(கட்டுரையில் இருக்கும் விபத்தின் படம் அல்ல)
சாலை விபத்தையும், தீ விபத்தையும் அடுத்து அவன் செய்தி சேகரிக்கச் சென்ற இடம் ரயில்விபத்து. அன்று மதிய நேரம், அவனை அழைத்த தலைமை நிருபர், ‘‘நீயும் ஆர்.பார்த்தசாரதியும், புகைப்படக்காரர் நாராயணசாரியும் உடனே நெல்லூர் புறப்படுகிறீர்கள். கார் தயாராக இருக்கிறது. நெல்லூர் அருகே ஒரு ரயில் விபத்து, பலர் காயப்பட்டார்கள், சிலர் இறந்திருக்கிறார்கள்’’ என்று சொன்னார். அவன் புறப்பட்டான், மற்ற இருவருடன்.
கார் கும்மிடிப்பூண்டியைத் தாண்டியதும் பழுதாகி நின்றுவிட்டது. நேரத்தை வீணாக்க விரும்பாத அவர்கள், அந்த வழியில் சென்ற வாகனங்களை மறித்தார்கள். ஒரு பெரிய வேன் வந்தது. கல்கத்தா சென்று கொண்டிருந்த அதில் சுற்றுலா பயணிகள் இருந்தார்கள். ஒண்டிக் கொள்ள இடம் கேட்டார்கள். அந்த வாகன டிரைவர், ஒருவரை மட்டும் ஏற்றிக் கொள்ள முடியும் என்றார்.
உடனே நிருபர்கள் இருவரும், புகைப்படக்காரரை அந்த வாகனத்தில் ஏற்றி நெல்லூருக்குஅனுப்பிவிட்டார்கள். அது அந்த நிருபர்களின் புத்திசாலித்தனம். ஏனென்றால்அந்தக்காலத்தில் டிஜிட்டல் கேமராக்கள் இல்லை. புகைப்படச்சுருள் தான். புகைப்படக்காரர் விபத்தின் சில காட்சிகளைப் படமெடுத்த பிறகு, சென்னைக்கு திரும்பி, அலுவலகத்தில் நெகடிவ்களைக் கழுவி, புகைப்படத்தை தயாரித்தாக வேண்டும். அதற்கு நேரம் கொடுப்பதற்காகவே, நிருபர்கள் புகைப்படக்காரரை நெல்லூருக்கு முதலில்அனுப்பி வைத்தார்கள். செய்தியை இவர்கள் டெலிபோனில் கொடுத்துவிட முடியும்; எனவே இவர்கள் அடுத்த வாகனத்திற்காக காத்திருந்தார்கள்.
சில வாகனங்கள் நிற்கவில்லை. ஒரே ஒரு கார் மட்டும் நின்றது. அதில் பூந்தொட்டிகளுடன், ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் இந்த இரு நிருபர்களையும் ஏற்றிக் கொள்ளத் தயங்கினார். மேலும், தான் சூலூர்பேட்டை வரை மட்டுமே செல்வதாகச் சொன்னார்.
கெஞ்சிக் கூத்தாடி, ‘‘பூச்செடிகளுக்கு சேதம் இல்லாமல் ஏறிக்கொள்கிறோம்’’ என்றுசொல்லி, முன்னே ஒருவர், பின்னே ஒருவர் என்று அவனும், சக நிருபர் பார்த்தசாரதியும் அந்தக் காரில் ஒண்டிக் கொண்டார்கள். சூலூர்பேட்டையில் இறங்கிய அவர்கள் சற்றுதொலைவில் இருந்த பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து சென்றார்கள். அப்போதே இருட்டத் தொடங்கிவிட்டது. சூலூர்பேட்டையில் நெல்லூருக்குப் புறப்பட தயாராக இருந்த பஸ்ஸில் அவசர அவரசமாகத் தொற்றிக் கொண்டார்கள். ஏறிய பிறகு, அது எக்ஸ்பிரஸ் பஸ் என்றும், நேரே பஸ் ஸ்டாண்டிற்கு தான் செல்லும், ரயில்வே ஸ்டேஷனின் அருகே நிற்காது என்றும் தெரிந்தது.
அவனும் சக நிருபரும், டிரைவரிடம் பாதித் தெலுங்கிலும் பாதி தமிழிலும் பேசி, தங்களை ரயில் விபத்து பற்றி செய்தி சேகரிக்க வந்த நிருபர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அரை நிமிடம் நிறுத்தினால் போதும், ரயில்வே ஸ்டேஷன் அருகே இறங்கிக் கொள்கிறோம் என்றார்கள். ரொம்பவும் தயங்கிய டிரைவர் மனமிறங்கி பஸ்ஸை நிறுத்தினார்.
அப்போது நன்றாக இருட்டிவிட்டது-. வெகு தொலைவில் வெளிச்சம் தெரிந்தது. அதை நோக்கி ஒற்றையடிப் பாதையில் புதர்களுக்கு இடையே நடந்தபோது, கொஞ்சமாவது வெளிச்சம் வேண்டுமே என்று, சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள பார்த்தசாரதி, தீப்பெட்டியை எடுத்து, ஒவ்வொரு குச்சியாக பற்றவைத்தார். சில தீக்குச்சிகள் உடனே காற்றில் அணைந்தன. இருந்தாலும், கிடைத்த மின்மினி வெளிச்சத்தில் நடந்தார்கள். ஒருவழியாக தண்டவாளம் கண்ணில் தென்பட்டது. தண்டவாளத்தின் வழியாக நடந்து செல்வதில் ஒரு ஆபத்து இருந்தது. எதிரேயோ பின்னாலேயோ ரயில் வந்தால், ஒதுங்கிக்கொள்ள இடம் கிடையாது. நல்லவேளை எந்த ரயிலும் வரவில்லை.
விபத்து நடந்த இடத்தில் ஒரு போலீஸ் அதிகாரி தென்பட்டார். அவரிடம் தங்களைஅறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அவர் அப்போது சொன்னார், ‘‘ஹிண்டு பத்திரிகையா? உங்கள் புகைப்படக்காரர் இப்போதுதான் வந்து படமெடுத்துக் கொண்டு சென்றார்’’என்றார். அவனுக்கும், சக நிருபருக்கும் திருப்தி. ஏனென்றால் அடுத்த 3 மணி நேரத்திற்குள் புகைப்படக்காரர் சென்னை திரும்பினால் தான், பத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளிவரும்.
தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட பெட்டிகள், தாறுமாறாகக் கிடந்தது. கசக்கி எறியப்பட்ட காகிதங்களைப் போல நசுங்கிக் கிடந்தன சில பெட்டிகள். பல பயணிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தார்கள். எனினும், மீட்பு வேலை தொடர்ந்துநடந்து கொண்டிருந்தது. அவன் சென்ற சமயம், மீட்புக் குழு ஒரு கழிப்பறையின் கம்பிகளை வெல்டிங் முறையில் அறுத்து, கண்ணாடியை உடைத்து ஒரு பயணியைவெளியே இழுத்துக் கொண்டிருந்தது. மேற்கொண்டு காயம்பட்ட பயணிகள் பெட்டிகளில் எவரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, அவனும் சக நிருபரும் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றார்கள். அங்கே ரயில்வே மந்திரி மதுதண்டவதே நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கே ஹிண்டு பத்திரிகையின் பகுதி நேர நிருபரான ராவ் இருந்தார். மந்திரி சொன்ன தகவல்களைக் குறித்துக் கொண்ட அவனும், சக நிருபரும், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை பேட்டி கண்டார்கள், கூடுதல் தகவல்களுக்காக.
அடுத்து, உள்ளூர் பகுதி நேர நிருபரை அழைத்துக் கொண்டு காயம்பட்ட பயணிகள் சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள். அவர்களில் விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மீண்ட, பேசும் நிலையில் இருந்த சில பயணிகளைப் பேட்டி கண்டார்கள், அவற்றையெல்லாம் சுருக்கெழுத்து நோட்டில் குறித்துக் கொண்டார்கள்.
இதற்கிடையே இரவு மணி 10.30 ஆகிவிட்டது. உள்ளூர் நிருபர் சென்னை நிருபர்கள்இருவரையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் இரவு உணவுக்காக. மதியம் 1 மணிக்குசென்னையிலிருந்து புறப்பட்ட அவனும் சக நிருபரும், அப்போது தான், பசியையும், தாகத்தையும் உணர்ந்தார்கள். அதுவரை வேலையிலேயே இருந்தது மனம்.
அங்கேயே மூன்று நிருபர்களாக சேர்ந்து, யார் யார் எதை எழுவது என்று பிரித்துக்கொண்டு, செய்திகளை எழுதினார்கள். ஏற்கெனவே மனதில் வாக்கியங்களை வரித்துக்கொண்டதால், எளிதில் செய்தியை எழுத முடிந்தது. எல்லாவற்றையும் வேகமாக எழுதிமுடித்து இரவு 11 மணிக்கு சென்னை தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் செய்தியை டிக்டேட் செய்தார்கள்.
அப்போது சாரி புகைப்படங்களைக் கொடுத்துவிட்டார் என்று தெரிந்து கொண்டார்கள். நிம்மதி அடைந்த அவனும் சக நிருபரும், இரவோடு இரவாக சென்னைக்கு எப்படி திரும்புவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, கும்மிடிப்பூண்டியில் பழுதாகிநின்றிருந்த அலுவலக கார், பழுதை சரி செய்துகொண்டு, உள்ளூர் நிருபர் வீட்டிற்கு வந்துசேர்ந்தது.
இரவு 12 மணிக்கு மேல் புறப்பட்டு, அவர்கள் சென்னைக்கு அலுவலக காரில் சென்றார்கள். வழியில் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையின் புறநகர் ஒன்றில் காரை நிறுத்தி, பெட்டிக்கடைக்கு அப்போதுதான் வந்திருந்த ஹிண்டு செய்தித்தாளை வாங்கிப் பார்த்தார்கள். முதல் பக்கத்திலேயே புகைப்படத்துடன் இவர்கள் கொடுத்த செய்தி வெளியாகி இருந்தது.
கஷ்டப்பட்டு செய்தி சேகரித்த அவனுக்கும், சக நிருபருக்கும், பத்திரிகையில் வெளிவந்தசெய்தியை படித்துப் பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி (?) முதல் சுகப் பிரசவத்தை அனுபவித்தபெண்மணியின் மனநிலையை ஒத்திருந்தது.
Leave a comment
Upload