உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கிறிஸ்துமஸ் நாள் என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் கிறிஸ்துமஸ் மரம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கிறிஸ்தவர்களின் வீடுகளில் இத்திருநாளுக்கு முந்தைய நாட்களில் இம்மரம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருப்பதைக் காணலாம். மரத்தின் உச்சியில் ஒரு முக்கோணம் அல்லது நட்சத்திர வடிவில் ஒன்றைக் காணலாம். மேலும் கிறிஸ்துமஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா, குடில், மரங்கள்தான். கிறிஸ்துமஸ் கொண்டாடுவோரின் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கப்பட்டு, அதில் வண்ண விளக்குகளையும் பரிசுப் பொருள்களையும் கட்டி தொங்கவிடுவது வழக்கம். கிறிஸ்துமஸ் திருநாளுக்கு இந்த மரத்தைப் பயன்படுத்தியதால் இந்த மரம் தற்போது 'கிறிஸ்துமஸ் மரம்' என்றே அழைக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மரம் எதற்காக வைக்கப்படுகிறது?
'பெர்' மரங்களை கிறிஸ்துமஸுடன் இணைத்துக் கொண்டாடிய புகழ் ஜெர்மானியரையே சாரும். ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போனிபேஸ் என்பவர், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்ததை எதிர்த்தும் வந்தார். இதனால் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்துவந்த அவர், மக்கள் ஓக் மரம் ஒன்றை வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடுங்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டினார். அந்த மரமானது மீண்டும் துளிர்த்து விடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார். ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து சில தினங்களிலேயே ஓக் மரக்கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டுக் காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக எழுந்து நின்றதைக் கண்ட மக்கள், இதனை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாகப் பார்க்கத் தொடங்கினர். மீண்டும் போனிபேஸ் அவ்வழியே சென்றபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழங்காலிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். இதனால் பத்தாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ வழிபாட்டில் ஓக் மரம் ஓர் ‘உயிர்ப்பின் அடையாளமாக’ இடம்பெறத் தொடங்கியது. அன்று முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய அங்கமாக மாறி விட்டதாகவும், இதனால் ஜெர்மனியே கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது.
ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறாம் ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங், ஒரு கிறிஸ்துமஸ் காலப் பனி நாளில் நடந்து செல்கையில், சிறு பச்சை மரங்களின் மீது, படர்ந்திருந்த பனி, வெளிச்சத்தில் பிரமிக்க வைக்கும் அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். உடனே ஒரு ஓக் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து பிறப்பு விழாவில் அவர் பயன்படுத்தினார். அன்றிலிருந்து கிறிஸ்துமஸ் விழாக்களில் கிறிஸ்துமஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகளின் சிறப்பம்சமாக அம்மரத்தின் முக்கோண வடிவமானது தந்தை, மகன், தூய ஆவி எனும் இயேசுவின் மூன்று பரிமாணங்களைக் குறிக்கிறது. இயேசு பிறந்த நாளை, இம்மரத்தை அலங்கரித்துக் கொண்டாடுவது சிறப்பு.
கிறிஸ்துமஸ் மரம் வளர்ப்பு:
வட அமெரிக்காவில் வருடந்தோறும் சுமார் மூன்று கோடியே முப்பது இலட்சம் கிறிஸ்துமஸ் மரங்கள் விற்கப்படுகின்றன. மேலும் மூன்று இலட்சத்து முப்பதாயிரம் மரங்கள் இணையம் வழி விற்கப்படுகின்றன. இந்த கிறிஸ்துமஸ் மர வளர்ப்பில் ஓரகன், வட கொரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன், வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் போன்ற மாநிலங்கள் முன்னணி மாநிலங்களாக உள்ளன. அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும், கனடாவிலும் கிறிஸ்துமஸ் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சுமார் ஒரு இலட்சம் பணியாளர்கள் கிறிஸ்துமஸ் மரம் வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகின்றனர்.
மாறிவரும் கிறிஸ்துமஸ் மரம்:
கிறிஸ்துமஸ் மரம் வீட்டிலும், தேவாலயங்களிலும் வைக்கும் போது அவற்றை அலங்கரிக்க அனைவரும் ஒன்று கூடுவதால் இது ஒற்றுமையை விளக்கும் ஒரு செயலாகவும் கருதப்படுகிறது. இயேசு கிறிஸ்து அவதரித்து விட்டார் என உலக மக்கள் அனைவருக்கும் அறிவிக்கும் அடையாளமாகவும், உலகின் இருளை நீக்க வந்தவர் இயேசு கிறிஸ்து என்பதை நினைவுபடுத்தும் விதமாக, கடந்த காலங்களில், மக்கள் கிறிஸ்துமஸ் மரங்களை ஆப்பிள் மற்றும் ஜிஞ்சர்பிரெட் போன்ற உணவுகளால் அலங்கரித்துள்ளனர். காலப்போக்கில் பழக்கவழக்கங்கள் மாறியதால், மின்சார கிறிஸ்துமஸ் விளக்குகள், மிட்டாய்கள், டின்சல்கள், பாபிள்கள், பலவிதமான வண்ணத் தாள்கள், தங்கத் தாள்கள், வெள்ளி கம்பிகள், சாண்டா கிளாஸ் பொம்மைகளின் வடிவத்தில் சிறிய பொம்மைகள், போலி ஸ்னோஃப்ளேக்ஸ் மற்றும் கிறிஸ்துமஸ் மணி போன்றவற்றால் தற்போது அலங்கரிக்கப்படுகிறது.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!
Leave a comment
Upload