ரேணிகுண்டா ரேவண்ணா குட்டி கண்ணாடி டம்ளரில் ஐந்து ரூபாய்க்கு தினமும் இரண்டு டீ குடித்து, காலைக் கடனை முடிக்கும் ஆண் அபலைப் பத்திரிகையாளன்!
ஆந்திராவின் துக்கடா பத்திரிகைகளில் பல சில பொறுப்புகளில் ஜொலிக்க முயன்று இயலாததால், சென்னை மாகாண வட பழனிக்கு குடிபெயர்ந்து, சரோஜாதேவி நேச பத்திரிகைகளில் பணிபுரிய ஆரம்பித்தான். கொஞ்சம் மின்னல் வருமானம். ஆனால், அரசு, போலீஸ் கெடுபிடிகளால் நளிவடைந்த பத்திரிக்கையாளர் வரிசையில் சேர்ந்து சோர்ந்து போயிருந்தான். அப்பொழுதுதான் அவனுக்கு குண்டு ராஜாவின் நட்பு கிடைத்தது.
அச்சடித்த தழுவல் - மன்னிக்கவும் தகவல் களஞ்சியப் பக்கங்களைப் பாரம் பாரமாய் பிரிக்கும் உதவி, பேட்டைவாரியாக புத்தகக் கடைகளுக்கு அனுப்பும் பட்டுவாடா, பணம் கலெக்சன் (பாதி வாராக் கடன்கள்), இறைவன் அருளிய ரேவண்ணாவின் கடைசி குழந்தைக்குப் பால் பாக்கெட் வாங்கி வருவது போன்ற சகல உதவிகளையும் குண்டு ராஜா செய்து வந்தான். அவனுக்குச் சம்பளம் இல்லாவிட்டாலும் பொழுது போக வசதியாக இருந்தது. மேலும், டிபனும் டீ செலவும் கம்பெனி கணக்கில் சேர்க்கப்பட்டது.
யாரோ எழுதிய "குட்டி" கதைகளை, ஹுடன் பர்க் கண்டுபிடித்த காலத்தில் புழங்கப்பட்ட பழைய டிரடில் மிஷினில் அச்சடிக்க, சாணி காகிதத்தில் பாதி மஞ்சள் மேட்டரும் பாதி கருப்பு மையுமாகத்தான் பாரங்கள் வெளியில் வந்து விழுந்தன. அச்சு கோத்துதர ஒரு பழைய வட சென்னை கிழவனார் பணியில் இருந்தார். சில சமயம் எழுத்தாளர் ஸ்கிரிப்ட் அனுப்ப வில்லையெனில், பழைய புத்தகத்திலிருந்து மறுபடியும் காப்பி எடுப்பார் அல்லது தானே எழுதிவிடும் அளவிற்குப் புலமைப் பெற்றிருந்தார் அவர்.
ஒரு நாள் ரேவண்ணாவுக்கு குண்டு ராஜா ஒரு ஐடியா கொடுத்தான். யாராவது ஒரு தொழிலதிபரைப் பிடிக்க வேண்டியது; அவரிடம் முதலீடு செய்யச் சொல்லி செகண்ட் ஹேண்டிலோ...தேர்டு ஹேண்டிலோ ஒரு மெஷின் வாங்கி இன்னும் கொஞ்சம் விரைவாகவும் குவாலிட்டியாகவும் பிரிண்ட் செய்து விற்பனையைக் கூட்டுவது...!
"தொழிலதிபரா? அட, தேவுடா...?" என்று வாயைப் பிளந்தான் ரேவண்ணா.
"என்னை நம்பி எவன் முதலீடு போடுவான்? நான் என்ன கல்கி, ஆனந்த விகடன் பத்திரிகையா நடத்துகிறேன்?"
அவன் கேட்டதிலும் நியாயம் இருந்தது. யோசித்தான் குண்டு. அப்பொழுதுதான் தாத்தா சுப்புசாமி ஞாபகம் வந்தது. நன்றே சிந்தித்தான்; அன்றே சந்தித்தான். தாத்தாவும் கிழவியின் புதிய பதவியேற்பு சம்பவத்தில் காண்டாக இருந்ததைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். தன் திட்டத்தை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல மெல்ல மெல்ல ஏற்றினாலும் தாத்தாவுக்குள் ஐயம்.
"என்னது நான் அதிபரா? எடிட்டரா?இதுவரை நான் ஒரு புத்தகத்தைக்கூட முழுசாகப் படித்ததில்லை. புரட்டியதோடு சரி...!" என்று உண்மை விளம்பினார்.
"நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம். வந்து உங்களுடைய மேசையில் அமருங்கள். செய்ய வேண்டிய பணிகளைக் கட்டளையிடுங்கள். நாங்கள் செய்து விடுகிறோம். வருகிற கலெக்ஷனை நீங்க எண்ணிவைக்க வேண்டியதுதான். நீங்க புதிய பார்வை நடராசன் மாதிரி, பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மாதிரி, நல்லி குப்புசாமி செட்டி மாதிரி...!" என்று சில மாதிரிகளைச் சொல்லி, சுப்புசாமியை உசுப்பேத்தி வைத்தான்.
பொறியில் எலி அகப்பட்டுக் கொண்டது.
இதுதான் பின் அடிக்காத பத்திரிகையின் முன் கதைச் சுருக்கம்.
*****
பாட்டிகள் முன்னேற்றக் கழகம் விழாக்கோலம் பூண்டிருந்தது!
கழகத்தின் கொடி வரிசைகள் வண்ண வண்ணக் காகிதங்கள், பலூன்கள் இவற்றோடு முத்தாய்ப்பாகச் சில குட்டி குட்டி துணிப் பதாகைகள் (பா.மு.க.வில் பிளெக்ஸ் பேனர்களுக்குத் தடை!) பிரசிடெண்ட் கோமுவின் புகழ் பாடின அல்லது பிற கிழவிகளின் வயிற்றெரிச்சலில் ஆடின.
"தென்னகத்து குஷ்வந்த் சிங்கியே வருக...வருக...!"
"தங்கப் பேனா தலைவியே...!"
"பா.மு.க.வின் பெருமையே...!"
"போர்த் எஸ்டேட் எவர்கிரீன் லேடி...!"
கழகப் பொருளாளி பொன்னம்மா டேவிட் லொட லொட காரில் இருந்த சுப்புசாமிக்கு தோரணங்களைப் பார்த்ததும் எரிச்சல் எழுந்தது.
"அவள் நாலெழுத்துப் படிச்சவதான், ஒத்துக்கிறேன். அதுக்காக உங்க தலைவிக்கு மட்டுமே பாராட்டும் பேனருமா? புருஷரான எனக்கு ஒரு சின்ன தட்டிகூட கிடையாதா...?" என்று பொருமினார்.
"பொன்னம்மா, நான் உங்க மரியாதைக்காகத்தான் இந்த நிகழ்ச்சியிலே கலந்துக்கிறேன்...!"
"ரொம்ப தேங்க்ஸ் மாமா. கவலைப்படாதீங்க.
உங்களுக்கு ஒரு செக்மண்ட் ரகசியமா வெச்சிருக்கேன். அப்போ உங்க கருத்துகளை சபையின் முன்னே வையுங்க, மாமா...!" என்றாள் பொ.டே.
தாத்தா, சிந்தனையோடு கையிலிருந்த மாம்பழ கிரஷினை உள்வாங்கிக் கொண்டிருந்தார். சில நொடிகள் கழித்து, "காரை, தூரமா இருக்கிற அந்த மரத்தடியில் நிறுத்துங்க...!" என்று கட்டளையிட்டார்.
"மாமா சொன்னா ஏதாவது காரணம் இல்லாமல் இருக்குமா? நீங்க மாமி மாதிரி, பிரசிடெண்ட் மாதிரி அவசரப்புத்தி கொண்டவரல்ல என்பது எனக்குத் தெரியும்...!"
காரை நிறுத்தியதும் தாத்தா சொன்னார்:
"கோமு இன்னும் வந்து சேரவில்லை. அவள் வந்ததும் நான் அரை மணி நேரம் தாமதமா வர்றேன். அப்போதுதான் நமக்கு மரியாதை...!"
"சூப்பர் மாமா! உங்க மனைவி கேட்டும் நீங்க பாராட்டு விழாவுக்கு ஒத்துக்காமல், இந்த சின்னவள் கேட்டதற்கு வரச் சம்மதம் தெரிவிச்சீங்க. அந்தம்மாவை மற்றவர்கள் சும்மா புகழ்வதை நேருக்கு நேர் நீங்க பார்த்து வதைபட வேண்டாம்...!" - பாராட்டிய பொன்னம்மா,
'பிரசிடெண்டை கார்னர் பண்ண இந்த மனிதரைவைத்தே வியூகம் அமைப்பதுதான் நல்லது ' என்று மனதுக்குள் தன்னையும் மெச்சிக் கொண்டாள்.
(குறும்பு தொடரும்...)
தொடர்கள்
தொடர்கள்
Leave a comment
Upload