தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 113 - பரணீதரன்

அடுத்ததாக உயர்வு நவிற்சி அணியை பார்ப்போம் என்று ஆரம்பித்தார் பரணிதரன்.

ஒரு பொருளை, பாடலை உள்ளதை உள்ளபடி இயல்பாக கூறாமல் அதை உயர்த்தி கூறுவது உயர்வு நவிற்சி அணி என்பது பெரியோர் வாக்கு. இதில் கவிஞனின் கற்பனை இருக்கும்.

எடுத்துக்காட்டு

20250312000822205.png

கனவரை யொடுவரை முனைத்தபோல்

கடகரி யொடுகரி முனைக்கவே

இனமுகில் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமும் எதிர்க்கவே.

குருதியின் நதிவெளி பரக்கவே

குடையின நுரையென மிதக்கவே

கரிதுணி படுமுட லடுக்கியே

கரையென விருபுடை கிடக்கவே - கலிங்கத்துப்பரணி

பொதுவான பொருள் - மேலே உள்ள பாடல்களில் சோழனுக்கும் கலிங்க அரசனுக்கும் நடந்த போரை பற்றிய குறிப்புகள் உள்ளன. யானையும் யானையும் மோதியது. இரதமும் இரதமும் மோதியது. இரத்தம் பெருகியது. யானைகளின் வெட்டுண்ட உறுப்புகள் போர்க்களம் எங்கும் கிடக்கிறது.

உயர்வு நவிற்சி (ஏற்றிய பொருள்) - இதில் யானையும் யானையும் மோதியது பெரு மலையும் மலையும் மோதியதை போல் உள்ளது என்று உயர்த்தி கூறியுள்ளார் கவிஞர். அதே போல் இரதமும் இரதமும் மோதியது மேகமும் மேகமும் மோதியதை போன்று உள்ளதாக கவிஞர் கூறுகிறார். அடுத்த பாடலில், இரத்தம் நுரைத்துக் கொண்டு ஆறாக ஒடியதாகவும் யானைகளின் உறுப்புகள் அந்த நதியின் கரை போல் உள்ளதாகவும் உயர்த்தி கூறியுள்ளார். அதனால் இது உயர்வு நவிற்சி அணி.

கலிங்கத்துப் பரணியில் உள்ள பெரும்பாலான பாடல்கள் உயர்வு நிகழ்ச்சி அணியிலேயே உள்ளன. சில பாடல்களை மட்டும் கீழே விளக்கங்கள் இல்லாமல் கொடுக்கிறேன். அவைகளைப் படித்தாலே நமக்கு நன்றாக புரியும்.

எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே

விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே

மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை எனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே

நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே

அடுத்ததாக கம்பராமாயணத்தில் இருந்து ஒரு உயர்வு நவிற்சி அணியை பார்ப்போம் :

20250312000714275.png

மாகாரின் மின்கொடி மடக்கினர் அடுக்கி;

மீகாரம்எங்கணும் நறுந்துகள் விளக்கி

ஆகாய கங்கையினைஅங்கையினின் அள்ளிப்

பாகுஆய;செஞ்சொலவர் வீசபடு காரம் - கம்பராமாயணம்

வானத்தில் இருக்கக்கூடிய மின்னல் கொடிகளை ஒடித்து அவற்றை ஒன்றாக அடிக்கி அதை விளக்கமாறாக மாற்றி தங்களுடைய மாளிகையின் மேல் புறத்தில் உள்ள மகரந்த துகள்களை இலங்கையில் உள்ள பெண்கள் பெருக்கினார்கள். பிறகு ஆகாய கங்கை தண்ணீரை எடுத்து அவற்றை கொண்டு அவர்களுடைய உப்பரிகைகளை தெளித்து மெழுகினார்கள். பொதுவாக பெண்கள் தங்களுடைய மேல் மாடியில் குப்பைகளைப் பெருக்கி தரையை மெழுகியதை கம்பர் இவ்வாறு உயர்வு நவிற்சியாக கூறுகிறார்.

20250312000730238.png

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்

பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் –

செங்கையால்காத்தாள்;அக் கைம்மலரைக்

காந்தளெனப் பாய்தலுமே வேர்த்தாளைக் காண்!

என்றான் வேந்து - நளவெண்பா

ஒரு பெண், மலர்களை பறித்துக் கொண்டிருக்கிறாள். அவளது முகத்தை தாமரை என்று நினைத்த வண்டுகள் அவள் முகத்தை மொய்க்க ஆரம்பிக்கின்றனர். அதைப் பார்த்த அவள் பயந்து தன்னுடைய இரண்டு கைகளாலும் முகத்தை மூடி கொள்கிறாள். அவள் கைகளை பார்த்த வண்டுகள் அவை செங்காந்தள் மலர் என்று நினைத்து அவள் கைகளையும் மொய்க்க ஆரம்பிக்கின்றன. இதனால் அவளுக்கு வியர்க்க ஆரம்பிக்கிறது. அந்தப் பெண்ணை பார் என்று நளன் தமயந்திக்கு காட்டுகிறான். இதில் அந்தப் பெண்ணின் முகத்தையும் கைகளையும் மிகவும் உயர்த்தி புலவர் பாடியுள்ளார்.

அடுத்ததாக தன்மை நவிற்சி அணியும் பார்த்து விடுவோம்.

ஒரு பொருளை, பாடலை உள்ளதை உள்ளபடி இயல்பாக கூறுவது தன்மை நவிற்சி அணி என்பது பெரியோர் வாக்கு.

எடுத்துக்காட்டு

2025031200074722.png

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நிலவு லாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் - பெரிய புராணம்

இதில் சிவபெருமானின் இயல்பான விஷயங்களை இயல்பாகவே எந்த ஒரு கற்பனையும் இல்லாமல் பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடியுள்ளார். அதாவது உலகில் உள்ள அனைவரும் உணர்ந்து ஓதுவதற்கு கடினமானவன், நிலவையும் கங்கை ஆற்றையும் அணிகலன்களாக உடையவன், அளவில்லாத ஒளியாகி ஜோதி சொரூபமாக இருப்பவன், தில்லை என்கிற திருச்சிற்றம்பலத்தில் அவன் ஆடிக் கொண்டிருக்கிறான், சிலம்புகள் அணிந்துள்ள அவனுடைய மலர் போன்ற அடியினை வாழ்த்தி வணங்குவோம். இந்த செய்யுளில் சிவபெருமானின் குணங்களை உள்ளது போலவே சேக்கிழார் பெருமான் கூறுகிறார்.

இத்தோடு நவிற்சி அணிகள் முடிந்து விட்டது. அடுத்த வாரம் வேறொரு அணியை பார்ப்போம் என்று கூறி விடை பெற்றார் பரணிதரன்.