தலைவன் தலைவியின் காதல் ஊராரின் கவனத்துக்கு வந்து விட்டது. இருவரும் வாழும் களவு வாழ்க்கை அவர்கள் வாயில் அவலாக அரைபட்டது,
உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியாதே.
தலைவனை மக்கள் பழித்துப் பேச, அந்த அலரில் தலைவி துயரம் கொண்டாள்.
"என் காதலனைப் பற்றி இல்லாததை பேசுகிறார்களே" என்று தோழியிடம் கண்ணீர் சிந்தி அழுதாள்.
அவளைத் தேற்ற தோழி, "இந்த ஊருக்கு உன் தலைவனைப் பற்றி என்ன தெரியும்.முன்பொரு நாள் இங்கு நுணங்கைக் கூத்து ஆடிய பின்பே அவன் யார் என்று அறிந்தார்கள். அதற்கு முன் அவனைப் பற்றி தெரியாதே. அவன் உனக்கு மாலை சூடிய பின்பே அவனை அறிந்தார்கள் . எனவே நீ இவர்கள் பேசுவது குறித்துக் கலங்காதே " என்றாள்
நற்றிணை கூறும் நெய்தல் நிலப் பாடல் இந்த தலைவன் தலைவியையும், அவர்களுக்குத் துணை நிற்கும் தோழியையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது .
தோழி தலைவியிடம் கூறுகிறாள் :
"உவர் நிலத்தில் விளைந்த உப்பு குன்று போல குவித்துள்ளது. அந்த உப்புக் குவியலை அள்ளி எடுத்துச் சென்று ,உப்பு விற்கும் உமணர்கள் மலை நாட்டு நகரங்களில் விலை கூறி விற்பார்கள்.
ஒரே இடத்தில் இருந்து வாழும் நிலை இல்லாத வாழ்க்கையைக் கொண்டவர்கள் உப்பு வணிகர் கூட்டம். அவர் தம் உப்பு வண்டியின் அச்சு முறிந்து போனால் அதனை வீசியெறிந்து விட்டு தம் பயணத்தைக் தொடர்வார்.
அவ்வாறு அவர்கள் எறிந்துச் செல்லும் வண்டியின் கீழே வெண்ணிற நாரைகள் முட்டையிடும்.
அந்த ஈர மண்ணின் தலைவன், உன் காதலன்.
அவன் நெய்தல் மலர்களை இலையுடன் தொடுத்து மாலையாக்கி உனக்கு அணிவித்தான்.
நுண்ணிய வேலைப்பாடுள்ள நகைகளை அணிந்த மகளிர் விழாக்காலத்தில், அலைக்கடலின் முழக்கத்தின் இசையோடு நடனமாடுவர். அவ்ர்களோடு சேர்ந்து தலைவனும் ஆடினான்.
இப்போது தூற்றும் ஊர், இதற்கு முன் அவனைப் பற்றி அறிந்ததில்லையே. நீ கவலையை விட்டு விடு " என்றாள்
உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை
மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கை
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும்
தண்ணம் துறைவன் முன் நாள் நம்மொடு
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ
கண் அறிவுடைமை அல்லது நுண் வினை
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
முழங்கு திரை இன் சீர் தூங்கும்
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே
(நற்றிணை 138)
புலவர் அம்மூவனார் எழுதிய இப்பாடலில் வண்டி கட்டிக் கொண்டு ஊர்தோறும் உப்பு விற்ற உமணர் வாழ்க்கையும், பயனின்றி வீசி எறிந்த அவ்வண்டிகளின் கீழ் நாரை முட்டையிட்டுச் செல்லும் அழகியலும் தொட்டுக் காட்டி உள்ளார்.
இன்னும் ஒரு அழகான பாடலுடன் அடுத்த வாரம் சந்திப்போம்
தொடரும்
Leave a comment
Upload