கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே நமக்கு , விதவிதமான கேக் மற்றும் இனிப்பு வகைகள்தான் நினைவுக்கு வரும். இயேசு பிறந்த நாளை மகிழ்வோடு கொண்டாடும் கிறிஸ்துவ மக்கள், அந்நாளில் தங்களுக்குத் தெரிந்த இனிப்பு மற்றும் கேக்குகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவதோடு உறவினர்களுக்குக் கொடுத்து மகிழ்கின்றனர். இதில், நமது சுவை உணர்வுகளைத் தூண்டும் ஒருசில ஸ்பெஷல் உணவுகளும் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. அவற்றை பற்றி நாம் அறிந்து,, செய்து சாப்பிட்டு மகிழலாமா?
என்ஜிஏ அடோய்பா தோங்பா: வடகிழக்கு இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மணிப்பூர் மாநில மக்கள் கோழிக்கறியைத் தவிர, மீன்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு ‘என்ஜிஏ அடோய்பா தோங்பா’வை சமைத்து சாப்பிட்டு மகிழ்கின்றனர். ஆற்றுமீன்களுடன் காய்கறிகள், மசாலாக்கள் சேரும்போது, நமக்கு கூடுதல் சுவை தரும் உணவுகளில் ஒன்றாக மாறியது.
செய்முறை: முதலில் முள் இல்லாமல் மீன்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதில் மிளகு, மசால், மிளகாய்த்தூள் சேர்த்து பிசையுங்கள். ஒரு பாத்திரத்தில் மிளகாய், மஞ்சள், சீரகத்தூள் போன்றவற்றைக் கலக்கி கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், பட்டை, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, அதில் சிறு துண்டுகளாக நறுக்கிய மீன்களை போட்டு வதக்க வேண்டும். 5 நிமிடத்துக்குப் பின் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையைச் சேர்க்கலாம்.
இதைத் தொடர்ந்து உருளைக்கிழங்கு, பட்டாணி போன்ற காய்கறிகளைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்தால் போதும். சுவையான ‘என்ஜிஏ அடோய்பா தோங்பா’ சாப்பிடுவதற்கு ரெடி! இது, வழக்கமான அசைவ உணவுகள் போலின்றி, கிறிஸ்துமஸ் நாளில் தனி சுவையுடன் ஸ்பெஷலாக அமைந்திருக்கும்.
குல்குல் இனிப்பு பலகாரம்: கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில், ஒவ்வொருவர் வீடுகளில் செய்யப்படும் பலகார இனிப்புகளில் ‘குல்குல்’லும் ஒன்று. முட்டை மற்றும் தேங்காய் பால் சேர்த்து குல்குல் செய்யும்போது, இதன் சுவை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்: மைதா, நெய், சீனி, ரவை, பால் அல்லது தண்ணீர், பேக்கிங் பவுடர். செய்முறை: மேற்கண்ட அனைத்து பொருட்களையும் தண்ணீர் அல்லது பால் ஊற்றி, வடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் உருண்டையாக பிடித்து, பொரித்து எடுத்தால்… ‘குல்குல்’ சாப்பிட ரெடி!
டக் மொய்லி: கிறிஸ்தவ மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாக ‘டக் மொய்லி’ உள்ளது. அசைவ உணவு பிரியர்களுக்கு தனித்துவ சுவை வழங்கும் ‘டிஷ்’களில் இதுவும் ஒன்று.
செய்முறை: முதலில் கடாயில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் துண்டுகளாக நறுக்கிய வாத்து கறிகளை உள்ளே போட்டு, மிளகாய் தூளுடன் சேர்த்து கிளற வேண்டும். வாத்து கறி வெந்ததும், அதனுடன் சுவைக்கேற்ப உப்பு, மசாலா பொருட்களைச் சேர்த்து உணவுடன் பரிமாறலாம்.
கேரளாவின் கரிமீன் கோலி: கேரள மாநிலத்தின் மிகப் பிரபல உணவு வகைகளில் ‘கரிமீன் கோலி’யும் ஒன்று. தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் இது கிரீம் சுவையுடன் இருக்கும். இதில் மசாலா கலந்து செய்யும் மீன் குழம்புக்கு சுவையே அலாதி. இதை ஆப்பம் போன்றவற்றுக்கு ‘சைடுடிஷ்’ ஆகவும் பரிமாறலாம்.
கோவாவின் ரோஸ் குக்கீ: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு, கேரளா, கோவா மாநிலங்களில் செய்யப்படும் பிரபல சிற்றுண்டிகளில் ஒன்று ‘ரோஸ் குக்கீ’ எனும் அச்சு முறுக்கு. இனிப்பு கலந்த சுவையுடன் மொறுமொறுப்பாக இருப்பதால் பிரபல பலகாரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
"இனிப்பான" கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
Leave a comment
Upload