தொடர்கள்
சினிமா விமரிசனம்
தடுமாறுகிறதா தமிழ் சினிமா ...? - லைட் பாய்

2025000319284405.jpeg

2024-இல் 241 படங்கள் ரிலீஸ் ஆகின அதில் ஏழு சதவீதம் படங்கள் மட்டுமே முதலீடுடன் சேர்ந்து கொஞ்சம் லாபம் சம்பாதித்து. 93 சதவீத படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

100 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் திகோட், இந்தியன் 2 , வேட்டையன், கங்குவா ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டன. விஜய் நடித்த கோட் மட்டுமே லாபம் சம்பாதித்து தந்தது. கங்குவா 2000 கோடி வசூல் தரும் என்று நம்பினார்கள். ஆனால், அப்படி எந்த மாயாஜாலமும் நடக்கவில்லை .பல படங்கள் ரிலீசான சுவடேதெரியாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்டன. கேப்டன் மில்லர், அயலான், லால் சலாம், மெர்ரி கிறிஸ்மஸ் போன்ற படங்கள் எல்லாம் இதற்கு உதாரணம். தயாரிப்பாளருக்கு மொத்த பட்ஜெட்டில் கணிசமான தொகை கதாநாயகனுக்கு மட்டும் போய்விடுகிறது என்ற வருத்தம் இருக்கிறது. அந்த காலத்தில் முரளி நடித்த படங்களுக்கு மினிமம் கேரன்டி என்று சொல்வார்கள் பெரிய அளவு லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் ஆகாது என்று சொல்வார்கள். இப்போது அப்படியெல்லாம் இல்லை பெரிய நடிகர்கள் படங்கள் கூட லாபத்தை ஈட்டி தருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் திரைக்கதை பஞ்சம் இவை எல்லாவற்றையும் விட மக்கள் திரையரங்குக்கு வந்து சினிமா பார்க்கும் வழக்கம் மெல்ல குறைந்து வருகிறது. இதற்கு காரணம் அதிகரித்து வரும் சினிமா கட்டணம் என்று சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இவை எல்லாவற்றையும் விட யூடியூப் சேனல்கள் போகிற போக்கில் விமர்சனம் என்ற பெயரில் திரைப்படங்களை அது சரி இல்லை இது சரி இல்லை இந்த எதிர்மறை விமர்சனங்களும் படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தவிர கேபிள் டிவிகளில் ஆக்கிரமித்துள்ள தனியார் சேனல்கள் புதிய படங்களை திரைக்கு வந்து ஒரு வாரத்துக்குள் திருட்டு விசிடி மூலம் தங்கள் சேனல்களில் திரையிடுகிறார்கள். தங்கள் வீட்டு வரவேற்பு அறையிலேயே பெரிய டிவியில் எந்த செலவும் இல்லாமல் பொதுமக்கள் பார்க்கும்போது அவர்கள் ஏன் திரையரங்கிற்கு வந்து பணத்தை விரயம் செய்யப் போகிறார்கள் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இதைக் கட்டுப்படுத்த முடியாதா என்ற கேள்விக்கு அரசு கேபிள் நிறுவனம் மூலம் ஒளிபரப்பாகும் பல தனியார் சேனல்களில் தான் இப்படி திருட்டு விசிடி படங்கள் எல்லாம் ஒளிபரப்பாகின்றன. இதை அரசாங்கம் நினைத்தால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அப்படி செய்வதில்லையே என்று ஆதங்கப்படுகிறார்கள். அதனால் தான் சில படங்களை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல் சாட்டிலைட் உரிமை தந்து கணிசமான பணம் பார்த்தால் என்ன என்று யோசிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் என்றார் ஒரு விநியோகஸ்தர்.

20250003193000782.jpg

சினிமா தயாரிப்பதற்கான செலவு பெரும் பங்கு நடிகர்களுக்கான செலவுதான். பிரபலமாகும் காமெடி நடிகர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் அல்லது ஒரு கோடி என்ற அடிப்படையில் நாட்கணக்கில் கால்ஷீட் தர ஆரம்பித்திருக்கிறார்கள். படம் வியாபாரம் ஆக அவர்கள் தயவு தேவை என்பதால் தயாரிப்பாளர்கள் வேறு வழியின்றி சம்மதிக்கிறார்கள். அதே சமயம் பண விஷயத்தில் கறராக இருக்கும் நடிகர்கள் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை. ரஜினி விஜய், சூர்யா என்று சில நடிகர்கள் மட்டுமே பொறுப்புணர்வுடன் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வந்து விடுகிறார்கள் .அந்த காலத்தில் விஜயகாந்த் சின்ன தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க பணமே வாங்காமல் நடிப்பார் படம் நல்லபடி வியாபாரமாகட்டும் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று உற்சாகப்படுத்துவார். அதனால் அந்த காலத்தில் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருந்தது. இப்போது அந்த பெருந்தன்மை எந்த நடிகருக்கும் இல்லை என்று ஆதங்கப்படுகிறார் ஒரு தயாரிப்பாளர். திரையரங்குகளில் வெற்றி பெற்ற படங்களை மட்டும் தான் சாட்டிலைட் டிவி மற்றும் ஓ டி டி தளங்களில் வாங்குகிறார்கள். திரையரங்கிற்கு மக்கள் வராததால் பல சிறந்த படங்கள் இந்த தளங்களில் வெளியாகாமல் போகிறது. படங்களைப் பார்க்காமலேயே இந்த வியாபாரிகள் முடிவு செய்கிறார்கள் இதுவும் தவறான அணுகுமுறை என்கிறார்கள் பட தயாரிப்பாளர்கள். தெலுங்கு படமான புஷ்பா 1500 கோடி வசூலில் சாதனை செய்கிறது. ஆனால் தமிழ் சினிமாவுக்கு சென்றாண்டு ஆயிரம் கோடி நஷ்டம் இது தயாரிப்பாளர்களுக்கு தான் பாதிப்பை ஏற்படுகிறது. நடிகர்களுக்கும் நடிகைகளுக்குள் இது பற்றி எந்த கவலையும் இல்லை அவர்களைப் பொறுத்தவரை தங்களுக்கு பணம் வந்தால் போதும் என்ற நிலையில் தான் எல்லா பெரிய சிறிய நடிகர்கள் இருக்கிறார்கள். புஷ்பா படம் வெற்றிக்கு காரணம் பல நகரங்களில் படத்துக்கான பிரமோஷன் இதற்கு நடிகர்களின் ஒத்துழைப்பு அவசியம். தமிழ் சினிமாவில் பட ப்ரமோஷனுக்கு நடிகர்கள் நடிகைகள் வருவதும் இல்லை ஒத்துழைப்பு தருவதும் இல்லை படம் வியாபாரம் ஆகாமல் போவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இது தயாரிப்பாளர்கள் பலமுறை எடுத்துச் சொல்லியும் நடிகர்கள் கண்டு கொள்வதில்லை. நயன்தாரா போன்ற நடிகைகள் படத்துக்கான கூலியை அதிகரித்துக் கொண்டாலும் பட ப்ரமோஷனுக்கு வருவதில்லை. இது நடிகர் அஜித்துக்கும் பொருந்தும். படத்தின் வெற்றி என்பது எல்லோருடைய கூட்டு முயற்சி என்பதை நடிகர்கள் புரிந்து கொள்வதில்லை. தரமான முறையில் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தந்தால் மட்டுமே தமிழ் சினிமா எழுந்து நிற்கும் இதுதான் உண்மை.