல அரசனையும் பெற்ற நாடு கலைசையாகும் (தொண்டை நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டிக்கலை என்று அழைக்கப்படும் ஊர்). இங்குள்ள சிவபெருமான் அழகிய அரிவையாகிய (20 - 25 வயது பெண்களை குறிக்கக் கூடிய சொல்) பார்வதி தேவியை தன்னுடைய அகத்தின் இடது பாகத்தில் வைத்துள்ளான் - அரிவை/அம்/பாகத்தான்

20250318204048504.png

இதே போல ஒரு சொற்றொடர் உள்ளது - காட்டிலும் குளத்திலும் தாமரை இருக்கிறது. அதாவது காட்டில் தா + மரை (தாவுகின்ற மானும்), குளத்தில் தாமரையும் உள்ளது.

பல வாரங்களுக்கு முன்பு நாம் பார்த்த மந்திரத் தமிழில் உள்ள பல பாடல்கள் மடக்கணியை சேர்ந்தவையே.

இத்தோடு அணிகள் முடிந்து விட்டது. அடுத்த வாரம் கேள்வி பதிலோடு இந்த தொடரை நிறைவு செய்வோம் என்று கூறி விடை பெற்றார் பரணிதரன்.