கடலாடி
விரிவானம் எல்லை துணையாரும் இல்லை
வருமானம் ஈட்ட உயிர்பணயத் தொல்லை
கடலோடி வலைவீசி கரைமீளும் வாழ்க்கை
உடலேனோ உப்பேறிய கருவாடும் ஆச்சே!
நீரோட்டம் இழுத்தவழி ஓடுமென் ஓடம்
தேரோடும் வீதியாமோ விதிவழிப் பயணம்?
நிலையில்லா ஜீவிதம் நித்தமொரு ஜனனம்
அலையில்லா ஆழ்கடல் போதித்த ஞானம்
கடலன்னை மீன்வாரித் தருபவளே யானாலும்
தடதடவென மாரியுமே சடசடத்து ஓயும்
பேரோசைப் பெருங்காற்றும் தடம்புரள வீசும்
நாராசம் காதடைத்து நிலையழிந்து போகும்
மீனுமக்கு அறுசுவை!எமக்கோ உயிர்நாடி!
நானுமக்குப் பொருட்டோ நாதியிலா கடலாடி
சிங்களவன் குண்டு தவிர்த்தாலே உண்டு
எங்களுயிர் எமதில்லை கல்லறைச் செண்டு
கடல்மடி தவிரவும் வேறொன்று மறியேன்
உடன்வர துணிவும் ஒருகைச் சோறும்
ஆழிதன் நீலம் காட்டுமே கூரைவானும்
வாழ்வின் ஓலம் போக்குமோ கூடைமீனும்?
பெண்டு பிள்ளை கரைதனில் தனியே
கண்டு மகிழ வீடுமீண்டால் போறுமே!
நேயமெனும் படகேறி அன்பு வலைவீச
மாயமாகத் துயரும் தேய்ந்திட லாகுமே!
Leave a comment
Upload