அரசியல்வாதிகளின் பேச்சும், நடப்பும் ஒன்றல்ல. பேசுவதுப்படி பார்த்தால் அரசியல்வாதிகளின் பேச்சும், நடப்பும் நேர் மாறானது. கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையும், தேசத்தையும் உலுக்கியது.
1978-ல் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடைபெற்ற ஜாதி கலவரக் கொலைகள் இதை அவனுக்கு உணர்த்தின. ஒரே இரவில் 11 தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டது.அது ஒரு ஜாதிக்கலவரத்தின் விளைவு. ஏன்? எப்படி? என்பதை உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இரவில் நடந்த கொலைகள், காலையில் வெளிச்சத்திற்கு வந்தன. நெய்வேலியில் இருந்த அவன், தகவல் தெரிந்தவுடனேயே விழுப்புரம் சென்றான். அந்த நேரத்தில் பிணங்களெல்லாம், பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.
இந்த 11 கொலைகளும், நான்கைந்து இடங்களில் நடைபெற்றிருந்தன. அந்த இடங்களுக்கெல்லாம் சென்றான். கண்ணில்பட்டவர்களிடம் தகவல் கேட்டான். ஜாதிக் கலவரம் என்பதனால், யாரும் தமக்குத் தெரிந்த உண்மைகளை சொல்லவில்லை.
அடுத்து அவன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.கணேசனை சந்தித்தான். அவர் கல்லூரியில் அவனது ஆங்கில டியூட்டராக இருந்தவர். எனவே நல்ல பரிச்சயம் இருந்தது. ‘‘எழுதமாட்டாய் என்றால் சொல்கிறேன்’’ என்று, உறுதிமொழி வாங்கிக் கொண்டு, போலீஸ் தரப்புக்கு அதுவரை கிடைத்திருந்த தகவல்களை, வடிகட்டி ஓரளவுக்குச் சொன்னார். ஆனாலும், கொலையுண்டவர்கள் யார் யார், எங்கெங்கே கொல்லப்பட்டனர்? அவர்களது உடல் எந்த நிலையில் கிடந்தது. அவர்கள் பெயர்கள் என்னென்ன? என்பதையெல்லாம் எழுத முடிந்ததேயொழிய கொலைகளுக்கான காரணங்களை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு நிருபருக்கு இக்கட்டான நிலை என்பது இதுதான். இருந்தாலும், எப்படியாவது காரணத்தை கண்டுபிடித்து எழுதவேண்டும் என்பதற்காக, விழுப்புரத்திலேயே தங்கினான். கொஞ்சம் கொஞ்சமாக தகவல்களைக் கறந்தான். இரு கோஷ்டிகளுக்கிடையே வெடித்த தனிநபர் மோதல், ஜாதிக் கலவரமாகியது. ஆனால் 11 பேர் கொலையுண்டதைக் கண்ட 2 ஜாதிக்காரர்களும், அரண்டுபோய் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து, மேற்கொண்டு கலவரத்தில் ஈடுபடவில்லை.
மாவட்ட கலெக்டர் பி.எஸ்.பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.கணேசன், இருவருமே விழுப்புரத்தில் முகாமிட்டிருந்தார்கள். ‘சமாதானக்கமிட்டி’ உருவாக்கி, அதில் இருதரப்பு நபர்களையும் உறுப்பினராக்கினார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டார்களே ஒழிய மூலக்காரணங்களை தெரிவிக்கவில்லை. ஏதோ சில காரணங்களுக்காக, இருதரப்புக்கும் இடையே இருந்த பகை கொலைகளில் முடிந்திருக்கிறது என்பதை அரசுத் தரப்பும், பத்திரிகையாளர்களும் புரிந்து கொண்டார்கள்.
“நீ ஏதாவது கண்டுபிடித்தாயா? ஏதாவது கிளறினாயா?” என்று காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டார். அவனோ உங்களுக்கு தெரிந்த விஷயங்களை சொல்லுங்கள் என்று கேட்டான்.
“எல்லாமே மர்மமாக இருக்கு. அரைகுறையாக தெரிந்த விஷயத்தை வெளியே கசிய விட்டால் அது இன்னொரு கலவரத்தைத் தூண்டிவிடலாம். உள்துறை செயலாளர் கூட முழுமையாக தகவல் கொடுக்க முடியவில்லை” என்று கூறினார்.
அவன் அவரை நம்பினான். ஏனென்றால் கொலைகள் நடந்த இடங்களிலோ, அதன் சுற்றுப்புறங்களிலோ யாரும் எதுவும் சொல்லவில்லை.
கொலை செய்யப்பட்டவர்களின் பின்புலத்தை ஆராய்ந்த போது கொலைக்கான “Motive” எதுவும் தெரியவரவில்லை. ஒரு வார காலம் கழிந்தபின் அது இரண்டு ஜாதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் என்பது தெளிவானது. கொன்ற தரப்பின் ஜாதி எது என்பதை அரசாங்கம் தம் ஆவணங்களில் பதிவு செய்யலாம். ஆனால் பத்திரிகையில் எழுத முடியாது. அதுவும் ஹிண்டு போல நடுநிலை பத்திரிகையில் அங்குமிங்குமாக கிடைத்த துண்டுத் தகவல்களை ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்த்து அவனும் சென்னையில் இருந்து வந்த நிருபர் பார்த்தசாரதியும் சேர்ந்து, “Untold Story” என்று கட்டுரை எழுதினார்கள். இன்று வரை அது சொல்லப்படாத கதைதான்.
எங்காவது பிணங்கள் விழுந்தால் கழுகுகள் வருவதற்கு முன்பே ஆஜராவது சுயநல அரசியல்வாதிகள். ஒவ்வொரு பிணமும், சில ஆயிரம் வாக்குகள் என்பது அவர்கள் கணிப்பு. எனவே பொதுவெளியில் ஒப்பாரி வைப்பது வழக்கம்.
நாஞ்சில் மனோகரன், வடக்கத்தி தலைவர்கள் சிலர் என்று அங்கே வந்து ஏதோதோ சொல்லிவிட்டுப் போனார்கள். எதிர்க்கட்சித்தலைவர் மு.கருணாநிதி, ‘‘எப்படியோ ஒரு சிறு தீப்பொறி பெரும்தீயாய் மூண்டுவிட்டது.’’ என்று சமஸ்காரமாகச் சொன்னார். இதையடுத்து அப்போதைய முதல்வர், எம்.ஜி.ஆர். விழுப்புரத்திற்கு வந்து, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். இரவு 9 மணிக்கு தொடங்கி 9.45க்கு பேச்சை முடித்தார். ஏதோதோ பேசினார். குறிப்புகளை எடுத்துக் கொண்ட அவன், உள்ளூர் நிருபர் வீட்டிற்குச் சென்று அந்தக் குறிப்புகளை அப்படியே எழுதினால், அது முதல்வரின் பேச்சு ஆகாது என்பதாலும், வாசகர்கள் குழம்பி விடுவார்கள் என்பதாலும், 42 குறிப்புகளை கோர்வைப்படுத்தி, உள்ளூர் நிருபர் வீட்டில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். அப்போது கரண்ட் போய்விட்டது. அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில், மீதியை எழுதி பொதுதொலைபேசிக்குச் சென்று செய்திக் கட்டுரையை இரவோடு இரவாக டிக்டேட் செய்தான். மறுநாள் காலை சென்னை பதிப்பில் வந்த செய்தியை படித்த சக நிருபர்கள் கேட்டார்கள், ‘‘எம்.ஜி.ஆர். இவ்வளவு கோர்வையாகவா பேசினார்?’’
இதற்கிடையே டெல்லியிலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் குழு வருவதாகத் தெரிந்தது. ஆனால் தேதியைக் கலெக்டர் சொல்லவில்லை. தெரிந்தே மறைத்திருக்கலாம் என்பது அவனது ஊகம். ஆனால் அது மறுநாள் என்பதை மிகச்சரியாக கண்டுபிடித்துவிட்டான். அதற்கு கிடைத்த க்ளூ, ஒரு ஹோட்டலில் கலெக்டர் மதிய உணவுக்கு ஆர்டர் செய்தபோது, வழக்கமான சாப்பாட்டுடன் 60 சப்பாத்திகளும் தயாரிக்க சொல்லியிருந்தார்.
இப்படித்தான் எதிர்பாராத இடங்களில் இருந்து சில தகவல்கள் வரும். நிருபர் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதிய உணவுடன் சப்பாத்தியும் சேர்த்து சாப்பிடுபவர்கள் வட இந்தியர் என்பதனால், அவன் அவர்களது வருகையை சரியாகக் கணித்தான்.
அதே போல் கலெக்டர் தலைமை செயலகத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததை அரைகுறையாக காதில் வாங்கிய சக நிருபர்கள், ‘‘முதல்வர் வரப்போகிறார்’’ என்று அவர் வரவை எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் அவன் சொன்னான், கலெக்டர் பேசியது கவர்னரின் விஷேச வருகையைப் பற்றியது. தன் பேச்சின் ஊடே ‘‘அவர் அரசாங்கத்தை கலந்து ஆலோசித்தாரா?’’ என்று கேட்டார். முதல்வர் தானே அரசாங்கம்? அவர் ஏன் அரசாங்கத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும். வரப்போவதாக திட்டமிட்டிருந்தவர் கவர்னர் என்று அவன் ஊகித்தான். அவன் ஊகம் சரியானதே. ஒரு நிருபர் காதில் விழும் பேச்சில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். யதேச்சையாக ஒட்டுக்கேட்கும் எந்த உரையாடலையும் தர்க ரீதியில் அணுகி முடிவு காண வேண்டும். அவன் அதைச் செய்தான்.
இதையடுத்து நீதிபதி சதாசிவம் தலைமையில், ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. (அந்த சதாசிவம், உச்சிநீதிமன்ற நீதிபதியாக இருந்த சதாசிவம் அல்ல). அதில் சில சுவையான தகவல்களும் நிருபர்களுக்கு கிடைத்தன. உள்ளூர் தாழ்த்தப்பட்ட சாதித் தலைவர் சொன்னார், ‘‘நான் மதம் மாறினேன். அப்படியும் அங்கேயும் தாழ்ந்த ஜாதிக்காரனாகத் தான் கருதப்பட்டேன். அதனால் தாய் மதத்திற்கே திரும்பி வந்துவிட்டேன்.’’
விசாரணைக் கமிஷனின் இருதரப்பு வக்கீல்களும் ஆக்ரோஷமாக வாதம் செய்தார்கள். நீதிபதி சதாசிவம் வக்கீல்களைக் கேட்டார், ‘‘சண்டை போட்டது போதுமா?’’
அப்போது தெரியவந்த ஒரே ஒரு விஷயம் அரசியல்வாதிகள் எல்லாவற்றிலும் ஆதாயம் தேடுவார்கள் என்பது. பேசுவது சமத்துவம்; பேணுவது ஜாதியாம். உண்மைகளை முழுமையாக எவரும் எழுதுவதில்லை.
Leave a comment
Upload