தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 16. செவி செலுத்திய திசையில்.- மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

20250312074753840.jpeg

செல்லும் இடங்களில் எல்லாம் செய்திகள் கிடைக்குமா? கண்களும் காதுகளும் கூர்மையாக இருந்தால் அது சாத்தியம். அப்படிப்பட்ட சம்பவம் இது.

அப்போது அவன் நெய்வேலியில் வசித்து வந்தான். காலை 6 மணிக்கு முன்னதாகவே வரக்கூடிய ஹிண்டு செய்தித்தாள் 6.45 ஆகியும் வரவில்லை. ஏன் என்று தெரிந்து கொள்ள ஏஜெண்ட் வீட்டிற்குச் சென்றான். ‘தாமதத்திற்குக் காரணம் புரியவில்லை’ என்று அவரும் சொன்னார். சென்னையில் இருந்து வரும் வழியில் செய்தித்தாள் வாகனத்திற்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டிருக்குமோ? அல்லது வேறு ஏதாவது விபத்தின் காரணமாக சாலையில் போக்குவரத்து தடைபட்டிருக்குமோ? என்று யோசித்தான். சந்தேகம் என்கிற குணம் ஒரு நிருபருக்கு அவசியம். மற்றவர்களுக்கு அது ஒரு வியாதி, நிருபர்களுக்கு அல்ல. அது இல்லாவிட்டால் செய்திகளை சரிபார்த்து கொடுக்க முடியாது.

அன்று அவனுக்கு வந்த சந்தேகம் காலை 7 மணிக்கு உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு துரத்தியது. சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு ஸ்கூட்டரில் சென்றான். ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு படியேறும்போது, முன் அறையில் இருந்த வயர்லெஸ் சாதனத்தில் ஒரு உரையாடலைக் கேட்க நேர்ந்தது. அங்கே இரண்டு கான்ஸ்டபிள்கள் இருந்தார்கள். முன்அறை வயர்லெஸ் உரையாடலை அவர்கள் கேட்கவில்லை. பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கடலூர் எஸ்.பிக்கு வயர்லெஸ் மைக்கில் தகவல் கொடுத்துக் கொண்டிருந்தார். அவன் அதைக்கேட்டான். அதாவது விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் அதிகாலையிலேயே தொடங்கியதாகவும், கட்டுப்படுத்த முயன்றபோது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது வயர்லெஸ் செய்தி.

இந்தத் தகவலை யதேச்சையாக வயர்லஸ் மூலம் தெரிந்து கொண்ட அவன் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை. பண்ருட்டிக்குக் புறப்பட்டான். அடுத்த 25 நிமிடங்களில் அங்கே இருந்தான். சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ஆம்புலன்ஸில் சடலத்தை ஏற்ற முயன்ற காவலருடன் போராட்டக் காரர்கள் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். நமக்கு எதுக்கு வம்பு என்பது போல் ஒரு கும்பல் மரத்தடியில் நின்றுகொண்டிருந்தது. அந்த நபர்களை அணுகி அவன், ‘‘என்ன நடந்தது? கொல்லப்பட்டவர் யார்?” என்ற தகவல்களையெல்லாம் கேட்டறிந்தான். அவர்கள் சொன்னார்கள், ‘‘உறவினர்களுக்கு இப்போதுதான் தகவல் யோயிருக்கிறது. அவர்கள் வந்து பார்த்த பிறகு தான், இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்ற வேண்டும் என்பதே சாலையில் நடந்து கொண்டிருந்த சண்டை’’ என்றார்கள். அவன் அந்தக் கூட்டத்திற்கு நடுவே சென்று, அவர்கள் பேசுவதில் இருந்து விஷயங்களை புரிந்து கொண்டான்.

பெரும்பாலான நேரங்களில் அவன் தன்னை நிருபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. இப்படிப்பட்ட கலவரங்களில் மக்களோடு மக்களாக நின்று காதுகளை மட்டும் தீட்டிக்கொள்வான். பொது இடங்களில் சுருக்கெழுத்து நோட்டையும் பேனாவையில் எடுக்காமல் இருப்பது புத்திசாலிதனம். சிலர் தங்கள் பெயர் செய்தித்தாளில் வரவேண்டும் என்பதற்காக பெயர் மற்றும் தொழில் விவரங்களைச் சொல்லி கூடுதலாக சில விபரங்களைத் தருவார்கள். அது அவனுக்கு தேவைப்படாதவை என்றாலும், எழுதிக் கொள்ள வேண்டும், அல்லது எழுதிக்கொள்வது போல் பாசாங்கு செய்ய வேண்டும். வேறு சிலர் நிருபர் பேனாவையும் நோட்டையும் திறந்தவுடன் வாயை மூடிக்கொள்வார்கள். சரியான தகவல்கள் அவர்களிடமிருந்து கறக்க முடியாது. எனவே அவன் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பேனாவையும், நோட்டையும் கையில் எடுத்ததில்லை. எல்லாம் ஸ்கூட்டர் பெட்டியில் இருக்கும். தேவைப்பட்டால் எடுத்துக்கொள்வான்.

அன்று அவன் போராட்டக்காரர்கள் கூட்டத்தில் இருந்து விலகி, மரத்தடியில் நின்று கொண்டிருந்த அந்த கிராமத்துக் காரர்களிடம் பேச்சு கொடுத்தான். அப்போதும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வில்லை. தகவல்களை எழுதிக்கொள்ளவில்லை. அந்த நேரம் பார்த்து மாவட்ட கலெக்டர் சந்திரலேகாவும், காவல்துறை கண்காணிப்பாளர் T.S.பஞ்சாபகேசனும் ஸ்தலத்திற்கு வந்தார்கள்.

மரத்தடியில் சிறுகூட்டத்திற்கு மத்தியில் அந்த நிருபர் இருந்ததை கலெக்டர் பார்த்துவிட்டார். அவருக்கு ஆச்சர்யம். தனக்கும் போலீஸ் அதிகாரிக்கும் தெரிவதற்கு முன்னால் இவன் எப்படி ஸதலத்திற்கு வந்து சேர்ந்தான் என்று. பொதுவாக இப்படிப்பட்ட சம்பவங்களை கலெக்டரோ, எஸ்.பி.யோ மாவட்ட தலைநகரில் தான் நிருபர்களுக்குச் சொல்வார்கள். அவனோ ஸ்தலத்துக்கு வந்துவிட்டான். அதுவும் இவர்கள் வருவதற்கு முன்னதாகவே. தொலைவில் இருந்தபடியே அவனைப் பார்த்துவிட்ட கலெட்டர் எஸ்,.பி. பஞ்சாபகேசனை அழைத்து, ‘‘அவரை வெளியேறச் சொல்லுங்கள்’’ என்றார். எஸ்.பி. அங்கே வந்து, அந்தத் தகவலைச் சொல்லி “நீங்கள் இங்கே இருக்க வேண்டாம்” என்றார். அவன் சொன்னான், ‘‘ஐயா, இது சாலையோரத்தில் உள்ள மரத்தடி, உங்கள் அலுவலகமும் அல்ல, கலெக்டர் அலுவலகமும் அல்ல. இங்கிருந்து என்னை வெளியேற்ற உங்களக்கு அதிகாரம் இல்லை.’’ இதைக்கேட்ட

பஞ்சாபகேசனுக்கு என்ன சொல்வதென்ற தெரியவில்லை. ஏனென்றால் அவரும், அந்த நிருபரும் நண்பர்கள். ஒருவர் வீட்டிற்கு மற்றவர் செல்வதுண்டு, எனவே அவனை கட்டாயப்படுத்த முடியாமல் கலெக்டரிடம், ‘‘மேடம் எப்படியும் அவர் செய்தி கொடுக்க வெளியே போய்விடுவார்”. ஆனால் அவருக்கும் கலெக்டருக்கும் உள்ளுர ஒரு சந்தேகம். அவன் எவ்வளவு நேரம் அங்கே இருந்தானோ, என்னென்ன தகவல் திரட்டினானோ, எப்படி எழுதப்போகிறானோ என்று. இது போன்ற சந்தர்பங்களில் கலெக்டர் சொல்வதையும், எஸ்.பி. சொல்வதையும் கேட்டுக் கொள்வான். அதை அப்படியே எழுதியது இல்லை. தான் திரட்டிய தகவல்களோடு, சமூகத் தரப்பு நியாயங்களையும் எழுதினான், அது தன் கடமை என்று உணர்ந்து.

முடிந்தவரையில் தகவல்களை சேகரித்துக் கொண்ட அவன் அங்கிருந்து சென்றான். கலெக்டரும் எஸ்.பியும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்விட்டார்கள். அன்று மாலை கலெக்டரும் எஸ்.பியும் நிருபர்களிடம் துப்பாக்கி சூடு பற்றிய விபரங்களைச் சொன்னார்கள். அதிகாரிகள் சொல்வது மட்டும் செய்தியாகாது, என்பதனால் அவன் முன்பே சேகரித்திருந்த தகவல்களுடன் செய்தியை அனுப்பினான். மறுநாள் காலை ஹிண்டுவைப் பார்த்ததும் கலெக்டருக்கும் எஸ்.பிக்கும் துப்பாக்கி சூடு பற்றிய புதிய தகவல்கள் தெரியவந்தன.

அச்சு ஊடகம் மட்டும் இருந்த காலத்தில் கலெக்டரும், காவல்துறை கண்காணிப்பாளரும் தமக்கு முன்னால் செய்தியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றதை விரும்பியதில்லை. இன்று அப்படி நடப்பதில்லை. காட்சி ஊடகங்களின் செய்தியாளர்களும் ஒளிப்பதிவாளரும் அதிகாரிகளுக்கு முன்னதாகவே சம்பவ இடத்திற்கு சென்று செய்தியை ஒளிபரப்பிவிடுகின்றனர். சில சம்பவங்கள் செய்தியாளர்களுக்கு தெரிந்த பின்னர் தான் அதிகாரிகளுக்கு தெரியவருகின்றன. “ஒரு காலத்தில் ஒரு முதலமைச்சர் தொலைக்காட்சி செய்தியைப் பார்த்தே தூத்துக்குடி துப்பாக்கி சூடுப் பற்றி தெரிந்து கொண்டேன்” என்றார்.

காட்சி ஊடகங்கள் வந்த பிறகு அதன் வேகத்திற்கு அதிகார வர்க்கம் ஈடுகொடுக்க முடியவில்லை. இது வளர்ச்சி தான். இதனால் செய்தியாளர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது. அமைச்சர்களின் செல்வாக்கு அதிகாரிகள் மூலமாக குறுக்கிடுகிறது. நாடு சுதந்திரம் பெறுவதும் பத்திரிகை உலகம் சுதந்திரம் பெறுவதும் வேறு வேறு விஷயங்கள்.